Tamil News Live Today: 12 மணிநேர வேலை: ``பழிச்சொல்லுக்கு தமிழ்நாடு அரசு ஆளாக நேரிடும்'' - கே.பாலகிருஷ்ணன்

Tamil News Live Today: 21-04-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
சத்யபால் மாலிக்குக்கு சி.பி.ஐ சம்மன்!

ரிலையன்ஸ் இன்ஷுரன்ஸ் திட்டம் தொடர்பாக ஏப்ரல் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு சி.பி.ஐ சம்மன் அனுப்பியிருக்கிறது. ``நான் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்தபோது, ரிலையன்ஸ் இன்ஷுரன்ஸ் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நோக்கில், பா.ஜ.க-வின் ராம் மாதவ் என்னை அணுகினார். ஆனால், நான் மறுத்துவிட்டேன்" என்று பேட்டியொன்றில் மாலிக் தெரிவித்திருந்தார். புல்வாமா தாக்குதல் குறித்தும் அதிர்ச்சித் தகவல்களை அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஐஐடி-யில் மாணவர் தற்கொலை!

சென்னை ஐஐடி-யில் இரண்டாம் ஆண்டு பி.டெக் படித்துவந்த கேதார் சுரேஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
``பழிச்சொல்லுக்கு தமிழ்நாடு அரசு ஆளாக நேரிடும்'' - கே.பாலகிருஷ்ணன்

12 மணிநேர வேலை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றியது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ``வேலை நேரத்தை அதிகரிக்கும் மசோதாவை எந்த வகையிலும் ஏற்க முடியாது. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமையை தமிழ்நாடு அரசாங்கம் நெகிழ்வுத்தன்மை என்ற ஒன்றைச்சொல்லி, அதை இல்லாமல் செய்வது தவறான நடவடிக்கை, தவறான முன்னுதாரணம். மாற்ற முடியாத பழிச்சொல்லுக்கு அரசு ஆளாக நேரிடும்.
இந்தியாவிலேயே இந்த மசோதாவை பா.ஜ.க அல்லாத ஒரு மாநில அரசு கொண்டுவந்திருப்பது தமிழ்நாடு அரசுதான். தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த மசோதாவைக் கைவிடுவதாக அறிவிக்க வேண்டும். இந்த மசோதாவை எதிர்த்து சி.பி.ஐ (எம்) உறுதியாக, தொடர்ச்சியாகப் போராடும்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
பா.ஜ.க அரசு செய்தால் தவறு; தி.மு.க அரசு செய்தால் சரியா?

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் சட்ட மசோதாவை நிறைவேற்றியிருக்கிறது தி.மு.க அரசு. 2020 செப்டம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் விவாதமே இன்றி பா.ஜ.க அரசு தொழிலாளர் சட்டத்தை நிறைவேற்றியது. அப்போது எதிர்க்கட்சியில் இருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின், அந்தத் தொழிலாளர் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். எந்த சட்டத்துக்கு ஸ்டாலின் அன்று எதிர்ப்பு தெரிவித்தாரோ, அதே சட்டத்தின் அடிப்படையில்தான், இன்று வேலை நேரத்தை அதிகரிக்கும் மசோதாவைக் கொண்டுவந்திருக்கிறது தி.மு.க அரசு.
"தொழிலாளரின் விருப்பம் இருந்தால்தான் 12 மணி நேரம் வேலை" - அமைச்சர் சி.வி.கணேசன் விளக்கம்

தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. இந்த நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ``வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த வழிவகை செய்யும், சட்டத் திருத்தத்தின்கீழ் தொழிலாளர்களின் விருப்பம் இருந்தால் மட்டும்தான் ஒரு நிறுவனத்தால் வேலை நேரத்தை உயர்த்த முடியும்'' என விளக்கமளித்திருக்கிறார்.
வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

தொழில் நிறுவனங்களில், தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து, 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க-வின் கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மசோதா நிறைவேறியது.
``காவல்துறையினரின் செயல்பாட்டில் குறையே இல்லை என்று சொல்ல மாட்டேன்'' - சட்டப்பேரவையில் ஸ்டாலின்

சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ``தி.மு.க-வின் இரண்டு ஆண்டுக்கால ஆட்சி இந்தியாவையே ஈர்க்கும் ஆட்சியாக இருக்கிறது. `திராவிட மாடல்’ என்ற கோட்பாட்டின் அரசாக இருக்கிறது. மொழி உரிமை, இன உரிமை என்பதே சாசனம். இலவச மின்சாரம் கிடைக்கிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் முகத்தில் மலர்ச்சி காணப்படுகிறது.
காவல்துறையினரின் செயல்பாட்டில் குற்றம் குறை இருக்கலாம், குறையே இல்லை என்று சொல்ல மாட்டேன். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர், சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளி யாராக இருந்தாலும், காப்பாற்ற மாட்டோம் என்று உறுதி கூறுகிறேன். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


இறுதிக்கட்டத்தை எட்டும் வேங்கைவயல் விவகாரம்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் 26-ம் தேதி பட்டியலின மக்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்கத்தொட்டியில், மனிதக்கழிவுகள் கலந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் யாரும் கைதுசெய்யப்படாத நிலையில், சி.பி.சி.ஐ.டி-யின் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. குற்றவாளிகள் நான்கு மாதங்கள் ஆகியும் கைதுசெய்யப்படாத சம்பவம் பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது.

இதற்கிடையே, சி.பி.சி.ஐ.டி போலீஸார் தங்களுடைய விசாரணையில் 11 பேர்மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், டி.என்.ஏ பரிசோதனை செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக்கழிவு ஒரு பெண், இரண்டு ஆண்களுடையது என்ற நீர் பகுப்பாய்வு மையம் வெளியிட்டிருக்கிற சோதனை அறிக்கையில் தெரியவந்திருக்கிறது. மேலும், 2 பெண்கள் உட்பட 11 பேரின் டி.என்.ஏ பரிசோதனையும் நடைபெறவிருக்கிறது. அதே மாதிரி குரல் மாதிரி பரிசோதனையும் இன்று நடத்தப்படவிருக்கிறது. இதனால் வேங்கைவயல் விவகாரம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.