
Tamil News Live Today: 22-05-2023 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
ரூ.14கோடி கேலரி - அரைமணி நேர மழைக்கு இடிந்து விழுந்தது!

நெல்லை, பாளையங்கோட்டை நகரில் உள்ள வ.உ.சி மைதானத்தில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கேலரியின் மேற்கூரை முற்றிலும் இடிந்து விழுந்தது.
நடிகர் சரத் பாபு காலமானார்!

நடிகர் சரத்பாபு உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் காலமானார்.
பிரதமர் குறித்து ஆவணப்படம் - பிபிசி-க்கு நீதிமன்றம் சம்மன்!

பிரதமர் மோடி குறித்து ஆவணப்படம் வெளியிட்ட பிபிசி செய்தி நிறுவனத்தின்மீது, குஜராத்தைச் சேர்ந்த ஓர் என்.ஜி.ஓ அமைப்பு மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறது. இந்த வழக்கை இன்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், பிபிசி-க்கு சம்மன் அனுப்பியிருக்கிறது!
சாவர்க்கரின் பிற்நதநாளில் திறக்கப்படும் புதிய நாடாளுமன்றம்!

புதிய நாடாளுமன்றக் கட்டடம் மே 28-ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. மே 28-ம் தேதி, சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால், அன்று கட்டடத்தைத் திறக்க, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, ``இது நாட்டையே அவமதிக்கும் செயல்'' எனத் தெரிவித்திருக்கிறது.
திமுக ஆட்சிமீது அதிமுக புகார்!

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்குச் சீர்கேடு, கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அதிமுக-வினர் பேரணியாகச் சென்று தமிழக ஆளுநரிடம் மனு அளித்தனர்.
அதிமுக பேரணி - வெயிலில் அவதிப்படும் மக்கள்!

கள்ளச்சாராய மரணங்கள், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் குறித்து திமுக ஆட்சிமீது ஆளுநரிடம் புகாரளிக்க, எடப்பாடி பழனிசாமி தலைமையில் சின்னமலைப் பகுதியிலிருந்து அதிமுக-வினர் பேரணி மேற்கொண்டனர். இந்தப் பேரணி காரணமாக ஆலந்தூர் தொடங்கி சைதாப்பேட்டை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதிப்பட்டுவருகின்றனர்.
``பிரதமர் பலமுறை திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார்!'' - எல்.முருகன்

பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து `டோக் பிசின்’ மொழியில் திருக்குறளை வெளியிட்டனர்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டரில், ``தமிழ்க் கலாசாரத்தின்மீதான ஆழமான பிணைப்பையும் மதிப்பையும் மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார் பிரதமர். தமிழ்ப் புத்தாண்டு போன்ற தமிழ்ப் பண்டிகைகளில் கலந்துகொண்டு, தமிழ் மொழியைக் கற்கும் முயற்சியில் ஈடுபடுவது, தமிழ்க் கலாசாரத்தின் மீதான அவரின் உண்மையான மரியாதைக்கு மற்றொரு சான்று. நல்லாட்சி, நல்லிணக்கம், வளர்ச்சி போன்ற கொள்கைகளை வலியுறுத்த பிரதமர், பலமுறை திருக்குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.
`பிரதமர் தமிழ்ப் பாரம்பர்யத்தின் மீது அன்புகொண்டவர்' - அண்ணாமலை

பிரதமர் மோடி `டோக் பிசின்’ மொழியில் திருக்குறளை வெளியிட்டது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``பிரதமர் நரேந்திர மோடி, நமது திருக்குறளின் புதிய மொழிபெயர்ப்பை, பப்புவா நியூ கினியா நாட்டு மொழியான டோக் பிசின் மொழியில் இன்று வெளியிட்டிருக்கிறார். தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ்ப் பாரம்பர்யத்தின்மீதும்கொண்ட அன்புக்காகவும், திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதற்காகவும் பிரதமர் மோடி அவர்களுக்கு, தமிழக மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.
ஆளுநரைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு பிரச்னை, மின்வெட்டு, கள்ளச்சாராய / விஷச்சாராய மரணங்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளிக்கவிருக்கிறார்.

இதற்காக, சின்னமலை அருகிலிருந்து காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வினர் பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்குச் செல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து திமுக அரசுமீது புகார் மனு அளிக்கவிருக்கின்றனர்.