Published:Updated:

`பிகில், திகில் எதுவாக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்!’- கடுகடுத்த ஜெயக்குமார்

சிறப்புக் காட்சி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அதனால், பிகில் உட்பட திரைப்பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி இல்லை.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் இயற்கை சீற்ற பாதிப்புகளிலிருந்து மீனவர்களை பாதுகாக்க ஆபத்து காலங்களில் அவர்களுக்கு உதவும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத் துறை தலைமை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். மேலும், மீனவர்களுக்கு மானிய விலையில் பைபர் படகுகள் இன்ஜின் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் அவர் வழங்கினார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ``கடந்த காலங்களில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் ஒகி போன்ற புயல் காலங்களில் மீனவர்களின் உயிர்ச்சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மீன்வளத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன்கள் வழங்கப்படுகின்றன. 200 நாட்டிக்கல் மைல் வரை இந்த போனை பயன்படுத்த முடியும்.

சிங்கப்பெண்களுக்குச் சிக்கல், நண்பேன்டா ராசி! `பிகில்' ஸ்கூப் #SneakPeek #MovieLine

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் படம் எடுத்து வெளியிடலாம். சிறப்புக் கட்சிகள் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி மறுத்து அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். பிகில், திகில் என எந்தத் திரைப்படமானாலும், யாராக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் பொதுவானது. முரசொலி அலுவலகம் மற்றும் அண்ணா அறிவாலயம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். அறிவாலயத்தை ஆதரவற்றோர் இல்லம் கட்டப்போவதாகக் கூறி அனுமதி வாங்கினார்கள். ஆனால், இதுவரை கட்டினார்களா.. மேலும் இதுகுறித்து ஸ்டாலின் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும். கருத்துக்கணிப்பில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இடைத்தேர்தல் மட்டுமல்லாது உள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கதான் வெற்றி பெறும்.

பிகில் போஸ்டர்
பிகில் போஸ்டர்

கடந்த தி.மு.க ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது. தற்போது உள்ள அ.தி.மு.க ஆட்சியில் அது சிறப்பாக இருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் இதுபோன்று பொய் கூறிவருகிறார்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் சிறப்பான முறையில் அரசால் பராமரிக்கப்பட்டு அரசு விழாக்கள் அங்கு நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்டவை மீதுதான் தி.மு.க ஆட்சியாளர்கள் குற்றம்சாட்டி, பாரபட்சம் காண்பிப்பார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு