Published:Updated:

``திமுக-வைவிட மொழிமீது பற்றுள்ளவர்கள் பாஜக-வினர்” - சொல்கிறார் எல்.முருகன்

எல்.முருகன்

“திராவிட மாடல் என்பதே கிடையாது. தமிழ்நாடு ஆன்மிக மாடல், ஆன்மிக பூமி, தெய்விக பூமி” என்கிறார் எல்.முருகன்

``திமுக-வைவிட மொழிமீது பற்றுள்ளவர்கள் பாஜக-வினர்” - சொல்கிறார் எல்.முருகன்

“திராவிட மாடல் என்பதே கிடையாது. தமிழ்நாடு ஆன்மிக மாடல், ஆன்மிக பூமி, தெய்விக பூமி” என்கிறார் எல்.முருகன்

Published:Updated:
எல்.முருகன்

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோது பேச்சு, பேட்டி, அறிக்கை எனப் பரபரப்பாக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சரான பிறகு தமிழக அரசியலில் சைலன்ட் மோடானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேர்காணல் சம்பந்தமாக அவரின் சென்னை இல்லத்தில் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

``மத்திய இணை அமைச்சராக டெல்லி வாழ்க்கை எப்படிப்போகிறது..?”

``இந்தியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பிரதமரின் கனவு, லட்சியப் பாதையில் பயணிக்க எனக்கும் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். 2047-ம் ஆண்டு நம் நாட்டின் நூறாமாண்டு சுதந்திர தினத்தின்போது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பை வலுவாக்க வேண்டும். உலக நாடுகளுக்கு வழிகாட்டும் நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதற்காக இப்போதிலிருந்தே ஒரு தொலைநோக்குப் பார்வையில் செயல்திட்டம் தீட்டிவரும் பிரதமரின் அமைச்சரவையில் தமிழ்நாட்டின், தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருப்பதை சந்தோஷமாகப் பார்க்கிறேன். நான் இணை அமைச்சராக இருக்கும் மீன்வளத்துறையில், 2019-ல் தான் மீனவர்களுக்கு என்று தனி நல அமைச்சகமே கொண்டுவரப்படுகிறது. இந்தத் துறையில் 2014 வரையில் வெறும் மூவாயிரம் கோடிதான் முதலீடு போடப்பட்டிருக்கிறது. ஆனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த எட்டு ஆண்டுகளில் ரூ.32,500 கோடி மூதலீடு செய்து வரலாற்றில் முதன்முறையாக அந்தத் துறையை மேம்படுத்த முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இந்திய பொருளாதாரத்தில் மீன்வளத்துறை சிறந்த பங்காற்றிவருகிறது.”

அண்ணாமலை
அண்ணாமலை

``மீன்வளத்துறையில் இணை அமைச்சராக நீங்கள் பொறுப்பு வகிக்கும்போதே தமிழக மீனவர்கள்மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்களே?”

“மீனவர்களைப் பொறுத்தவரை தமிழ் மீனவர்கள், குஜராத் மீனவர்கள், தெலுங்கு மீனவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. அனைவரும் இந்திய மீனவர்கள்தான். தாக்குதல் நடத்தியதை கடற்படையினரும்ம் ஒப்புகொண்டிருக்கிறார்கள். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். இங்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணியினர் ‘இந்தி பேசாததால்தான் சுட்டார்கள்...’ என்று சொல்வதெல்லாம் அரசியலுக்காகச் சொல்லப்படும் அப்பட்டமான பொய்.”

``பா.ஜ.க-வினர் அழைக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றனவே?”

“காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டு கலாசார உறவு இருக்கிறது. அதைப் புதுபிக்கும், பலப்படுத்தும்விதமாக கிட்டத்தட்ட 2,500 பேர் அங்கு செல்லவிருக்கிறார்கள். அதை ஏற்க மனம் இல்லாதவர்கள் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போது காசி தமிழ் சங்கமம் நிகழ்வுக்கு முன்பதிவு செய்துவருகிறார்கள். கார்த்திகை ஒன்றாம் தேதி ஆரம்பித்து அந்த மாதம் முழுவதும், முழுமையான தமிழ்க் கலாசாரம் வாரணாசியில் பிரதிபலிக்கும். அதில் தினமும் தமிழ்க் கலாசார நிகழ்ச்சிகள், தமிழரின் தனி அடையாளங்களை காட்சிப் பொருள்களாகவைக்க ஏற்பாடுகளும் நடந்துவருகின்றன. தமிழர்களின் பாரம்பர்யம் இந்தியா முழுவதும் பிரதிபலிக்க வேண்டும் என்பது பிரதமரின் யோசனை. அதுவும் பிரதமரின் தொகுதியில் என்பது கூடுதல் சிறப்பு.”

``தமிழ், தமிழர் நலன் என்பதெல்லாம் பா.ஜ.க-வின் நாடகம் என்று வாதங்கள் வைக்கப்படுகின்றனவே?”

