Published:Updated:

ராஜகண்ணப்பன் - மிரட்டலா... கண்துடைப்பா?

ஸ்டாலின், ராஜ கண்ணப்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், ராஜ கண்ணப்பன்

போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவியேற்றது முதல், ராஜகண்ணப்பன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம்தான் இருக்கின்றன.

ராஜகண்ணப்பன் - மிரட்டலா... கண்துடைப்பா?

போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவியேற்றது முதல், ராஜகண்ணப்பன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம்தான் இருக்கின்றன.

Published:Updated:
ஸ்டாலின், ராஜ கண்ணப்பன்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின், ராஜ கண்ணப்பன்

அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த போக்குவரத்துத்துறையைப் பிடுங்கி, அமைச்சர் சிவசங்கரிடம் ஒப்படைத்து, சிவசங்கரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையை ராஜகண்ணப்பனுக்குக் கையளித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த இலாகா மாற்ற நடவடிக்கையைச் சுற்றி அனலடிக்கின்றன கேள்விகளும் சர்ச்சைகளும். ‘இது, முதல்வரின் துபாய் பயணம் பற்றிய விமர்சனங்களை மடை மாற்ற செய்யப்பட்ட ஸ்ட்ராட்டஜி...’, ‘அமைச்சரவை மாற்றம் நெருங்குகிறது, அதற்கு முன்னோட்டமாக எல்லா அமைச்சர்களுக்கும் சொல்லும் செய்தியாக எடுக்கப்பட்டதுதான் இந்த நடவடிக்கை...’, ‘ராஜகண்ணப்பன் மீது புகாருக்கு மேல் புகார் குவிந்துவந்த நிலையில், உச்சகட்டமாக சாதி குறித்த அவரின் சர்ச்சைப் பேச்சு தலைமையை ரொம்பவே சூடாகிவிட்டது. அதனால்தான் இந்த நடவடிக்கை...’ என்பது போன்ற பல காரணங்களைச் சொல்கிறார்கள். ஆனால், ராஜகண்ணப்பனிடமிருந்து அவரது துறை பறிக்கப்பட்டதன் உண்மையான பின்னணி என்ன என்ற விசாரணையில் இறங்கினோம்...

துபாய்க்குப் பறந்த செய்தி!

“முதல்வர் துபாயில் இருந்தபோதே, ‘ராஜகண்ணப்பன், பி.டி.ஓ ஒருவரைச் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியிருக்கிறார்’ என்கிற தகவலை உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார். அப்போதே முதல்வர் முகம் கடுகடுப்பாகியிருக்கிறது. ராஜகண்ணப்பனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவது அல்லது பொறுப்பை மாற்றுவது என்ற முடிவை எடுத்துவிட்டார். அதனால்தான், தமிழகத்தில் வந்து இறங்கிய அன்று மாலையே அறிவிப்பு வெளியானது” என்றார்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.

ராஜகண்ணப்பன் - மிரட்டலா... கண்துடைப்பா?

பி.டி.ஓ-விவகாரத்தில் நடந்தது என்ன?

“மார்ச் 27, காலை 9:30 மணிக்கு, சிவகங்கையில் உள்ள அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் இல்லத்துக்கு, நானும் எனது நண்பருமான பி.டி.ஓ அன்புக்கண்ணனும் சென்றோம். அமைச்சரின் இல்லத்துக்குச் சென்றவுடன், அமைச்சருக்கு நான் வணக்கம் தெரிவித்தேன். பதிலுக்கு அவர் வணக்கம் கூறவில்லை. என்னைப் பார்த்தவுடன் அமைச்சர், ‘ஏன்யா நீ ஒரு எஸ்.சி பி.டி.ஓ., சேர்மேன் சொல்றதை மட்டும்தான் நீ கேட்பியா... மத்தவங்க சொன்னா நீ கேட்க மாட்டியா? யார் போன் பண்ணினாலும் எடுக்க மாட்ட... உன்னை உடனே இந்த மாவட்டத்தைவிட்டு வேறு மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் செஞ்சுடுவேன்’ என்று சொன்னார். இடையே, பலமுறை என்னை எஸ்.சி பிரிவைச் சேர்ந்த பி.டி.ஓ என்பதைக் குறிப்பிட்டுக் குறிப்பிட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் ஒருமையில் பேசினார். உடனடியாக என்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரின் உதவியாளர் கண்ணனிடம் கூறினார். மேலும், கடுமையாக என்னையும், என்னுடன் வந்திருந்த மற்றொரு பி.டி.ஓ-வையும் ‘வெளியே போங்கய்யா’ என்று நாயை நடத்துவதைவிடக் கேவலமாக நடத்தினார். இந்த விஷயத்தை நான் வெளியில் பகிரங்கமாகச் சொல்வதற்குக் காரணம், என்னைப்போல் யாரும் இனி அவமானப் படுத்தப்படக் கூடாது என்பதற்காகவே” என்று பேசிய பி.டி.ஓ ராஜேந்திரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகாரளித்ததோடு, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வேண்டுமென மனு அளித்திருக்கிறார்.

