Tamil News Live Today: எல்.முருகன் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு!

Tamil News Live Today: 13-04-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
எல்.முருகன் இல்லத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு!


பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் டெல்லியிலுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். இந்தக் கொண்டாட்டத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு!

அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் சேர்ந்தெடுக்கப்பட்டதையும், ஜூலை 2022-ம் ஆண்டு நடந்த பொதுக்குழுத் தீர்மானங்களையும் அங்கீகரிக்கக் கூடாது என ஓபிஎஸ் சார்பில் புகழேந்தி, இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருக்கிறார்.
``நிலவிலிருந்து தெரியும் `தமிழ் வடிவக் காடு' உருவாக்கப்படும்'' - மெய்யநாதன்

சட்டப்பேரவையில் பேசிய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், ``தமிழ் மொழியைச் சிறப்பிக்க, நிலவிலிருந்து பார்த்தால்கூட `தமிழ்' என்று தெரியக்கூடிய வகையில் 100 ஏக்கருக்கு `மாதிரிக் காடு' உருவாக்கப்படும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
வியாபாரியிடம் பணம் பறித்த பெண் ஆய்வாளர் டிஸ்மிஸ்!

வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டைக் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தி பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே கைதாகி, சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் வந்த வசந்தி சாட்சிகளைக் கலைக்க முயன்றதாக மீண்டும் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து அவரை டிஸ்மிஸ் செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டிருக்கிறார்.
பல் பிடுங்கிய விவகாரம்: மீண்டும் விசாரணை!

அம்பாசமுத்திரத்தில் விசாணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அமுதா ஐஏஎஸ் வரும் 17, 18-ம் தேதிகளில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீண்டும் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறார்.
ஏப்.16-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி!

ஏப்ரல் 16-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி கொடுத்திருக்கிறது. மொத்தம் 45 இடங்களில் அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிபிசி-க்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு!

வெளிநாட்டு நிதியை இந்தியாவுக்குள் கொண்டு வந்ததில் விதிமீறல்கள் செய்திருப்பதாக, பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்திருக்கிறது. பிபிசி 2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, அண்மையில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. பிரதமர் மோடிக்கு எதிராக அந்த ஆவணம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு குற்றம்சாட்டியிருந்தது. இதையடுத்து பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
``சட்டமன்றம் ஒன்றும் கேளிக்கை விடுதி அல்ல” - காட்டமான அப்பாவு

இன்றைய சட்டசபைக் கூட்டத்தில், கேள்வி நேரத்தில் அமைச்சர் நேரு பதில் தெரிவிக்கும்போது, மானாமதுரை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி பேசிக்கொண்டிருந்தார். இதைக் கண்டித்த சபாநாயகர் அப்பாவு, "உறுப்பினர் தமிழரசி... உறுப்பினர்கள் அமைதியா இருங்க.. கேள்வி என்ன பதில் என்னனு கொஞ்சம் கவனிங்க.. இது ஒரு கேளிக்கை விடுதி அல்ல, இது சட்டமன்றம். அமைச்சர் சொல்லும் பதிலைக் கவனியுங்கள்" எனக் கடிந்துகொண்டார்.
நாளை காலை 10:15 மணிக்கு ஊழல் பட்டியல்!
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, `ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்களின் சொத்து, ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என முன்னரே அறிவித்திருந்தார். இந்த நிலையில், `தி.மு.க-வின் ஊழல் பட்டியல் நாளை காலை 10:15 மணிக்கு வெளியிடப்படும்’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
சூடுபிடிக்கும் கர்நாடகத் தேர்தல்!
224 தொகுதிகளைக்கொண்ட கர்நாடக சட்டசபைக்கு, அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய வருகிற 20-ம் தேதி கடைசி நாள். 21-ம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறவிருக்கிறது. 24-ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

இதற்கிடையே கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க., சட்டசபைத் தேர்தலுக்கான 23 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டிருக்கிறது. இன்னும் 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவிருக்கின்றனர். முதற்கட்டமாக 189 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.