``பா.ஜ.க-மீது ஏதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகப் பேசுவது இதெல்லாம். அதில் எதைப் பேசினால் சரியாக இருக்கும் என்பதைப் பார்த்து, மொழியைப் பற்றிச் சொன்னால் சென்டிமென்ட்டா இருக்கும் என்று சொல்கிறார்கள். ஆனால், தி.மு.க-வைவிட மொழிமீது பற்றுள்ளவர்கள் பா.ஜ.க-வினர் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதுவும் பிரதமர்போல் தமிழுக்கு உலகம் முழுவதும் ஓர் அங்கீகாரத்தைக் கொடுப்பது யார்?”

இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

``ஆனால், அப்படியிருந்தும் ஒரு பக்கம் பா.ஜ.க ‘இந்தியைத் திணிக்கிறது’ என்கிற குற்றச்சாட்டும் இருக்கத்தானே செய்கிறது?”

“இதை ஒரு கேலிகூத்தாகத்தான் பார்க்கிறேன். தி.மு.க இந்தித் திணிப்பு என்று போலி அரங்கேற்றத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. 1967-ல் இந்தியைவைத்து ஆட்சிக்கு வந்தார்கள். அன்றைக்கு இருந்த காலம் வேறு. இன்னும் சொல்லப்போனால் தி.மு.க-வைவிட மொழிமீது பற்றுள்ளவர்கள் பா.ஜ.க-வினர். அதனால்தான் பிரதமர் மோடி தமிழுக்கு உலகம் முழுவதும் ஓர் அங்கிகாரத்தைக் கொடுத்துவருகிறார். நான் தாய்மொழித் தமிழுக்கு ஆதாரவான ஆள். ஆனால், பிற மொழிகளையும் மதித்து, அனைத்து மொழிகளையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்பது என் கருத்து.

சி.பி.எஸ்.சி., மெட்ரிகுலேசன் என தி.மு.க-வினர் நடத்தும் அத்தனை பள்ளிகளிலும் இந்தி இருக்கிறது. அப்படியிருக்கும்போது தமிழ்நாட்டிலுள்ள என்னைப்போல் அரசுப் பள்ளிகளில் படித்துவந்த ஏழைக் குழந்தைகளுக்கு இந்தி மறுக்கப்படுகிறது. அவ்வாறு புறக்கணிக்கப்பட்ட பல இளைஞர்கள் தமிழ்நாட்டைத் தாண்டி வெளியே போகும்போது மொழிப் பிரச்னையால் முடங்கிப்போயிருக்கிறோம் என்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் நாட்டில் யார் மீதும் எந்த மொழியையும் திணித்துவிட முடியாது. இந்தித் திணிப்பு எனும் ஒரு போலி வேடத்தை, மக்களை ஏமாற்றும்விதமாக பா.ஜ.க மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றன திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள்.”

மோடி, ஸ்டாலின்
மோடி, ஸ்டாலின்

``’திராவிட மாடல்’ ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

``திராவிட மாடல் என்பதே கிடையாது. தமிழ்நாடு ஆன்மிக மாடல், ஆன்மிக பூமி, தெய்விக பூமி. இன்றைக்கு இந்த ஆட்சி இருக்கிறது என்றால் நாளைக்கு வரலாறு பேச வேண்டும். அப்படி ஸ்டாலின் என்ன வரலாற்றை விட்டுச் செல்வார்... ஏனென்றால், சொல்லிக்கொள்ளும்படி ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள். இவர்கள் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்பதை ஒவ்வொரு இடத்திலும் நானும் பேசிவருகிறேன். போகிற இடங்களிலெல்லாம் தாய்மார்களும் கேட்கிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாத திட்டங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதையடுத்து தமிழ்நாட்டு இளைஞர்களின் அடுத்த கட்டத்துக்கு என்ன வழி என்று அரசு யோசிக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் படித்த இளைஞர்களின் மனிதவளத்தைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. படித்துவிட்டு வருபவர்கள் பணியில் இருக்கிறார்களா என்பதும் மிகப்பெரிய கேள்வி.

தொழிற்சாலைகளின் எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்த கல்வி இவர்களிடத்தில் இருக்கிறதா என்றால், அடிப்படைக் கல்வி இருக்கிறது. ஆனால், இரண்டுக்கும் நடுவிலான இடைவெளி இருக்கிறது. பல இடங்களில் புதிய தொழிநுட்பம் வந்துவிட்டது. அவர்களின் தேவை வேறு மாதிரி இருக்கிறது. அந்தத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில், அந்தத் தொழிற்சாலைத் தேவைகளுக்கு ஏற்ப தங்களுடைய தகுதிகளை வளர்த்துக்கொள்ளக்கூடிய வாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்கிக் கொடுப்பதோடு, அந்த இடைவெளியைப் போக்க திறன் மேம்பாடு கொடுக்க வேண்டும். இதையெல்லாம் சரிசெய்து வரலாற்றைப் பதிவு ெய்வதற்கான வேலைகளை ஸ்டாலின் தொடங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.”