ராஜேந்திரனின் புகார் தொடர்பாக, அமைச்சர் இலாகா மாற்றப்பட்டது தவிர்த்து பெரிய அளவில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையில், “பி.டி.ஓ விஷயம் ஒரு சாக்குதான். ராஜகண்ணப்பன் மீது ஏற்கெனவே தலைமை ஏக கடுப்பில்தான் இருந்தது” என்று பீடிகை போட்டார்கள் தி.மு.க மூத்த நிர்வாகிகள் சிலர். அதற்கான காரணங்களையும் அடுக்கினார்கள்.

அடுக்கடுக்காகப் புகார்ப் பட்டியல்!

“சாதியரீதியிலான குற்றச்சாட்டு அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது எழுவது புதிதில்லை. கடுமையான சொற்களால் பேசுவது, சட்டெனக் கைநீட்டுவது போன்ற சம்பவங்களும் புகார்களும் நிறைய உண்டு. உதவியாளர், பாதுகாப்புப் பணியிலிருந்த காவல்துறை அதிகாரி எனப் பலருக்கு இப்படி நேர்ந்திருக்கிறது.

2021 ஜூலை 31-ம் தேதி, ராஜகண்ணப்பனின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டுக்கு நேரில் சென்றார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அப்போது ராஜகண்ணப்பன் சோபாவில் சாய்ந்தபடி அமர்ந்திருக்க, பழைய உடைந்த பிளாஸ்டிக் சேரில் திருமாவளவன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பானது; விமர்சனத்துக்குள்ளானது. விரும்பியே திருமாவளவன் பிளாஸ்டிக் சேரில் அமர்ந்ததாகவும், இதைப் பெரும் விவாதமாக்கத் தேவையில்லை எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சொன்னதையடுத்து, அந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவியேற்றது முதல், ராஜகண்ணப்பன் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்தவண்ணம்தான் இருக்கின்றன. முதலாவதாக, போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்குப் பொங்கல் பரிசாகத் தனியார் உணவகம் ஒன்றிலிருந்து இனிப்பு வாங்குவதற்குப் போடப்பட்ட டெண்டர் சர்ச்சையானது. பிறகு, அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டு ஆவின் நிறுவனத்துக்கு மாற்றி வழங்கப்பட்டது.

ராஜகண்ணப்பன் - மிரட்டலா... கண்துடைப்பா?

அடுத்து, போக்குவரத்துத்துறையில் நடக்கும் டிரான்ஸ்ஃபர்கள், ஃபேன்ஸி நம்பர் விற்பனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சர்ச்சைகள் எழுந்தன. இதையொட்டி, மார்ச் 14-ம் தேதி அப்போது ராஜகண்ணப்பனின் கட்டுப்பாட்டி லிருந்த சென்னை துணைப் போக்குவரத்து ஆணையர் நடராஜன் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிட்டது. அங்கிருந்து 35 லட்ச ரூபாய் பறிமுதலும் செய்யப்பட்டது. இந்த ரெய்டு விவகாரத்தில், நடராஜன் அளித்திருக்கும் வாக்குமூலமும் சர்ச்சைக்குரியது தான். இந்த விவகாரம் அமலாக்கத்துறையின் விசாரணை வரை சென்றிருக்கிறது.

