Tamil News Live Today : புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் வீடியோ காட்சிகளை வெளியிட்டது மத்திய அரசு!
Tamil News Live Today : 26-05-2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் வீடியோ காட்சிகளை வெளியிட்டது மத்திய அரசு!
ஜப்பானில் நிலநடுக்கம்!

ஜப்பான் தலைநகர், டோக்கியோவுக்கு அருகே 6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
``செங்கோல் கொடுத்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன'' - திருவாவடுதுறை ஆதீனம்

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் விவகாரம் தொடர்பாக, திருவாவடுதுறை ஆதீனம், ``ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் பண்டித ஜவஹர்லால் நேருவிடம் செங்கோல் வழங்கப்பெற்றது குறித்து நம்முடைய ஆதீனத்தின் பதிவுகள் உட்பட, பலவகையான ஆதாரங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன'' எனத் தெரிவித்திருக்கிறார்.
``2006-க்குப் பிறகு ஒரு சதுர அடி நிலம்கூட வாங்கவில்லை'' - செந்தில் பாலாஜி


``அண்ணாமலை என்ன வருமான வரித்துறை இயக்குநரா?'' - ஆர்.எஸ்.பாரதி

தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ``முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம், முதலீடுகள் குறித்து வரும் செய்திகளைத் திசைத் திருப்பவே இந்த ரெய்டு நடத்தப்படுகிறது. `10 நாள்களில் ரெய்டு நடக்கும்' என அண்ணாமலை சொல்கிறார், அதுபோலவே ரெய்டு நடக்கிறது. அண்ணாமலை என்ன வருமான வரித்துறை இயக்குநரா?'' எனத் தெரிவித்திருக்கிறார்.
சத்யேந்தர் ஜெயினுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு, மே மாதம் கைதுசெய்யப்பட்டார். அவர் விசாரணைக் கைதியாக டெல்லி திஹார் சிறையில் இருந்துவருகிறார். இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயினுக்கு மருத்துவக் காரணங்களின் அடிப்படையில், நிபந்தனைகளுடன் ஆறு வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். ஜாமீன் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அவர் டெல்லியைவிட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
``நேருக்கு நேராக விவாதிக்க ரெடி, தயாராக இருந்தால் வரட்டும் அண்ணாமலை!" -அமைச்சர் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்வழி பாடப்பிரிவு பற்றி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
அப்போது அவர், "அண்ணாமலைக்கு வரலாறும் தெரியாது, இப்போது என்ன நடக்கிறது என்பதும் தெரியாது. அவர் காலத்திலா தமிழ் மொழி கொண்டு வந்தார்கள்... யார் காலத்தில் கொண்டு வந்தது... மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையிலே மூன்றாவது மொழி என்பதை எதற்குக் கட்டாயமாக்கினீர்கள்... அதற்கு அண்ணாமலையை பதில் சொல்லச் சொல்லுங்கள். மும்மொழிக் கொள்கையை அண்ணாமலை வரவேற்கிறாரா... அதற்கு முதலில் அண்ணாமலையை பதில் சொல்லச் சொல்லுங்கள். நேருக்கு நேராகக்கூட விவாதிக்கத் தயார். அவர் தயாராக இருந்தால் வரட்டும்" என்றார்.
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்துக்கும், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்துக்குமிடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரிலுள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு தொடர்பான பொதுநல மனு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
சுமார் 860 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்திய தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த நாடாளுமன்றக் கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அன்றைய தினம் அந்தக் கட்டடத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகே `தமிழகத்தின் செங்கோல்' நிறுவப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். `பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை 28-ம் தேதி திறந்துவைப்பார்' என்ற அறிவிப்பு வெளியானது முதலே, எதிர்க்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும், `பிரதமர் மோடி திறந்துவைப்பது முறையாக இருக்காது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் திறந்துவைக்க வேண்டும். அதேபோல, சாவர்க்கரின் பிறந்தநாளான 28-ம் தேதியன்று, நாட்டின் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்துவைப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது' எனத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரை திறப்பு விழாவுக்கு அழைக்கவில்லை என்பதும் முக்கியக் குற்றச்சாட்டாக இருக்கிறது.
தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான எதிர்க்கட்சிகள் இந்த நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கின்றன.
இந்த விவகாரம் தேசிய அரசியலில் பேசுபொருளான நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், `புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதான் திறந்துவைக்க வேண்டும்' என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனு இன்றைய தினம், நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வருகிறது.