Tamil News Live Today: "ரூ.3.75 லட்சம் வீட்டு வாடகை... அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்!? - கே.எஸ். அழகிரி கேள்வி

Tamil News Live Today: 15-04-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
``தி.மு.க சொத்துப் பட்டியல் தொடர்பாக சி.பி.ஐ-யில் புகாரளிக்கவிருக்கிறேன்'' - அண்ணாமலை

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``சி.பி.ஐ அதிகாரிகளைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். தி.மு.க சொத்துப் பட்டியல் தொடர்பாக வரும் வியாழக்கிழமை சி.பி.ஐ-யில் புகாரளிக்கவிருக்கிறேன்'' என்றார்.
``1 வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்'' - அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், `` 50 ஆண்டு பொது வாழ்க்கையில் இரண்டு முறை எம்.எல்.ஏ., ஒரு முறை எம்.பி., தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் நான், நந்தனத்திலுள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடிக் குடியிருப்பில் ரூ.16,000 வாடகைக்குக் குடியிருக்கிறேன். ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்.
நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாகக் கூறிய அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படிக் கொடுக்க முடிகிறது... மூன்று லட்ச ரூபாய் கைகடிகாரமும் எப்படி அணிய முடிகிறது... இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்... இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடகா: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்!

கர்நாடகாவில் வருகிற மே 10-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 43 பேர்கொண்ட 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்.
தமிழிலும் CAPF தேர்வு - அமித் ஷாவின் அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

மத்திய ஆயுத காவல் படையினருக்கான (Central Armed Police Forces) தேர்வை தமிழ் உட்பட 13 மொழிகளிலும் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருக்கிறார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் அமித் ஷாவின் முடிவை வரவேற்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
CAPF தேர்வைத் தமிழில் நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
``அ.தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும்'' - ஜெயக்குமார்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அ.தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிடட்டும். எல்லாவற்றையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மறைமுகமாகப் பூச்சாண்டி காட்டுவது, மிரட்டல் விடுவது போன்ற பாச்சா எல்லாம் எங்களிடம் பலிக்காது'' என்றார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கூட்டத்தில் வீசப்பட்ட பைப் வெடிகுண்டு!

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோவை நோக்கி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைப் போன்ற பொருள்களில் வெடிபொருள்களை நிரப்பி வீசியதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் ஜப்பான் பிரதமர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். மக்கள் அலறி அடித்து ஓட, அந்த இடத்திலிருந்து பிரதமர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். வெடிகுண்டை வீசிய நபர் கைதுசெய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டு ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால் ஆஜராக சி.பி.ஐ சம்மன்!

டெல்லியில் மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகப் பதியப்பட்ட வழக்கில், மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா தற்போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், `புதிய மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருப்பது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.