Tamil News Live Today: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவைத் திரும்பப் பெற்றார் சரத் பவார்!

Tamil News Live Today: 05-05-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
பதவி விலகும் முடிவைத் திரும்பப் பெற்றார் சரத் பவார்!

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவைத் திரும்பப் பெற்றார் சரத் பவார். கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக சரத் பவார் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், `சரத் பவார் தன்னுடைய முடிவைத் திரும்பப் பெற வேண்டும்’ என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்திவந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் பலி!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். அந்த மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தின் கண்டி பகுதியிலுள்ள காடுகளில் தீவிரவாதிகளைத் தேடும் பணியில், ராணுவத்தினர் ஈடுபட்டபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
'தி கேரளா ஸ்டோரி' படத்தைக் குறிப்பிட்டு மோடி பேச்சு!

இந்திய அளவில் சர்ச்சையைக் கிளம்பியிருக்கும் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். கர்நாடகத் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் பயங்கரவாத சதிகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது'' எனத் தெரிவித்திருக்கிறார்.
கனிமொழி எம்.பி-க்கு அண்ணாமலை நோட்டீஸ்!

தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட விவகாரம் தொடர்பாக, அண்மையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு, தி.மு.க எம்.பி கனிமொழி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் கனிமொழி எம்.பி-க்கு, அண்ணாமலை சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், `கனிமொழியின் சொத்து விபரங்களை வெளியிட்ட விவகாரத்தில், மன்னிப்புக் கேட்க மாட்டேன். சட்ட நடவடிக்கை மூலம் அண்ணாமலையின் குரலை ஒருபோதும் ஒடுக்க முடியாது' எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வி.ஏ.ஓ கொலை வழக்கு: இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கோவில்பத்து வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட, ராம சுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர்.
`பேருந்துகளின் எண்ணிக்கை குறைப்பு' - இ.பி.எஸ் கண்டனம்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்திருப்பதாகக் கூறி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `` மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைத்துள்ள விடியா தி.மு.க அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.
``சரத் பவார் தன் ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய சரத் பவாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
``பித்தம் தெளிய சித்த மருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே!'' - சு.வெங்கடேசன் எம்.பி

முதலமைச்சரை வேந்தராகக்கொண்டு தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அது விதிகளுக்கு முரணானது என ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி தன்னுடைய ட்விட்டர் பதிவில், ``உத்தரப்பிரதேசத்தில் இரு பல்கலைக்கழகங்களுக்கு அம்மாநில முதல்வர் வேந்தராக இருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகலாம் என்பது `விதிகளுக்கு முரணானது' என்கிறார் ஆளுநர். பித்தம் தெளிய சித்த மருத்துவத்தில் மருந்துண்டு ஆளுநரே!'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தி.மு.க இரண்டாண்டு ஆட்சி எப்படி?! - மினி சர்வே
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்
பிரபல ஆங்கில ஊடகமான `டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகைக்கு ஆளுநர் ரவி பேட்டி அளித்திருந்தார். அதில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்தும் அறநிலையத்துறை செயல்பாடுகள் குறித்தும் பேசுகையில், ``சட்டமன்றத்தில் எனது உரையில் கோயில்களைச் சிறப்பாக நிர்வகிப்பதற்காக நான் பாராட்ட வேண்டும் என அரசு விரும்பியது. ஆனால், HR & CE- ன் கீழ் இல்லாத சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2022-ல் என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள். பொது தீட்சிதர்கள் தங்களின் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைப்பதாக சமூக நலத்துறையின் அரசு அதிகாரிகள் எட்டு புகார்கள் அளித்தனர். ஆனால், அத்தகைய திருமணங்களே நடைபெறவில்லை. இருப்பினும் பெற்றோர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதோடு ஆறாவது, ஏழாவது படிக்கும் சிறுமிகளை மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று இருவிரல் பரிசோதனை செய்தனர். அவர்களில் சிலர் தற்கொலைக்குக்கூட முயன்றனர். இது என்னவென்று கேட்டு முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினேன். இப்போது இதையெல்லாம் பார்த்த பிறகும் நான் அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா...?” எனப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. `இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டிருக்கிறது. 6, 7-ம் வகுப்பு மாணவிகளுக்கு இருவிரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் ரவி குற்றச்சாட்டியிருந்த நிலையில், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட இந்தச் சோதனை செய்வது குழந்தைகள் உரிமை மீறல் எனப் புகார் எழுந்திருக்கிறது.