Published:Updated:

‘பா.ஜ.க மட்டும் செல்கிறார்கள்; அதுவே நாங்கள் சென்றால் தடுக்கிறார்கள்’ - கொதிக்கும் மம்தா

சத்யா கோபாலன்

உத்தரப்பிரதேசத்தில் தர்ணா செய்த பிரியங்கா காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி ( ANI )

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் இரு பிரிவினரிடையே நடந்த கலவரத்தில் ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இந்த சம்பவத்தில் சுமார் 10 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் உத்தரப்பிரதேசம் வந்திருந்தார்.

பிரியங்கா தர்ணா
பிரியங்கா தர்ணா
Twitter/@kcvenugopalmp

முதலில் வாரணாசி சென்று அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தவர்களை நேரில் சந்தித்துவிட்டு பின்பு அங்கிருந்து சோன்பத்ராவுக்கு சென்றார். ஆனால் அதற்கு 80 கி.மீ முன்னதாகவே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். ‘இதற்கு மேல் செல்ல உங்களுக்கு அனுமதி இல்லை’ என அதிகாரிகள் பிரியங்காவிடம் தெரிவித்துள்ளனர். அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தைக் கேட்டதற்கு அதிகாரிகள் சரியான காரணம் கூறவில்லை.

இதனால் டென்சனான பிரியங்கா அங்கேயே சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். ‘பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்காமல் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன்’ எனக் கூறி தன் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அதிகாரிகள் எவ்வளவோ சொல்லியும் கேட்காததால் இறுதியில் பிரியங்கா கைது செய்யப்பட்டு மிஸாபூரில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்குச் சென்றும் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார் பிரியங்கா காந்தி. பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் உ.பி அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர். தொடர்ந்து தர்ணா செய்த பிரியங்கா, மறுநாள் பிற்பகல்தான் மக்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்.

பிரியங்கா தர்ணா
பிரியங்கா தர்ணா
Twitter/@srinivasiyc

இவரின் தர்ணா பற்றியும் உத்தரப்பிரதேச கலவரம் பேசியுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. அந்த மாநிலத்தில் துப்பாக்கிச் சூட்டால் மட்டும் இதுவரை 1,100 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். மத்திய அரசு இதில் உடனடியாக தலையிடவேண்டும்.

மேற்குவங்கத்தில் ஏதேனும் கலவரம், பிரச்னை நடந்தால் உடனடியாக உண்மை அறியும் குழுவை அனுப்புகிறது பா.ஜ.க. அதுவே உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் கலவரத்தைப் பற்றி அறிந்துகொள்ள நாங்கள் ஒரு குழுவை அனுப்பினால் மட்டும் அம்மாநில காவலர்கள் எங்கள் குழுவைத் தடுக்கிறார்கள். நாங்கள் சொல்ல வருவதைக் கேட்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. அனைவரும் விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பிரியங்கா காந்தி தர்ணா செய்ததில் எந்த தவறும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.