Tamil News Today Live: ஆடியோ விவகாரம்; `உண்மைத் தன்மையை அறிய தணிக்கை செய்ய வேண்டும்!' - ஆளுநரிடம் பாஜக கோரிக்கை

23-04-2023 இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!
ஆடியோ விவகாரம்; `உண்மைத் தன்மையை அறிய தணிக்கை செய்ய வேண்டும்!' - ஆளுநரிடம் பாஜக கோரிக்கை
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், கரூர், திருச்சி, நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூரில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுக-வில் இணைந்த அமமுக பொருளாளர்!

அ.ம.மு.க பொருளாளரும், முன்னாள் அ.தி.மு.க கொறடாவுமான திருச்சி மனோகரன், சென்னையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தன்னை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார்.
ராஜஸ்தான்: குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் துங்கர்பூர் மருத்துவக் கல்லூரியில், குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று தீ விபத்து ஏற்ப்பட்டது. அந்தப் பிரிவில் 12 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். உடனே சம்பவ இடத்துக்கு 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைப் போராடி அணைத்தனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த 12 குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கினறனர்.
`அது போலி... எங்களைப் பிரிக்க முடியாது!' - ஆடியோ சர்ச்சைக்கு அமைச்சர் பி.டி.ஆர் விளக்கம்

கடந்த 14-ம் தேதி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, தி.மு.க-வினரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் எனக் கூறி, சில தரவுகளை வெளியிட்டார். அது அரசியல் அரங்கில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து அண்மையில், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் குறித்து `அவர்கள் 30,000 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர்' எனப் பேசுவது போன்ற ஆடியோ ஒன்றை பா.ஜ.க-வினர் வெளியிட்டனர். மேலும், அமைச்சர் பி.டி.ஆரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அண்ணாமலை வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் விளக்கக் குறிப்பில், ``சமூக வளைதளங்களில் நான் பேசியதாகப் பகிரப்பட்டு வைரலாகும் ஆடியோ கிளிப் போலியானது. என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் எப்போதுமே எதிர்வினையாற்றியதில்லை. ஆனால், தற்போது இந்த விவகாரத்தில் நான் எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
நான் இங்கே இருப்பது... என்னுடைய பொதுவாழ்க்கையில் செய்த அனைத்தும் தி.மு.க தலைவர், முதல்வர் ஸ்டாலினால்தான். எங்களைப் பிரிப்பதற்கான முயற்சிகள் எப்போதும் எடுபடாது. இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பல மாதங்கள் ஆகும் என்பதை நான் உணர்ந்தாலும்... இதில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.