Tamil News Live Today: "மாநில சட்டமியற்றும் குழுவில் ஆளுநரே முதன்மையானவர்; சட்டப்பேரவைக்கு இரண்டாமிடம்தான்''- ஆளுநர் ரவி

Tamil News Live Today - 06.04.2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
``ஆளுநரே முதன்மையானவர்; சட்டப்பேரவைக்கு இரண்டாமிடம்'' - ஆளுநர் ரவி பேச்சு

தமிழக ஆளுநர் ரவி குடிமைப் பணிகளுக்குத் தயாராகும் மாணவர்களிடம் உரையாடினார். அப்போது பேசிய அவர், ``மாநில சட்டமியற்றும் குழுவில் ஆளுநரே முதன்மையானவர். சட்டப்பேரவை ஆளுநருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. எனவே, சட்டப்பேரவையால் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டால், அது சட்டமியற்றும் குழுவால் நிறைவேற்றப்பட்டது என்று பொருளாகாது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால்தான் சட்டமாகும். ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது, நிலுவையில் வைப்பது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவது ஆகிய மூன்றில் ஆளுநர் ஒன்றைத் தேர்வுசெய்ய அரசியலமைப்பு அதிகாரம் கொடுத்திருக்கிறது'' எனத் தெரிவித்திருக்கிறார்
`வெளிநாட்டு நிதியுதவி; மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடினர்!' - ஆளுநர் ரவி
குடிமைப்பணித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடிய `எண்ணித் துணிக' நிகழ்ச்சி சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆளுநர் ரவி, மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது மாணவர் ஒருவர், `வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் நிதியை முறைப்படுத்துவதற்கான தேவை என்ன?' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "வெளிநாட்டிலிருந்து பல கோடி ரூபாய் தொண்டு நிறுவனங்களுக்கு வருகிறது. ஆனால் அந்த நிதி, குறிப்பிட்ட தொண்டுக்குப் பயன்படுத்தப்படாமல், வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக நம் நாடு வேகமாக வளர்ந்து வரும் சூழலில், நாட்டின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு நிதி உதவிகள் பெரிதும் உதவியிருக்கின்றன.

உதாரணமாக கூடங்குளம் அணு உலை அமைக்கப்படும்போது, பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதற்காகவும், கேரளாவில் அதானியின் விளிஞ்சம் துறைமுகம் அமைக்கும்போது நடத்தப்பட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கும் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவிகித தேவையை நிறைவேற்றி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை, வெளிநாட்டு நிதிகள் மூலம் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டார்கள். அதில்தான் துயரகரமான துப்பாக்கிச்சூடு நடந்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.
``திருச்சியில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பார்க்'' - தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில்,``திருச்சி பஞ்சப்பூரில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
அவதூறு ட்வீட் - மன்னிப்புக் கேட்பதாக பா.ஜ.க நிர்வாகி உறுதி!

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, அவதூறான கருத்தை ட்விட்டரில் பதிவிட்டதற்காக, மன்னிப்புக் கேட்பதாக உத்தரப்பிரதேச மாநில செய்தித் தொடர்பாளர் பிரசாந்த் உம்ராவ் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கொடுத்திருக்கிறது.
``மிரட்டல்விடக் கூடாது'' - வேல்முருகனைக் கண்டித்த அப்பாவு

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில், இன்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் எல்.வேல்முருகனுக்கும், சபாநாயகர் அப்பாவுக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது அப்பாவு, ``சத்தத்தையெல்லாம் உயர்த்தக் கூடாது வேல்முருகன், மிரட்டலெல்லாம் விடக் கூடாது உட்காருங்கள்'' என்றார்.
``முக்கியத் துறைமுகங்கள் சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது ஏன்''? - ராகுல் கேள்வி

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``இந்தியாவிலுள்ள முக்கியத் துறைமுகங்கள், ரயில்வே தண்டவாளங்கள், விமான ஓடுதளங்கள் உள்ளிட்டவை ஏன் ஒரு சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன?'' எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்!

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வீடு திரும்பினார்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்!
கர்நாடகாவில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. முதல் வேட்பாளர் பட்டியலில் 124 வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது 42 வேட்பாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. மீதமுள்ள வேட்பாளர்கள் பட்டியல் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
``அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் 16-ம் தேதி நடைபெறும்!'' - அ.தி.மு.க தலைமை

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் நீடித்துவரும் நிலையில், சென்னையில் ஏப்ரல் 7-ம் தேதி நடைபெறவிருந்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் ரத்துசெய்ப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம் வரும் 16-ம் தேதி நடைபெறும் என அ.தி.மு.க தலைமை அறிவித்திருக்கிறது.
வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம்: யூடியூபர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக ஒரு வதந்தி பரவியது. இது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ பதிவிட்ட பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
அருணாச்சலப் பிரதேச விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு!
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளைத் தெற்கு திபெத் என்று சீனா அவ்வப்போது சொந்தம் கொண்டாடிவருகிறது. இது இந்திய, சீன எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை உரிமை கோரும் முயற்சியாக, அங்குள்ள 11 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களைச் சூட்டியது. சீனாவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, `இத்தகைய செயல்களைத் திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும், அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்றும் பதில் கூறியது.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர்களிடம், ``அமெரிக்கா, அருணாச்சலப் பிரதேசத்தை நீண்டகாலமாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்திருக்கிறது. ஒருசில பகுதிகளைப் பெயரிடுவதன் மூலம், பிராந்திய உரிமை கோருபவர்களை முன்னெடுப்பதற்கான எந்த ஒருதலைபட்ச முயற்சிகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்” என சீனாவுக்கு கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.