Published:Updated:

லாலுவின் கோட்டையில் மணிமகுட யுத்தம்! - மல்லுக்கட்டும் அண்ணன் தம்பிகள்

அவர்கள் சுயநலத்துக்காகத் தலைவர் லாலு பிரசாத்தை பாட்னாவுக்கு வரவிடாமல் டெல்லியில் மறைத்துவைத்திருக்கிறார்கள்

பிரீமியம் ஸ்டோரி

அரசியல் தலைவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்துவிட்டால், கட்சியின் வாரிசு யார் என்கிற பஞ்சாயத்து தவிர்க்கவே முடியாதது என்பதை பீகாரும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. மகன்களுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டிக்கு முடிவுகட்ட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். வரும் அக்டோபர் 30-ம் தேதி, இரண்டு தொகுதிகளில் அங்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில், இந்த விவகாரம் கட்சிக்குள் பற்றியெரிகிறது!

ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், தற்போது ஜாமீனில் இருக்கிறார். அவர் சிறையில் இருந்தபோது, ராஷ்டிரிய ஜனதா தளத்தைக் கட்டிக்காத்த அவரின் மகன்களான தேஜ் பிரதாப், தேஜஸ்வி இருவருக்குமிடையே, கட்சித் தலைமையைக் கைப்பற்றுவதில் கடும்போட்டி நிலவுகிறது.

லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்தபோது, தேஜஸ்விதான் கட்சியைத் திறமையாக வழிநடத்தினார். அவரை முன்னிறுத்தியே ராஷ்டிரிய ஜனதா தளம் கடந்த சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. கூட்டணி விவகாரங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனாலும், பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனால், கட்சியின் தொண்டர்கள் முதல் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வரை பலரும் தேஜஸ்வியைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.

தற்போது கட்சித் தலைவராக இருக்கும் லாலு பிரசாத் யாதவின் பொறுப்பு, நவம்பர் மாதத்துடன் முடிவடையவிருக்கிறது. அவரது உடல்நிலையும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், கட்சிப் பணியிலிருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு குடும்பத்தினர் அவரை வலியுறுத்துகிறார்கள். அதனால், கட்சித் தலைவர் பதவியைக் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக்கொள்ளத் திட்டமிட்டுவருகிறார். ‘தனது அரசியல் வாரிசு தேஜஸ்விதான்’ என்று லாலு பிரசாத் ஏற்கெனவே அறிவித்துவிட்டார். அதன் பிறகே தேஜஸ்வி முதல்வர் வேட்பாளராகத் தேர்தலைச் சந்தித்தார். தேஜ் பிரதாப்பும்கூட பல சந்தர்ப்பங்களில் ‘தன் இளைய சகோதரர் தேஜஸ்விதான் கட்சியின் முதல்வர் வேட்பாளர்’ என்பதை உறுதிசெய்திருந்தார்.

லாலுவின் கோட்டையில் மணிமகுட யுத்தம்! - மல்லுக்கட்டும் அண்ணன் தம்பிகள்

இவ்வளவு நடந்திருந்தும், லாலுவின் பொறுப்பு முடிவுக்கு வரும் இந்தச் சமயத்தில், அப்பா ஏற்றிருந்த கட்சிப் பொறுப்பு தனக்கே வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் தேஜ் பிரதாப், முதல்வர் வேட்பாளராகத் தம்பி தேஜஸ்வியை நிறுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஆனால், கட்சித் தலைமைப் பொறுப்பும் தன்னிடமே இருக்க வேண்டும் என்பதில் தேஜஸ்வி உறுதியாக நிற்பதால், இரு தரப்பினரும் முறுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

