Tamil News Live Today: `இந்த ஆட்சியிலேயே புதிய சட்டமன்றம் கட்டப்பட வேண்டும்' - அமைச்சர் துரைமுருகன்

Tamil News Live Today: 19-04-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
எம்.எல்.ஏ-க்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சட்டப்பேரவையில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின், ``முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி-க்களுக்கான ஓய்வூதியம் ரூ.25,000-லிருந்து ரூ.30,000-ஆக உயர்த்தப்படுகிறது. மருத்துவப்படி ரூ.50,000-லிருந்து ரூ.75,000-ஆக உயர்த்தி வழங்கப்படும். இந்த உயர்வு ஜூன் மாதம் முதல் அமலாகும்" என்று அறிவித்தார்.
`இந்த ஆட்சியிலேயே புதிய சட்டமன்றம் கட்டப்பட வேண்டும்' - அமைச்சர் துரைமுருகன்

சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ``தமிழ்நாட்டுக்கு புதிய சட்டமன்றம் கட்டப்பட வேண்டும். ஆளுநர் மாளிகை இருப்பது தமிழ்நாடு அரசின் இடம்தான், அங்கு கட்டலாம். கிண்டி ரேஸ் கோர்ஸ் இருப்பதும் அரசின் இடம்தான், அங்கும் கட்டலாம். ஏதோ ஓர் இடத்தில், இந்த ஆட்சிக் காலத்திலேயே முதல்வர் ஸ்டாலின் புதிய சட்டமன்றம் கட்டுவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி டிஜிபி!உத்தரவு

அம்பாசமுத்திரம் காவல் சரகத்தில் விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருக்கிறார்.
`DMK Files' விவகாரம்: அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி நோட்டீஸ்!

`DMK Files' என்ற தலைப்பில் தி.மு.க-வினரின் சொத்துப் பட்டியலை, அண்மையில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளைக் கூறியதாக அண்ணாமலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் 48 மணி நேரத்தில் அண்ணாமலை நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சென்னை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப் பணிகள் தீவிரம்!
மைசூரு; பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து! - பதைபதைக்க வைக்கும் வீடியோ
``மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்'' - ஸ்டாலின்

கிறிஸ்தவராக மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கோரி சட்டமன்றத்தில் முதல்வர் தீர்மானம் கொண்டுவந்தார். இது குறித்துப் பேசிய அவர், "கிறிஸ்தவராக மதம் மாறிய பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். மதம் மாறிய பின்னும் பட்டியலினத்தவர்கள், ஒடுக்குமுறைக்கு ஆளாகிவருகின்றனர். மதம் மாறிய ஒரே காரணத்துக்காக, அவர்களுக்கு உரிமையைத் தர மறுப்பது சரியாக இருக்காது'' எனத் தெரிவித்திருக்கிறார்.
நொச்சிக்குப்பம்: போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெற்ற மீனவர்கள்!
``மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம் இடையேயுள்ள லூப் சாலையோரத்திலுள்ள மீன் கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சாலையை மறித்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், ஓ.பி.எஸ் இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
இதற்கு பதிலளித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில், ``தமிழ்நாடு அரசு மீனவர்களின் நலன், அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டில் தனிக் கவனம் செலுத்திவருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது'' என்று தெரிவித்திருக்கிறார்.
சென்னை பாரிமுனையில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து!
சென்னை பாரிமுனையிலுள்ள அரண்மனைக்காரன் தெருவில் பழைய கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், ஐந்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், மீட்புக்குழுவினர் அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையையொட்டி கோயில் வடிவில் அலங்கரிக்கப்பட்டிருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம்!
`புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க’

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 10-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், அந்த மாநிலத் தேர்தலில் புலிகேசி நகர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் கர்நாடக மாநில அ.தி.மு.க அவைத்தலைவர் அன்பரசன் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கேப்டனுக்கு நேர்ந்த நிலை! - நடத்துனர் சஸ்பெண்ட்
மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் இந்திய கேப்டனாக இருக்கிறார் மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா.
இவர் நேற்று சென்னையிலிருந்து மதுரை வருவதற்காக அரசு விரைவுப் பேருந்தில் ஏறியபோது, அந்தப் பேருந்தில் `சலுகைப் பயணம் செய்ய அனுமதி இல்லை’ என்று நடத்துனர் அவமானப்படுத்தியிருக்கிறார். தனக்கு அனுமதி உண்டு என்று சொல்லியும் நடத்துனர் கேட்கவில்லை.

அதனால் சச்சின் சிவா கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அந்தப் பேருந்து முன் போராட்டம் நடத்தியபோது நடத்துனர் மிரட்டியிருக்கிறார். அதைத் தொடர்ந்து வேறு பேருந்தில் ஏறி வந்திருக்கிறார் சச்சின் சிவா. இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே, குறிப்பிட்ட நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக டி.எஸ்.பி சஸ்பெண்ட்!

வேலூர், ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி கபிலன், கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்க சுமார் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
கார்த்தி சிதம்பரத்தின் ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அந்தக் காலகட்டத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டைப் பெற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு உபகாரமாக ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெறப்பட்டதாக சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது. மேலும், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவுசெய்தது.

இந்த வழக்குகளில் தொடர்புடையதாக சிவகங்கைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டார். நிலுவையிலுள்ள இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நான்கு சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. கர்நாடக மாநிலம் கூர்க் மாவட்டத்திலுள்ள மூன்று அசையும் சொத்துகள், ஓர் அசையா சொத்துகள் என ரூபாய் 11.04 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது.