
24-04-2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
தமிழக அரசின் மது விநியோக சட்டத் திருத்தம் நீக்கம்!

திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்துவதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கிய விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், வணிகப் பகுதிகள் இல்லாத இடங்களில் மது பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மார்ச் 18-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் திருத்தம் செய்து தமிழக அரசு இதை அறிவித்திருக்கிறது.
திருச்சி மாநாட்டில் உரையாற்றும் ஓ.பி.எஸ்!
ஓபிஎஸ் மாநாட்டில் தீர்மானங்களை வாசிக்கும் கு.ப.கிருஷ்ணன்!
ஓபிஎஸ் மாநாட்டில் உரையாற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன்!
திருச்சியில் தொடங்கியது ஓபிஎஸ் அணியின் மாநாடு!
12 மணி நேர வேலைக்கான மசோதா நிறுத்திவைப்பு! - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலைக்கான சட்ட மசோதா நிறுத்திவைக்கப்படுகிறது. அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இத்தகைய முடிவை அரசு எடுத்திருக்கிறது. தொழிலாளர் நலத்துறையின் சட்ட முன்வடிவு நிறுத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
12 மணி நேர வேலை - தி.மு.க-வின் தொழிற்சங்கமும் எதிர்ப்பு!

வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டிக்கும் மசோதாவுக்கு தி.மு.க-வின் தொழிற்சங்கமும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல்; வேட்பாளரைத் திரும்பப் பெற்றது அ.தி.மு.க!

கர்நாடகா மாநிலம், புலிகேசி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அன்பரசன், தன் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். பா.ஜ.க-வின் கோரிக்கையை ஏற்று வாபஸ் பெறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். ஓ.பி.எஸ் தரப்பைத் தொடர்ந்து, அ.தி.மு.க பொதுச்செயலாளர் இ.பி.எஸ் தரப்பும் கர்நாடகத் தேர்தலில் போட்டியிடவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

12 மணி நேர வேலை - முதல்வருடன் கூட்டணிக் கட்சியினர் சந்திப்பு

வேலை நேரத்தை 12 மணி நேரமாக நீட்டிக்கும் மசோதாவை திருப்பப் பெற வலியுறுத்தி, தி.மு.க-வின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று மாலை முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்கவிருக்கின்றனர்.
``மதுபானத்தை டோர் டெலிவரியே செய்துவிடலாம்'' - வானதி சீனிவாசன் விமர்சனம்

திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்துவதற்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கும் விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், ``மைதானங்களில் மது அருந்த அனுமதி அளித்ததற்கு பதில், டோர் டெலிவரியே செய்துவிடலாம். மக்களைச் சீரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியைத் தமிழக அரசு செய்துவருகிறது'' என்றார்.
``கலாசாரத்தின்மீது திராவகத்தை வீசியிருக்கிறது தி.மு.க அரசு" - இ.பி.எஸ் கண்டனம்

திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்துவதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தன் ட்விட்டர் பதிவில், ``மதுவிலக்கே ஒற்றை இலக்கு எனக் கூறிவிட்டு 12 மணி நேரம் மதுக்கடைகளைத் திறந்துவைத்திருக்கும் இந்த தி.மு.க அரசு, இன்று கல்யாண மண்டபங்களிலும், விளையாட்டுத் திடல்களிலும், மதுபானம் அருந்தலாம் என அனுமதித்திருப்பதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மதுவுக்கு அடிமையாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைத்து, கலாசாரத்தின்மீது திராவகத்தை வீசியிருக்கும் இந்த திராவக மாடல் அரசுக்கு, பொது அமைதியைச் சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் இத்தகைய மக்கள் விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இந்த அரசுக்கு மக்கள் விரைவில் தக்க பாடம் புகட்டுவர் என்பது மட்டும் உறுதி'' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
கர்நாடகா தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார்

கர்நாடகாவில் வரும் மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்குத் தீவிரமாகத் தயாராகிவருகின்றன. ஆனால், அ.தி.மு.க-வில் உட்கட்சிப்பூசல் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், கர்நாடகா தேர்தலில் ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் அனந்தராஜ் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார். கோலார் தங்கவயலில் சுயேச்சையாகவும் போட்டியிட விரும்பவில்லை என அனந்தராஜ் தெரிவித்திருக்கிறார்.
செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னையில் செட்டிநாடு குழும நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
``திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதிக்கப்படாது!'' - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்துவதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது என்ற தகவல் வெளியானது. இந்தத் தகவல் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி, ``திருமண மண்டபங்களில் மது அருந்த ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது. சர்வதேச தரத்திலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது'' என விளக்கமளித்திருக்கிறார்.
ஓ.பி.எஸ் மாநாட்டுக்காகத் தயாராகும் திருச்சி ஜி கார்னர்!
தி.மு.க எம்.எல்.ஏ மோகன் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம்!

`திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாறலாம்!' - தமிழக அரசு அறிவிப்பு

திருமண மண்டபங்களில் மதுபானம் அருந்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. மாவட்ட ஆட்சியரிடமிருந்து அனுமதி பெற்று, மதுவிலக்கு துணை ஆணையரிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம் என்று அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், விளையாட்டு மைதானங்களிலும் மது அருந்துவதற்கு அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.
`ஜி ஸ்கொயர்' நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் ஐ.டி ரெய்டு!

ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட இடங்களிலும், கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, பெல்லாரி உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது. வரி ஏய்ப்பு புகார் எழுந்த நிலையில், இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது