Election bannerElection banner
Published:Updated:

`கட்சி கட்டமைப்பு’ வலுவாக இல்லை... ஆனாலும் டஃப் கொடுத்த எல்.முருகன்! - தாராபுரம் நிலவரம்

எல்.முருகன்
எல்.முருகன்

திமுக சார்பில் கயல்விழி, மக்கள் நீதி மய்யத்தின் சார்லி, அமமுக-வின் கலாராணி, நாம் தமிழர் கட்சியின் ரஞ்சிதா, சுயேடச்சைகள் 4 பேர் என மொத்தம் 9 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும், திமுக - பாஜக இடையேதான் நேரடிப் போட்டி காணப்பட்டது.

'இப்போ இல்லைன்னா எப்பவுமே இல்லை' என்றரீதியில் தமிழக சட்டசபைக்குள் எப்படியாவது இந்த முறை தங்களது கட்சி உறுப்பினர்களில் ஒரு சிலரையாவது அனுப்பிவைத்துவிட வேண்டும் என்ற அஜெண்டாவுடன் களமிறங்கிய பாஜக-வுக்கு, அதிமுக ஒதுக்கிய 20 தொகுதிகளில் ஒன்று திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் (தனி) தொகுதி. 1951-ம் ஆண்டிலிருந்து 1962-ம் ஆண்டு வரை இந்தத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை ஒரு முறையும், காங்கிரஸ் கட்சி இரண்டு முறையும் வெற்றிபெற்ற நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தலா ஐந்து முறையும், பாமக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட வி.எஸ் காளிமுத்து 83,538 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.பொன்னுசாமி 73,521 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்
தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

இந்த முறை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் களமிறங்கியதால், தமிழக அளவில் கவனம் ஈர்த்துள்ளது தாராபுரம் தொகுதி. முருகனுக்குத் தேர்தல் களம் புதிதல்ல. கடந்த 2006-ம் ஆண்டில் சங்ககிரி தொகுதி, 2011-ல் ராசிபுரம் தொகுதி, அதே ஆண்டு நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத்தேர்தல் என மூன்று முறை போட்டியிட்ட போதிலும் தோல்விதான் கிடைத்தது. ஆனால் இந்த முறை நிலைமை வேறு. தமிழக பாஜக தலைவர் என்ற அறிமுகம், பலம் பொருந்திய கூட்டணிக் கட்சியான அதிமுக-வின் ஆதரவுடன் களமிறங்கியிருக்கிறார். திமுக சார்பில் கயல்விழி, மக்கள் நீதி மய்யத்தின் சார்லி, அமமுக-வின் கலாராணி, நாம் தமிழர் கட்சியின் ரஞ்சிதா, சுயேச்சைகள் நான்கு பேர் என மொத்தம் ஒன்பது பேர் களத்தில் இருந்தனர். இருப்பினும், திமுக - பாஜக இடையேதான் நேரடிப் போட்டி காணப்பட்டது.

தாராபுரம் தொகுதியில் பாஜக-வுக்கென கட்சிக் கட்டமைப்பு வலுவாக இல்லாத நிலையில், அதிமுக-வின் வாக்குவங்கியை முருகன் பெரிதும் நம்பியிருந்தார். ஆனால், தேர்தல் பிரசாரத்தில் அதிமுக-வினரின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பாஜக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. திமுக வேட்பாளர் கயல்விழி புதுமுகம் என்றாலும், அந்தக் கட்சிக்கே உண்டான வாக்குவங்கி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பலமும் இந்தத் தேர்தலில் முருகனுக்குப் பெரும் சவால் அளிப்பதாக இருந்தன.

கள நிலவரம் இப்படியிருக்கையில் காலை வாக்கு எண்ணிக்கையில் பலரும் எதிர்பார்க்காதவிதமாக முருகன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். தொடர்ந்து பல சுற்றுகள் கடந்தபோதும் முருகன் முன்னிலையிலேயே இருந்தார். பா.ஜ.க சார்பாக அதன் தலைவர் சட்டமன்றம் செல்லவாரா என ஆதரவாளர்கள் எதிர்பார்த்தபோது, அடுத்தடுத்த சுற்றுகள் முருகனுக்குச் சாதகமாக அமையவில்லை.

முருகன்
முருகன்

வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக-வின் கயல்விழி செல்வராஜைவிட 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு