Tamil News Live Today: `எஸ்.ஆர்.சேகர் கருத்து; அண்ணாமலை பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்!' - வலியுறுத்தும் ஜெயக்குமார்

30-04-2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
`எஸ்.ஆர்.சேகர் கருத்து; அண்ணாமலை பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும்!' - வலியுறுத்தும் ஜெயக்குமார்

``பா.ஜ.க வாங்கும் இடத்தில் இல்லை, அ.தி.மு.க-வும் கொடுக்கும் இடத்தில் இல்லை. மத்தியில் ஆளப்போவது மோடி. ஆறாக உடைந்து கவர்ச்சிகரமான தலைமையே இல்லாத அ.தி.மு.க-வுடன் 25 சீட்டுகள் கொடுத்தால்தான் கூட்டணி... இல்லையேல் பா.ஜ.க தலைமையில் தனிக் கூட்டணி" என பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``எஸ்.ஆர்.சேகர், அண்ணாமலை சொல்லி சொல்லுகிறாரா... இல்லை அண்ணாமலை சொல்லாமல் சொல்கிறாரா... அதுதான் இப்போது கேள்வி. `பகிரங்கமாக எங்களின் பொருளாளர் எனக்குத் தெரியாமல் செய்தி போட்டிருக்கிறார்.

அது தவறு, அவரைக் கண்டிக்கிறேன்' என்ற கருத்தை தமிழ்நாட்டுக்கும், ஊடகங்களுக்கும் அண்ணாமலை தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவித்தால்தான் அண்ணாமலை மீது எங்களுக்குச் சந்தேகம் இருக்காது. இல்லையென்றால் அண்ணாமலை சொல்லித்தான் சொல்கிறார் என்று நாங்கள் நினைக்க வேண்டியிருக்கும்" எனக் கூறியிருக்கிறார்.
`9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. கோவை, நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், தேனி, நெல்லை, தென்காசி, குமரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
100-வது `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வானொலியில் தன்னுடைய 100-வது `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். 2014-ல் பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, அந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி பிரதமர் மோடி தன்னுடைய முதல் `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றினார். பிரதமர் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடம் வானொலி மூலம் உரையாற்றி வருகிறார். தொழில்நுட்பம், சமூக மேம்பாடு, சாதனையாளர்கள் குறித்தப் பேச்சு என ஆக்கபூர்வமான உரையாடலை பிரதமர் இந்த நிகழ்ச்சியின் மூலம் நிகழ்த்திவருகிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்றைய தினம் தன்னுடைய 100-வது `மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். பிரதமரின் இந்த உரை நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல, இந்தியா முழுவதும் பிரதமரின் இந்த 100-வது `மன் கி பாத்' உரையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக, பா.ஜ.க-வினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். கட்சி அலுவலகங்கள், பொதுமக்கள் திரளாகக் கூடும் இடங்களில் எல்.இ.டி திரைகள் மூலம் பிரதமர் உரையை ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கின்றனர். அந்த வகையில், சென்னை குப்பம் பகுதியிலும் பா.ஜ.க-வினர் இத்தகையை ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றனர்.