Published:Updated:

Tamil News Live Today: ``தஹி தமிழ்நாட்டில் நஹி; இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்''- சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர்

அமைச்சர் நாசர்
Live Update
அமைச்சர் நாசர்

Tamil News Live Today - 05.04.2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

05 Apr 2023 6 PM

``தஹி தமிழ்நாட்டில் நஹி; இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்''- அமைச்சர் நாசர்

Tamil News Live Today: ``தஹி தமிழ்நாட்டில் நஹி; இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்''-  சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர்

சட்டப்பேரவையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம்மீது பால் வளத்துறை அமைச்சர் நாசர் பதிலுரை வழங்கினார். அப்போது பேசிய அவர், ``தஹி தமிழ்நாட்டில் நஹி. இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

05 Apr 2023 5 PM

``முதலில் தமிழ்நாடு பிரச்னை; இப்போது ராம நவமி கலவரம்'' - தேஜஸ்வி யாதவ் சாடல் 

Tamil News Live Today: ``தஹி தமிழ்நாட்டில் நஹி; இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்''-  சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர்

ராம நவமி கலவரம் குறித்து பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்,`` பீகாரில் திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிவருகின்றனர். பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து குறிவைத்துத் தாக்குதல் நடத்துகின்றனர். முதலில் தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தியைப் பரப்பி, தமிழ் மக்களுக்கு எதிராக பீகார் மக்களைத் திசை திருப்ப நினைத்தனர். இப்போது ராம நவமி அன்று கலவரத்தை உருவாக்கியிருக்கின்றனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.

05 Apr 2023 3 PM

``பட்டியலினத்தைச் சேர்ந்தவரை துணை முதல்வராக்குமா திமுக?'' - வானதி சீனிவாசன்

வானதி
வானதி

பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், `` தந்தை, மகன், பேரன் அடுத்து கொள்ளுப்பேரனையும் தயார்படுத்திக்கொண்டு, மற்ற தகுதியானவர்களுக்குக் கிடைக்கக்கூடிய கட்சித் தலைமை, ஆட்சித் தலைமையைப் பறிப்பதற்குப் பெயர்தான் தி.மு.க-வின் அகராதியில் சமூகநீதியா... பட்டியலினத்தைச் சேர்ந்தவரைத் துணை முதல்வராக்குமா திமுக?'' எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

05 Apr 2023 3 PM

``மோடி அரசு விவசாயிகளுக்கு துணை நிற்கும்'' - நிலக்கரித்துறை அமைச்சரைச் சந்தித்த அண்ணாமலை

அண்ணாமலை
அண்ணாமலை

நெய்வேலி நிலக்கரி விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை இன்று நேரில் சந்தித்திருக்கிறார். இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழக விவசாய நிலங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதைத் தவிர்க்குமாறு, தமிழக பாஜக சார்பில் கோரிக்கை மனு அளித்தோம். மாண்புமிகு அமைச்சரும் நமது கோரிக்கையைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார். மோடி தலைமையிலான அரசு, விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.

05 Apr 2023 12 PM

``நிலக்கரிச் சுரங்கத்துக்கு அனுமதி தர மாட்டோம்!'' - முதல்வர் ஸ்டாலின்

Tamil News Live Today: ``தஹி தமிழ்நாட்டில் நஹி; இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்''-  சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர்

சட்டப்பேரவையில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் விவகாரம் தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ``டெல்டா பகுதியில் மத்திய அரசு நிலக்கரிச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை அறிவித்தபோது, நீங்கள் எல்லாரும் எப்படி அதிர்ச்சி அடைந்தீர்களோ அப்படித்தான் நானும் அதிர்ச்சியடைந்தேன். இது தொடர்பாக பிரதமருக்குக் கடிதம் எழுதப்பட்டது. `நானும் டெல்டாகாரன்தான்'. எனவே, இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது'' என்றார்.

05 Apr 2023 12 PM

``டெல்டாவில் நிலக்கரிச் சுரங்கம் வேண்டாம் என வலியுறுத்தியிருக்கிறோம்!'' - வானதி சீனிவாசன்

Tamil News Live Today: ``தஹி தமிழ்நாட்டில் நஹி; இந்தி வந்தால் கடும் எதிர்ப்பு வரும்''-  சட்டப்பேரவையில் அமைச்சர் நாசர்

நிலக்கரிச் சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் பேசிய பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், `` நிலம் தொடர்பாக மத்திய அரசின் ஓர் ஏலம் வரும்போது, உள்ளூரில் இருக்கும் வருவாய்த்துறையினரின் அனுமதி கிடைத்ததற்குப் பிறகுதான் நடவடிக்கை எடுக்க முடியும். புதிய நிலக்கரிச் சுரங்க ஏல விவகாரத்தில் மாவட்ட வருவாய்த்துறையினர், ஏன் மத்திய அரசுக்கு அது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற தகவலைத் தெரிவிக்கவில்லை... டெல்டா மாவட்டங்களிலுள்ள மூன்று நிலக்கரிச் சுரங்குகளுக்கான ஏழு அறிவிப்புகளிலிருந்து விலக்கு கொடுக்க வேண்டும் என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் கடிதம் எழுதியிருக்கிறோம்'' என்றார்

05 Apr 2023 11 AM

நிலக்கரி எடுக்கும் திட்டம் - சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் 

சட்டப்பேரவை
சட்டப்பேரவை

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். இது தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களும் விவாதித்துவருகின்றனர்.

