Published:Updated:

`நான் தேஜஸ்வி; இந்தியன்!’ - #CAA -வுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் லாலு பிரசாத்தின் மகன்

நான் தேஜஸ்வி. நான் இந்து; நான் இந்தியன்; நான் அரசியலமைப்புக்கு ஆதரவாக நிற்கிறேன்; நான் இந்திய மக்களுடன் நிற்கிறேன்.

தேஜஸ்வி
தேஜஸ்வி ( Twitter )

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அரசியல் பிரபலங்கள் இதுதொடர்பாகத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பீகாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் குடியுரிமை சட்டத்துக்கு எதிராகத் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

ட்விட்டரில், ``நான் தேஜஸ்வி. நான் இந்து; நான் இந்தியன்; நான் அரசியலமைப்புக்கு ஆதரவாக நிற்கிறேன்; நான் இந்திய மக்களுடன் நிற்கிறேன்; நான் ஏழைகளுடனும் விவசாயிகளுடனும் நிற்கிறேன். #No to NRC, No to CAA" என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தி லாலு பிரசாத் யாதவ்வின் புகைப்படத்துக்கு அருகில் இருந்தபடி புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

லாலு பிரசாத் யாதவ்வும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``நாடு எரிந்துகொண்டிருக்கிறது. அரசியலமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிராக நாடு முழுவதும் குடிமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மக்களிடம் அரசியல் கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். சந்தர்ப்பவாத தலைவர் ஒருவர் அமைதியாக இருக்கிறார். யாரென்று யூகிக்க முடிகிறதா? வரலாறு அவரின் துரோகம், வஞ்சகம், சந்தர்ப்பவாதம், கோழைத்தனம் ஆகியவற்றுக்கு தீர்ப்பளிக்கும்” என சில தினங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தார்.

தேஜஸ்வி
தேஜஸ்வி

பீகாரில் தீவிரமாக நடைபெற்று வரும் போராட்டத்தில், குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், ``பீகாரில் ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான மக்களின் ஆவணங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எனவே என்.ஆர்.சி நடைமுறைப்படுத்தப்பட்டால் அவர்களால் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க முடியாது” என்றும் தேஜஸ்வி கூறியுள்ளார்.