Tamil News Live Today: ஏடிஜிபி-க்கள் 4 பேர் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

Tamil News Live Today: 02-05-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
Tamil News Live Today: ஏடிஜிபி-க்கள் 4 பேர் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஏடிஜிபி-க்கள் நான்கு பேரை பணியிட மாற்றம் செய்து, தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
``விஏஓ-க்களுக்கு, கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்'' - விஏஓ-க்கள் சங்கத்தினர் முதல்வருக்குக் கடிதம்

`தமிழ்நாட்டில் நேர்மையான விஏஓ-க்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்புக்காக தமிழ்நாடு அரசு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்’ என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விஏஓ-க்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியிருக்கின்றனர்.
``நேர்மையான அதிகாரிகளுக்கு திமுக ஆட்சியில் இடம் கிடையாது" - எடப்பாடி குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``அதிமுக ஆட்சியில் சிறப்பாகப் பணியாற்றி, என்னிடம் விருதுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி அருப்புக்கோட்டை, களக்காரி வி.ஏ.ஓ துரை.பிருத்விராஜ் தற்போது தன் பணியை நேர்மையாக செய்ய இயலவில்லை என்பதால், வேலையை ராஜினாமா செய்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது. நேர்மையான அதிகாரிகளுக்கு இந்த விடியா ஆட்சியில் இடம் கிடையாது என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது'' என்று தெரிவித்திருக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகல்!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக சரத் பவார் தெரிவித்திருக்கிறார். சரத் பவாரின் ராஜினாமாவை ஏற்க மறுத்து, அவரே தலைவராகத் தொடர வேண்டும் என தொண்டர்கள் முழக்கம் எழுப்பிவருகின்றனர்.
தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமிக்கு அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ்!
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அண்மையில் தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருந்தார். அதற்கு தி.மு.க-வினர் மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த நிலையில், தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமிக்கு, அண்ணாமலை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில், கலாநிதி வீராசாமி மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்றும், அதனால் மன்னிப்புக் கேட்க முடியாது எனவும் தெரிவித்திருக்கிறார்.
மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானார்!

மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தி மகாராஷ்டிராவிலுள்ள கோலாப்பூரில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 89 வயதான இவர் சிறந்த எழுத்தாளர். இவரின் இறுதிச்சடங்கு இன்று கோலாப்பூரில் நடைபெறும் என்று அவரின் மகன் துஷார் காந்தி தெரிவித்திருக்கிறார்.
`குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய்’ - காங்கிரஸ்

கர்நாடகத் தேர்தல் இந்த மாதம் பத்தாம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் பிரசாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. கட்சிகள் வாக்குறுதிகளாக, தேர்தல் அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றன. நேற்று ஆளும் பா.ஜ.க தரப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் தற்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் தமிழகத்தைப் பின்பற்றி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசப் பயணத் திட்டம், முதல் 200 யூனிட் மின்சாரம் இலவசம், வேலையில்லா பட்டதாரிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.