இது தொடர்பாக பேசிய தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, ``மத்திய அரசு, மாநில அரசிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக முடிவெடுத்திருக்கிறது. டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொள்ளாமல், டெல்டா பகுதிகளைப் பாலைவனமாக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டத்துக்குப் புறம்பானது'' என்றார்.

டி.ஆர்.பி. ராஜா
டி.ஆர்.பி. ராஜா

அதைத் தொடர்ந்து பேசிய அ.தி.மு.க உறுப்பினர் காமராஜ், ``டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டன. அதனடிப்படையில் பிரிவு 4(1)- ன்படி புதிய செயல்பாடுகளைக் கொண்டுவரக் கூடாது. ஆனால், அதற்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் நடவடிக்கையை தி.மு.க அரசு எதிர்க்க வேண்டும். கடந்த ஓராண்டாக இவர்கள் கவனத்துக்கு வராமல்போனது எப்படி எனத் தெரியவில்லை.

குறிப்பாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு வெளியாக 22 நாள்கள் நாடாளுமன்றத்தை முடக்கிய கட்சி அ.தி.மு.க. தற்போது, நாடாளுமன்றத்தில் 38 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் தி.மு.க., இந்தத் திட்டத்துக்கு எதிராகத் தீவிரமாக அழுத்தம் கொடுக்க வேண்டும். இது பற்றி முதலமைச்சர் கடிதம் எழுதியிருப்பதாகக் கூறுகின்றனர். அதற்கு பதிலாக பிரதமரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கலாம்'' என்றார்.

05 Apr 2023 10 AM

நிலக்கரிச் சுரங்க விவகாரம்; `` மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்'' - விஜயகாந்த்

விஜயகாந்த்
விஜயகாந்த்

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், `டெல்டா மாவட்டங்களில் நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதாக மத்திய அரசு அறிவித்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏற்கெனவே வறட்சி, மழைநீரில் மூழ்கி விளைநிலங்கள் சேதம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். விவசாயிகள்மீது பற்று இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒன்றிய அரசு, தற்போது விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை அறிவித்திருப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

05 Apr 2023 9 AM

பிரதமர் மோடி சென்னைக்கு வருகை... பயண விவரங்கள்!  

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 8-ம் தேதி சென்னைக்கு வருகிறார். அவரின் சென்னை பயண விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

அதன்படி, தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு பிற்பகல் 2:45 மணிக்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் கட்டப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த விமான முனையத்தைப் பார்வையிடுகிறார்.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம், ‘ஐஎன்எஸ் அடையாறு' கப்பல் படைத் தளத்துக்குச் செல்கிறார். அங்கிருந்து கார் மூலம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்குச் சென்று, சென்னை - கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையைத் தொடங்கிவைக்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொடர்ந்து, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கார் மூலம் மயிலாப்பூரிலுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துக்குச் செல்கிறார். பின்னர், கார் மூலம் ஐஎன்எஸ் அடையாறுக்குச் செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில், பல்லாவரத்திலுள்ள ராணுவ மைதானத்துக்குச் செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் மேடையிலிருந்து, சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் அதிநவீன முனையத்தைத் திறந்துவைக்கிறார். மேலும், தாம்பரம் - செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையைத் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து ரூ.294 கோடியில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளிக்கிடையே 37 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலையை மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கிவைக்கிறார்.

பின்னர், அங்கிருந்து சென்னை விமான நிலையத்துக்கு வரும் பிரதமர் மோடி இரவு 8:45 மணியளவில் தனி விமானத்தில் புறப்பட்டு, கர்நாடகா மாநிலம் மைசூரு செல்கிறார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொடர்ந்து மறுநாள் அதாவது ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணியளவில் மைசூரிலிருந்து முதுமலைக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தரவிருக்கிறார். அங்கு அவர் ஆஸ்கர் விருது பெற்ற ஆவணக் குறும்படத்தில் இடம்பெற்ற யானையையும், அதை வளர்த்த தம்பதியான பொம்மன், பெள்ளியையும் சந்தித்துப் பேசுகிறார். மேலும், புலிகள் பராமரிப்பு தொடர்பான திட்டங்களையும் பிரதமர் மோடி ஆய்வுசெய்கிறார். பின்னர், பிற்பகல் 12:30 மணிவரை அவர் நீலகிரி பகுதியில் இருப்பார் எனத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் மோடியின் வருகையைத் தொடர்ந்து சென்னை, நீலகிரியில் போலீஸ் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்திருக்கின்றன. சென்னையில் பிரதமர் மோடி வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதால், இயன்றவரை பிரதமர் மோடியின் பயணங்கள் ஹெலிகாப்டர் வழியாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.