
Tamil News Live Today: 09-05-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
தமிழக அமைச்சரவையிலிருந்து நாசர் நீக்கம்!

முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று, பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் நாசரை, தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.
அமைச்சராகிறார் டி.ஆர்.பி.ராஜா! - தமிழக அமைச்சரவையில் மாற்றம்

மன்னார்குடி எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜாவை தமிழக அமைச்சரவையில் சேர்ப்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த பரிந்துரைக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, டி.ஆர்.பி.ராஜாவின் பதவியேற்பு விழா வரும் 11-ம் தேதி காலை 10 மணியளவில் ராஜ் பவனில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் 10 இடங்களில் நடந்த என்.ஐ.ஏ சோதனை; 5 பேரைக் கைதுசெய்த அதிகாரிகள்!
தமிழ்நாட்டில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேனி, திண்டுக்கல், மதுரை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 10 இடங்களில் நடந்த சோதனையின் முடிவில், ஐந்து பேரை அதிகாரிகள் கைதுசெய்திருக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் அப்துல் ரசாக் (வயது 47, சென்னை), முகமது யூசுப் (வயது 35, மதுரை), முகமது அப்பாஸ் (வயது 45, மதுரை), கைசர் (வயது 45, திண்டுக்கல்), சாதிக் அலி (வயது 39, தேனி) என என்.ஐ.ஏ தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் துரைமுருகன்?!

தமிழக அமைச்சரவையில் விரைவில் சில மாற்றங்கள் இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. இந்த நிலையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்குச் செல்கிறார் என்ற தகவல் வெளியானது. அமைச்சரவை மாற்றம் குறித்த பேச்சுகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் ஆளுநரைச் சந்திக்கவிருப்பதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. இந்த நிலையில் ஆளுநரைச் சந்திக்கவிருப்பதாக வெளியான தகவலை துரைமுருகன் மறுத்திருக்கிறார். `அமைச்சரவை மாற்றத்தையெல்லாம் முதல்வர்தான் முடிவு செய்வார்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து... 15 பேர் பலி!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் கார்கோன் மாவட்டத்தில் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பாலத்திலிருந்து விழுந்து இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர். தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. மேலும், இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக மத்தியப்பிரதேச அரசு நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறது. அதன்படி, உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா நான்கு லட்ச ரூபாயும், பெரிய அளவில் காயமடைந்தோருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ சோதனை!

தமிழ்நாட்டில் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் இன்று காலை முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தச் சோதனைக்கான முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளிலும், ஏற்கெனவே என்.ஐ.ஏ வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வீடுகளிலும் இந்தச் சோதனை நடைபெற்றுவருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம், பழனியில், பி.எஃப்.ஐ முன்னாள் நிர்வாகி ஒருவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்ந்த பகுதியாக வலுவடைந்தது! - வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று மாலைக்குள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.