Published:Updated:

`எனக்கு சாப்பாடு தருவதில்லை; கொடுமைப்படுத்துகிறார்கள்!’- கண்ணீர்வடித்த லாலு பிரசாத் மருமகள்

`எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தியதே அவரது சகோதரிதான்’.

 Lalu Yadav’s daughter-in-law
Lalu Yadav’s daughter-in-law

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டவர், தற்போது, உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். லாலு பிரசாத் யாதவுக்கு தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் என்ற இரண்டு மகன்கள்; 7 மகள்கள். லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும் பீகார் எம்.எல்.ஏ சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

Aishwarya Roy
Aishwarya Roy

திருமணம் நடந்த 6 மாத காலத்துக்குள், `மணப்பொருத்தம் இல்லை’ என்று கூறி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார், தேஜ் பிரதாப் யாதவ். இந்நிலையில், லாலு பிரசாத் யாதவின் மருமகள் ஐஸ்வர்யா ராய், அவரது மாமியார்மீது அடுக்கடுக்காகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும், `தன் கணவரின் சகோதரிதான் விவாகரத்துக்குக் காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர், ``எனக்கும் என் கணவருக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்தியது, கணவரின் சகோதரி மிசா பாரதி தான். வழக்கு நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. ஆனால், விவாகரத்து செய்துவிட்டதைப்போல என்னை அவர்கள் நடத்துகின்றனர். எனக்கு சாப்பாடுகூட தருவதில்லை. 3 மாதமாக என்னை கொடுமைப்படுத்துகின்றனர். சாப்பாடு, என் வீட்டிலிருந்துதான் எனக்கு வருகிறது. கிச்சனுக்கு உள்ளே செல்ல என்னை அவர்கள் அனுமதிப்பதில்லை. வீட்டு வேலைக்காரர் கதவை அடைத்துவிட்டு, சாவியை தரமறுக்கிறார். மிசா, என்னை வீட்டிலிருந்து வெளியே தள்ளிவிட்டுக் கொடுமைப்படுத்துகிறார்.

Aishwarya Roy
Aishwarya Roy

மாமனார் லாலுபிரசாத்தால் மட்டுமே பிரச்னையைத் தீர்த்துவைக்க முடியும். வீட்டில் பிரச்னைகளை ஏற்படுத்துவது, மிசா தான்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பேசியுள்ள மிசா பாரதி, ``நான் அந்த வீட்டில் இருப்பதால் தேவையில்லாமல் இந்த சர்ச்சையில் இழுத்துவிடப்படுகிறேன். கணவன்- மனைவி பிரச்னையில் கணவரின் சகோதரிகள் தலையிடுகின்றனர். கடந்த சில மாதங்களில், நான் 3-4 முறைதான் பாட்னாவுக்கே சென்றிருக்கிறேன். அதுவும் நீதிமன்ற வழக்குகளில் ஆஜராவதற்குதான். என் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.