Tamil News Live Today: பதற்றம் வேண்டாம்; செப்டம்பர் 30 வரை 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லும்!

Tamil News Live Today: 19-05-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
பதற்றம் வேண்டாம்; செப்டம்பர் 30 வரை 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லும்!

மக்கள் தங்களிடமிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தோ, ரொக்கமாகவோ மாற்றிக்கொள்ள மே 23-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை காலஅவகாசம் கொடுத்திருக்கிறது ரிசர்வ் வங்கி. எனவே, அதுவரை ரூ.2,000 நோட்டுகள் செல்லுபடியாகும்.
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?!

புழக்கத்திலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. மே 23, 2023 முதல் செப்டம்பர் 30, 2023 வரை அனைத்து வங்கிகளிலும், ஆர்.பி.ஐ-யின் 19 வட்டார அலுவலகங்களிலும் மக்கள் தங்களிடமிருக்கும் ரூ.2,000 நோட்டுகளை ரொக்கமாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்யலாம். நாளொன்றுக்கு ஒரு நபர் ரூ.20,000 மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகளை ரொக்கமாக மாற்றிக்கொள்ள முடியும். செப்டம்பர் 30, 2023 வரை ரூ.2,000 நோட்டுகள் செல்லுபடியாகும்.
2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு!

2000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவுசெய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. மே.23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறது.
``அதானியின் பங்குகளில் முதலீடு அதிகரித்திருக்கிறது!'' -

அதானி குழுமம் குறித்து ஆராய உச்ச நீதிமன்றம், உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ``ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, அதானி நிறுவனத்தின் பங்குகளில், சில்லறை முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்திருக்கிறது. அதானி நிறுவனம், தனது பங்குகளின் விலையைச் செயற்கையாக மாற்றியமைத்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டில், SEBI அமைப்பின் கண்காணிப்பில் தோல்வி இருக்கிறது என்ற முடிவுக்கு எங்களால் வர முடியவில்லை'' எனத் தெரிவித்திருக்கிறது.
பா.ஜ.க செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

கோவையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில், பா.ஜ.க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக தி.மு.க அரசுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
சித்தராமையா பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்கவில்லை!

சித்தராமையா பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், மம்தா பானர்ஜி சார்பாக திரிணாமுல் காங்கிரஸ் மக்களவைக்குழு துணைத் தலைவர் ககோலி கோஷ் (Kakoli Ghosh) கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மத்திய சிறையில் 100 சதவிகிதம் தேர்ச்சி!

மதுரை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய சிறைவாகிகள் 100 சதவிகிதம் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர். ஒரு பெண் உட்பட தேர்வெழுதிய 24 பேரும் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர்.
``நான் பேசுவதை எடிட் செய்து வெளியிடுகிறார்கள்!'' - பொன்முடி

அண்மைக்காலமாகவே உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சர்ச்சையாகப் பேசிவருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. இந்த நிலையில், ``நான் எல்லோரையும் மரியாதையாகத்தான் பேசுவேன். அரசியல் செய்ய நினைப்பவர்கள், நான் பேசுவதை எடிட் செய்து வெளியிடுகிறார்கள்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவர் பதவியேற்பு!

ஆந்திர உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவியேற்றனர். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை!

ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே பசுபிக் கடலிலுள்ள நியூ கேலடோனியா தீவில் (New Caledonia Island) 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.
முதலிடம் - பெரம்பலூர் - 97.67%
இரண்டாமிடம் - சிவகங்கை - 97.53%
மூன்றாமிடம் - விருதுநகர் - 96.22%
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெறத் தவறிய மாணவர்களுக்கு ஜூன் மாதத்தில் துணைத் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
6 நாள்கள்... 3 நாடுகள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் பிரதமர் மோடி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று தொடங்கி வரும் 24-ம் தேதி வரை ஆறு நாள்கள் ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின்பேரில் அந்த நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதற்காக இன்று புறப்பட்டு ஜப்பானுக்குச் செல்லும் பிரதமர் மோடி, ஜி7 நாடுகளின் தலைவர்கள் மற்றும் ஜப்பான் பிரதமருடன் இரு தரப்புச் சந்திப்புகளை நிகழ்த்துவார் எனக் கூறப்படுகிறது.

மூன்று நாள் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி, பப்புவா நியூ கினியா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு 22-ம் தேதி அந்த நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப்பேயுடன் இணைந்து இந்திய பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான உச்ச மாநாட்டில் கலந்துகொள்வார். அதைத் தொடர்ந்து அன்றைய தினமே பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெறும் குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். இந்த ஆஸ்திரேலியா பயணத்தின்போது ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரும் பங்கேற்கஇருக்கின்றனர். இந்தப் பயணத்தின்போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸுடன் இருதரப்புச் சந்திப்பை நடத்தும் மோடி, 23-ம் தேதி சிட்னி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய வம்சாவளி மக்களுடன் உரையாற்றுகிறார். அதன் பின்னர் ஆறு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியாவுக்குத் திரும்புவார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.