பேருந்துகளில் சிசிடிவி பொருத்துவதற்கான டெண்டர், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்கு கிரீஸ் மற்றும் ஆயில் வாங்குவதற்காகப் போடப்பட்ட டெண்டர் என இவர் போட்ட அத்தனை டெண்டர்களும் சர்ச்சைக்குள்ளாகின. போக்குவரத்துத்துறைக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், அ.தி.மு.க., பா.ஜ.க உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் என்ற புகார் எழுந்ததையடுத்து, அந்த நியமனங்களும் ரத்துசெய்யப்பட்டன. சமீபத்தில் ‘அரசுப் பேருந்துகள் அனைத்தும் சைவ உணவகங்களில்தான் நின்று செல்ல வேண்டும்’ எனப் போக்குவரத்துத்துறை சார்ந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, ‘அசைவ உணவகங்களிலும் பேருந்துகள் நின்று செல்லும்’ என உடனடியாகத் திருத்தம் செய்யப்பட்டது. சைவ உணவகத்துக்கு ஆதரவான அறிக்கை, பொங்கல் பரிசு டெண்டர் கணக்கைச் சரிசெய்வதற்காகப் போடப்பட்டது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இவை தவிர, போக்குவரத்துத்துறைக்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கு முன்பாகவே, தனக்கு ஆதாயம் எதிர்பார்க்கிறார் என்ற புகாரும் எழுந்தது. இது மட்டுமின்றி, தி.மு.க போக்குவரத்துத் தொழிற்சங்கத்துக்கும் அமைச்சருக்கும் ஒத்துவரவேயில்லை. போக்குவரத்துத்துறையை அவருக்குக் கொடுத்தபோதே ‘ஏற்கெனவே பல கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் துறையை என் தலையில் கட்டிவிட்டார்கள்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பினார் ராஜகண்ணப்பன். போக்குவரத்துத்துறை உள்ளபடியே நஷ்டத்தில் இயங்குகிறது என்றாலும், டிரான்ஸ்ஃபர், டெண்டர் விவகாரங்களில் மிகப்பெரிய தொகை இந்தத் துறையில் உலா வந்ததும் உண்மை. அப்படியான ‘கணக்கு’ விஷயங்களில் ஆரம்பத்தில் சரியாக நடந்துகொண்டவர், போகப் போக கண்ணாமூச்சி ஆட ஆரம்பித்திருக்கிறார். இந்த விவகாரத்திலும் தலைமைக்கு இவர்மீது கோபம் இருந்துவந்தது.

நிழல் அமைச்சர்... மகனால் நடந்த மல்லுக்கட்டு!

மற்றொருபுறம், அமைச்சராக கண்ணப்பன் பொறுப்பேற்றது முதலே, நிழல் அமைச்சராக அவர் மகன் திலீப்குமாரே செயல்பட்டுவந்தார். டிரான்ஸ்ஃபர் முதல் டெண்டர் வரை அமைச்சரின் மகனைப் பார்த்தால்தான் முடியும் என்கிற நிலை துறைக்குள் இருந்தது. குறிப்பாக, திலீப் இதற்காக அம்பத்தூரில் தனியே ஒரு அலுவலகத்தையே நடத்திவந்தார். இந்தப் புகார் முதல்வர் வரை சென்றது. ராஜகண்ணப்பனே தன் மகனிடம் இதைச் சுட்டிக்காட்டி அடக்கி வாசிக்கச் சொல்லியிருக்கிறார். இந்த விவகாரத்தின்போது, ‘அமைச்சர் பதவியை நமக்குச் சும்மா ஒண்ணும் கொடுக்கலையே?’ என்று திலீப்குமார் பேசிய விஷயம் தலைமையின் காதுக்குச் சென்றிருக்கிறது. இப்படி, புகாருக்கு மேல் புகார் குவிந்துகொண்டிருக்க, பி.டி.ஓ விவகாரமும் வெடித்தது. ஆனாலும், துபாய் சென்று திரும்பிய ஸ்டாலினை வரவேற்க ராஜகண்ணப்பன் வரவில்லை. இவரின் தொடர்ச்சியான இந்த ஈகோ மனநிலைதான் தலைமையை ரொம்பவே கடுப்பாக்கிவிட்டது. இந்தப் பின்னணியில்தான் அவரிடமிருந்து துறை பறிக்கப்பட்டது” என்றார்கள் விரிவாக.

ராஜகண்ணப்பன் - மிரட்டலா... கண்துடைப்பா?

“ஸ்டாலினுக்கு ராஜகண்ணப்பனை டீல் செய்யத் தெரியவில்லை!”

தி.மு.க சீனியர் அமைச்சர் ஒருவரிடம் பேசினோம். “2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், இளையான்குடி தொகுதியில் தி.மு.க சார்பில் நின்று வெற்றிபெற்றார் ராஜகண்ணப்பன். இவரை நன்கு அறிந்திருந்ததாலேயே அப்போது இவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் பெரிய கருப்பனுக்கு இடம் கொடுத்தார் கலைஞர். இதனால் எழுந்த அதிருப்தியில், தி.மு.க-விலிருந்து விலகி 2009-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் சேர்ந்தார் ராஜகண்ணப்பன். இது நடக்கும் என்பதை கலைஞர் அறிந்திருந்ததால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவர். ஆனால், ராஜகண்ணப்பனை ஸ்டாலின் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. உடனடியாக முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, இப்போது அதன் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார். அவரின் தன்னிச்சையான செயல்பாடுகளை ஸ்டாலினால் டீல் செய்ய முடியவில்லை. இப்போதும் அவரிடம் வேறு துறையைத்தான் கொடுத்திருக்கிறார்களே தவிர, அமைச்சரவையிலிருந்து நீக்க முடியவில்லையே? இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கைதான்” என்றார்.

இந்தக் கருத்தை மறுக்கும் மற்றோர் அமைச்சர், “முதல்வர் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார். தன்னுடைய அமைச்சரவையில் இருப்பவர்கள் தன் கட்டுப்பாட்டை மீறிச் சென்றால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கொஞ்சம்கூடத் தயங்க மாட்டார் என்பதை ராஜகண்ணப்பன் மீது எடுத்த நடவடிக்கை மூலம் உணர்த்தியிருக்கிறார். இது அவருக்கு மட்டுமல்ல, அனைத்து அமைச்சர்களுக்குமான மிரட்டல். விரைவில் நடக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின்போது ராஜகண்ணப்பனிடமிருக்கும் அதிகாரங்கள் பறிக்கப்படும் பாருங்கள்” என்றார்.

புலம்பும் அமைச்சர் தரப்பு!

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்குத் துறைமாற்றம் குறித்த அறிவிப்பு வந்தவுடன், “என்னிடம் ஒரு வார்த்தை விளக்கம் கேட்டிருக்கலாம். அமைச்சராக இருந்துகொண்டு ஓர் அதிகாரியை நான் எப்படிச் சாதியைச் சொல்லிப் பேசுவேன்?” என நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார். முதல்வர், டெல்லி பயணம் முடித்துத் திரும்பிய பிறகு நேரடியாக அவரைச் சந்தித்து விளக்கம் கொடுக்க முடிவெடுத்திருக்கிறாராம் அமைச்சர். குறிப்பாக, கட்சிக்குள் தனக்கு எதிராக நடந்த உள்ளடி வேலைகளை முதல்வரிடம் சொல்லவிருக்கிறாராம்.

இதுதான் சமூகநீதி காக்கும் முதல்வரின் நடவடிக்கையா?

ராஜகண்ணப்பனின் துறை மாற்றப் பட்டதற்கான காரணங்கள், பின்னணிகள் பலவாறாகச் சொல்லப்பட்டாலும், ஓர் அரசு அதிகாரியை, சாதிப் பெயரைச் சொல்லி ஒருமையில் பேசியது மாபெரும் குற்றம். அமைச்சர் என்பவர் அரசைப் பிரதிபலிப்பவர். பாதிக்கப்பட்டவர், எழுத்துபூர்வமாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்ததற்கான நடவடிக்கைதான் இலாகா மாற்றம் என்றால், ‘அவ்வளவுதானா சமூகநீதி காக்கும் முதல்வரின் நடவடிக்கை?’ என்றே கேட்கத் தோன்றுகிறது. “இலாகா மாற்றமெல்லாம் ஒரு தண்டனையா? இந்நேரம், எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புப் பிரிவில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து டி.எஸ்.பி தலைமையில் விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை... எது அவரைத் தடுக்கிறது... முதல்வர் ஏன் தயங்குகிறார்?” என எதிர்க்கட்சிகள் அல்ல... கூட்டணிக் கட்சியினரே கேட்கிறார்கள்!