Tamil News Live Today: `அதிமுக-வை மீட்க ஒன்றிணைந்திருக்கிறோம்!' - டிடிவி - ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு

Tamil News Live Today: 08-05-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
`அதிமுக-வை மீட்க ஒன்றிணைந்திருக்கிறோம்!' - டிடிவி - ஓபிஎஸ் கூட்டாக அறிவிப்பு
சென்னை அடையாறு இல்லத்தில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்தார் ஓபிஎஸ்!
ராஜஸ்தான்: வீட்டின் மீது விழுந்த போர் விமானம்... 2 பெண்கள் பலி!
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் ராஜஸ்தானில் கட்டுப்பாட்டை இழந்து ஒரு வீட்டின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள் பலியானதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து காவல்துறை, ``ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்திலுள்ள பஹ்லோல் நகரிலுள்ள ஒரு வீட்டின் மீது விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பெண்கள் இறந்தனர். ஓர் ஆண் காயமடைந்தார். மீட்புப்பணி நடந்துவருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
``இந்திய விமானப்படையின் மிக்-21 விமானம், வழக்கமான பயிற்சியின்போது சூரத்கர் அருகே விபத்துக்குள்ளானது. சிறிய காயங்களுடன் விமானி பத்திரமாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணை அமைக்கப்பட்டிருக்கிறது” என இந்திய விமானப்படை தெரிவித்திருக்கிறது.
``கோயில் விழாக்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காததால் உயிரிழப்பு!" - எடப்பாடி பழனிசாமி
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``விடியா அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, பொதுமக்கள் கூடும் திருவிழா சமயங்களில் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது மற்றும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்வில் ஏற்பட்ட துயரச் சம்பவங்கள், தஞ்சை, தருமபுரி மாவட்டங்களில் தேர்த் திருவிழாவின்போது ஏற்பட்ட துயரச் சம்பவங்கள், நங்கநல்லூர் அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏற்பட்ட துயரச் சம்பவங்கள் என்று தொடர்ச்சியாக இந்த விடியா ஆட்சியில் நடைபெறும் துயரச் சம்பவங்கள் மிகவும் வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கின்றன.

இந்த விடியா தி.மு.க அரசு இனியாவது விழித்துக்கொண்டு, இது போன்று லட்சக்கணக்கில் மக்கள் கூடும் கோயில் திருவிழாக்களின்போது, தேவையான முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தவொரு அசம்பாவிதச் சம்பவமும் நிகழாத வண்ணம் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்வாகத் திறமையற்ற இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்” என்றார்.
தமிழகத்தில் வெளியானது 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

தமிழகத்தில் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்படும் எனச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தமிழகத்தில் தேர்தல் முடிவுகளின் படி 94.03 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை இணையதளத்திலும், மாணவர்கள் படித்த பள்ளிகளிலும் பார்க்க வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்தத் தேர்வில் மாணவர்கள் 91.45%, மாணவிகள் 96.38% பேர் தேர்ச்சிபெற்றிருக்கிறார்கள்.
இன்று காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது!
தமிழகத்தில் கோடைக்காலத்தில் பரவலாக மாநிலம் முழுவதும் மழை பெய்துவருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அது மேலும் வலுப்பெற்று புயலாக உருவாகக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.