கட்சியிலிருந்து தம்பியே தன்னை ஓரங்கட்டுவதாக நினைக்கும் தேஜ் பிரதாப், டெல்லியில் மகள் நிஷா வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துவரும் லாலு பிரசாத்தைச் சந்தித்து, குடும்பத்தினர் முன்னிலையில் பஞ்சாயத்து நடத்தச் சென்றார். ஆனால், தந்தையைச் சந்திக்க அனுமதி கிடைக்காததால், ஏமாற்றத்துடன் பாட்னாவுக்குத் திரும்பிய தேஜ் பிரதாப், ‘‘கட்சியில் இருக்கும் நாலைந்து பேர் தலைவர் பொறுப்பைக் கைப்பற்றும் கனவில் இருக்கிறார்கள். அவர்கள் சுயநலத்துக்காகத் தலைவர் லாலு பிரசாத்தை பாட்னாவுக்கு வரவிடாமல் டெல்லியில் மறைத்துவைத்திருக்கிறார்கள்’’ என்று சொல்லிப் பரபரப்பைக் கூட்டினார். தேஜ் பிரதாப் தெரிவித்த இந்தக் கருத்தை தேஜஸ்வி திட்டவட்டமாக மறுத்தார். ‘‘லாலு பிரசாத்தை யாராவது அடைத்துவைக்க முடியுமா? அவர் விரைவில் பாட்னா வருவார்’’ என்றார்.

கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்க, அக்டோபர் 11-ம் தேதி ஜன்சக்தி யாத்திரை நடத்துவதாக தேஜ் பிரதாப் அறிவித்தார். அதன்படி, பாட்னா காந்தி மைதானத்திலிருந்து தன் தந்தையின் அரசியல் குருவான ஜெயபிரகாஷ் நாராயண் இல்லம் வரை ஜன்சக்தி யாத்திரை நடத்தினார். யாத்திரையில் கலந்துகொள்ளும்படி தம்பி தேஜஸ்விக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், தேஜஸ்வி கலந்துகொள்ளவில்லை. யாத்திரையில் மாணவரணியினர் தவிர, கூட்டமும் பெரிய அளவில் கூடவில்லை.

இந்த நிலையில்தான், தேஜ் பிரதாப்பின் தீவிர ஆதரவாளரான மாநில மாணவரணித் தலைவர் ஆகாஷ் யாதவ், கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இடைத்தேர்தலுக்காகக் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் தேஜ் பிரதாப் பெயர் இல்லை. இவை தேஜ் பிரதாப்பை மேலும் கோபமடைய வைத்திருக்கின்றன. தமிழகத்தில் மு.க.அழகிரிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு வரை நீடித்த அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியுடன் ஒப்பிட்டு, பீகாரில் உள்ளவர்கள் இந்த விவகாரத்தைப் பேசிக்கொள்கிறார்கள்.

ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் மிருத்துன்சே திவாரி, ‘‘லாலு பிரசாத் குடும்பத்துக்குள் அதிகாரப்போட்டி எதுவும் இல்லை. எல்லாக் குடும்பங்களிலும் நடக்கிற விஷயம்தான் இங்கும் நடக்கிறது. எதிர்க்கட்சிகள்தான் இதைப் பெரிதுபடுத்துகின்றன’’ என்கிறார்.

லாலுவின் கோட்டையில் மணிமகுட யுத்தம்! - மல்லுக்கட்டும் அண்ணன் தம்பிகள்

பீகார் அரசியல் விவகாரங்களை உற்றுநோக்கிவரும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நிகில் ஆனந்த், ‘‘லாலு பிரசாத் குடும்பத்தில் அதிகாரப்போட்டி நடந்துகொண்டிருப்பது உண்மைதான். தேஜ் பிரதாப் கட்சியிலும் குடும்பத்திலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடுகிறார்’’ என்கிறார்.

ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக், ‘‘ராஷ்டிரிய ஜனதா தளம் அரசியல் கட்சி கிடையாது. அது தனியார் கம்பெனிபோலச் செயல்படும் ஒரு குடும்பக் கட்சி. அந்தக் கட்சியில் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோருக்கு இடையே ஷேர்களைக் கைப்பற்ற முயற்சி நடக்கிறது. இந்தக் களேபரத்தில் சில நேரங்களில் அவர்களின் சகோதரியும் களத்தில் குதிப்பதுண்டு’’ என்று சொல்லிச் சிரிக்கிறார்.

ஜனநாயக தேசத்தில், இந்த வாரிசு அரசியலுக்கு ஒரு முடிவே கிடையாதா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு