Tamil News Live Today: பல் பிடுங்கிய விவகாரம்; பல்வீர் சிங் மீது வழக்கு பதிவுசெய்த தமிழக காவல்துறை!

17-04-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
பல் பிடுங்கிய விவகாரம்; பல்வீர் சிங் மீது வழக்கு பதிவு!

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில், விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவுசெய்திருக்கிறது.
கர்நாடக தேர்தல்: ``குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.'' - காங்கிரஸ் வாக்குறுதி

கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், கர்நாடகத் தேர்தலுக்கான காங்கிரஸ் வாக்குறுதிகளாக, 200 யூனிட் மின்சாரம், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.
பல் பிடுங்கிய விவகாம்: அடுத்தடுத்து 5 பேர் ஆஜர் - அமுதா ஐ.ஏ.எஸ் விசாரணை

நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் விசாரணைக்காக ஆஜராகியிருக்கின்றனர். அம்பாசமுத்திரத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவின் இரண்டாவது கட்ட விசாரணையில்,செல்லப்பா, இ.மாரியப்பன், இசக்கிமுத்து எம்.மாரியப்பன், வேதநாராயணன் ஆகியோர் ஆஜராகியிருக்கின்றனர்.
``உத்தரப்பிரதேசம் என்கவுன்ட்டர் பிரதேசமாகிவருகிறது!’’
உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி அத்தீக் அகமதுவும், அவரின் சகோதரர் அஷ்ரப்பும் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவரது பதிவில், "போலீஸ் காவலில் இருக்கும்போது அத்தீக் அகமது, அவரின் தம்பி அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இதுவும் உமேஷ் பால் கொலை வழக்கு போன்று மிகக் கொடூரமான குற்றம். இது போன்ற சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலையைக் கேள்விக்குறியாக்கிவருகின்றன. மாநில அரசின் செயல்பாடு கேள்விக்குரியதாக இருக்கிறது. இப்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகத் தெரியவில்லை. உத்தரப்பிரதேச மாநிலம் ‘என்கவுன்ட்டர் பிரதேச’ மாநிலமாக மாறிவருகிறது. இது குறித்து அனைவரும் சிந்திக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
``கூட்டணி குறித்து அண்ணாமலை முடிவெடுக்க முடியாது!'' - ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``அண்ணாமலை அதிமுக-வைச் சீண்டுவது தீயோடு விளையாடுவதற்குச் சமம். அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தொடர்கிறது. கூட்டணி குறித்து, பாஜக-வின் மத்தியக் குழுதான் முடிவெடுக்கும். அண்ணாமலை முடிவெடுக்க முடியாது'' என்றார்.
பதிண்டா ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு விவகாரம்... ராணுவ வீரர் ஒருவர் கைது!

பஞ்சாப்பிலுள்ள பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பயங்கரவாதிகளின் சதிச்செயலா எனச் சந்தேகம் எழுந்த நிலையில், அதை பஞ்சாப் காவல்துறை மறுத்திருக்கிறது. மேலும், இது தொடர்பாக ராணுவம் விசாரணை செய்துவந்தது. இந்த நிலையில், சில நாள்களுக்குப் பிறகு, இந்தச் சம்பவம் தொடர்பாக கின்னர் தேசாய் மோகன் (Gunner Desai Mohan) என்ற ராணுவ வீரரை, போலீஸார் கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கின்னர் தேசாய் மோகனுக்கு, அவர்களுடன் தனிப்பட்ட பகை இருந்ததாகக், அவரே வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
`இது ஒரு பொய் வழக்கு!’ - கெஜ்ரிவால்
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அந்த மாநிலத்தில் கொண்டுவரப்பட்ட மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக வெளியான தகவல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை செய்துவருகிறது. இந்த வழக்கில்தான் டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா மீது வழக்கு பாய்ந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜரான அவர், பல மணி நேர விசாரணைக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டார். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், `இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’ என மத்திய அரசைச் சாடினார். இந்த நிலையில், `இந்த வழக்கில் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என சி.பி.ஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து, நேற்று மதியம் 12 மணியளவில் சி.பி.ஐ அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜரானார். அவரிடம் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக சுமார் ஒன்பது மணி நேரம் சி.பி.ஐ விசாரணை நடத்தியது. இரவு ஒன்பது மணிவரை நீடித்த விசாரணை நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால், ``என்னிடம் ஒன்பது மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தேன். இது ஒரு பொய்யான வழக்கு. அவர்கள் ஆம் ஆத்மியை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால், மக்கள் எங்களுடன் இருப்பதால், அதற்கு வாய்ப்பில்லை” என்றார்.