Published:Updated:

`முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம்!’ - பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன்

முருகன்
முருகன்

தமிழக முதல்வர் வேட்பாளரை பாரதிய ஜனதா கட்சிதான் முடிவு செய்யும் என முருகன் தெரிவித்த கருத்து, அரசியல் பார்வையாளர்களால் உற்று நோக்கப்பட்டது.

2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், முதலமைச்சர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் என்பதை பா.ஜ.க தான் முடிவு செய்யும் என தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியது. குறிப்பாக, அ.தி.மு.க.-வினர் மத்தியில் கடும் அதிப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் இந்த விவகாரத்தில் புதிய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

`முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம்!’ - பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன்

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் வட்டாரத்தில் காரசாரமான விவாதங்களும் பரபரப்பும் கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழக முதல்வர் வேட்பாளரை பாரதிய ஜனதா கட்சிதான் முடிவு செய்யும் என முருகன் தெரிவித்த கருத்து, அரசியல் பார்வையாளர்களால் உற்று நோக்கப்பட்டது. இந்நிலையில்தான் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தஞ்சாவூர் வந்த தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ``மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விவசாயிகளிடம் விரிவாக எடுத்துக்கூறி வருகிறோம்.

தற்போது ஆயிரம் கூட்டங்களுக்கு மேல் நடத்தி, விவசாயிகளை சந்தித்து வருகிறோம். பா.ஜ.க. சார்பில் தேர்தல் பிரசார முன்னோட்டமாக, வேல் யாத்திரை நடத்தியுள்ளோம். இதன் மூலம் தி.மு.க.-வின் போலி முகத்திரை அகற்றப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.-வின் முதல்வர் வேட்பாளரான பழனிசாமியை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தற்போது உள்ளார். தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்’’ என அந்தர் பல்டி அடித்தார். என்றாலும் தொடர்ந்து, `முதல்வர் வேட்பாளர் யார் என்பதை எங்கள் கட்சித்தலைமைதான் அறிவிக்கும்’ என மீண்டும் குழப்பினார்.

`முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தெளிவாக இருக்கிறோம்!’ - பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன்

என்னதான் நடந்தது... முருகன் ஏன் இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார் என அ.தி.முக- பா.ஜ.க தொண்டர்கள் குழம்பிக்கிடக்கிறார்கள். இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகிகளிடம் பேசியபோது, ``முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க தான் முடிவு செய்யும்னு சொல்றதை எங்க கட்சியின் டெல்லி தலைவர்களே இப்போதைக்கு விரும்பலை. தேர்தல் வரைக்கும் அமைதியா இருந்தால்தான் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற முடியும்.

நீட் தேர்வு, புதிய வேளாண் சட்டங்கள்னு பா.ஜ.க மேல தமிழ்நாட்டுல கடும் அதிருப்தி இருக்குறதை எங்க கட்சி தலைமை தொடர்ந்து கவனிச்சிக்கிட்டு தான் இருக்கு. எடப்பாடி பழனிசாமியை முதலவர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம். அதுக்கு பிறகு முதலமைச்சர் யாருங்கறத பா.ஜ.க தான் தீர்மானிக்க போகுது. இது உறுதி. ஆனால், முருகன் அதுகுள்ளார அவரசரப்பட்டு குட்டையை குழப்புறாரு.’ என ஆதங்கத்தோடு தெரிவித்தார்கள்.

அடுத்த கட்டுரைக்கு