Published:Updated:

`சமூகநீதியை ஒழிக்க முயற்சி’... ரஜினி மீது அமைச்சர் சி.வி.சண்முகம் பாய்வது ஏன்?

ரஜினி

`தி.மு.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சியாக ரஜினி களமிறக்கப்படுகிறார்’ என ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும் நிலையில், ரஜினிக்கு எதிராக அமைச்சர் சி.வி.சண்முகம் கொந்தளித்திருக்கிறார்.

`சமூகநீதியை ஒழிக்க முயற்சி’... ரஜினி மீது அமைச்சர் சி.வி.சண்முகம் பாய்வது ஏன்?

`தி.மு.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சியாக ரஜினி களமிறக்கப்படுகிறார்’ என ஒரு விமர்சனம் முன்வைக்கப்படும் நிலையில், ரஜினிக்கு எதிராக அமைச்சர் சி.வி.சண்முகம் கொந்தளித்திருக்கிறார்.

Published:Updated:
ரஜினி

தி.மு.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சியாக அரசியல் களத்தில் நடிகர் ரஜினிகாந்த் இறக்கிவிடப்படுவதாக விமர்சிக்கப்படும் நிலையில், ``ரஜினி மூலமாக சமூகநீதியை ஒழிப்பதற்கு சிலர் முயன்றுவருகிறார்கள்’’ என்று கொந்தளித்திருக்கிறார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க முகாமிலிருந்து இப்படியொரு குரல் ஒலித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

`2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியை ஆரம்பித்து, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன்’ என்று 2017-ம் ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி ரஜினி அறிவித்தார். அப்போது, தனது அரசியல் பாதை என்பது, `ஆன்மிக அரசியல்’ என்று அவர் குறிப்பிட்டார். அப்போதே, ரஜினியின் சிந்தனையும் எங்கள் சிந்தனையும் ஒரே மாதிரியானது என்று பா.ஜ.க-வினர் உற்சாகப்பட்டனர். `ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும் எங்கள் கட்சியின் ஆன்மிகச் சிந்தனைக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை’ என்று பா.ஜ.க-வின் அப்போதைய மாநிலத் தலைவர் தமிழிசை கூறினார்.

வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாக தற்போது ரஜினி கூறியிருக்கிறார். `பா.ஜ.க அறிவுசார் இயக்கத்தின் பொறுப்பில் இருந்த ஒருவரைத் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்திருக்கிறார். `அப்படியென்றால், ரஜினியின் பின்னால் பா.ஜ.க இருக்கிறது’ என்று பலர் சந்தேகம் கிளம்பினர். இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலில் ரஜினி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு பா.ஜ.க விரும்புவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், அ.தி.மு.க-வுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கூட்டணி உறுதியாகிவிட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின்றன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் பங்கேற்ற நிகழ்ச்சியில், அ.தி.மு.க - பா.ஜ.க இடையிலான கூட்டணி தொடர்வதாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தனர். ஆனால், கூட்டணி பற்றிய தன் நிலைப்பாட்டை பா.ஜ.க தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இந்த மாதம் 30-ம் தேதி சென்னைக்கு வருவதாக இருந்தது. ஆனால், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால், திட்டமிட்ட தேதியில் சென்னைக்கு அவர் வருவாரா என்பது தெரியவில்லை.

ரஜினியுடன் அர்ஜுனமூர்த்தி
ரஜினியுடன் அர்ஜுனமூர்த்தி

`ரஜினியின் வருகையால் தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பு’ என்று சிலர் சொல்லிவருகிறார்கள். `200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிப்போம்’ என்று தி.மு.க-வினர் சொல்லிக்கொண்டிருக்கும் நிலையில்,`ரஜினிகாந்த் அரசியல் கட்சியை ஆரம்பித்தால், அடிவாங்கப்போவது தி.மு.க-தான்’ என்று பேசியிருக்கிறார் பா.ஜ.க-வின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. `1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு எதிராகவும், தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகவும் ரஜினி வாய்ஸ் கொடுத்தார். அதிலிருந்து, ரஜினி ரசிகர்கள் தி.மு.க-வுக்கு வாக்களித்துவருகிறார்கள். எனவே, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால், தி.மு.க அடி வாங்கும்’ என்பது ஹெச்.ராஜாவின் கருத்து.

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வாரம் திருவண்ணாமலைக்குச் சென்ற ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா, அங்குள்ள அருணகிரி நாதர் கோயிலில் வழிபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், `திராவிடக் கட்சியினர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள். இது, அவர்களின் கடைசிக் காலம். ரஜினி ரசிகர் மன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு மாநில அளவில் பதவிகள் வழங்கப்படும். கட்சியைப் பதிவு செய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை ரஜினி கட்சியில் சேர்ப்பதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன. விமர்சனங்கள் செய்யும் அரசியல் கட்சியினருக்கு, வரும் ஜனவரி மாதம் ரஜினி பதிலடி கொடுப்பார். ரஜினியால் தமிழ்நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்’ என்று கூறினார்.

சத்திய நாராயணா
சத்திய நாராயணா

கடந்த ஆண்டு மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அப்போது, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் தரிசனத்துக்குச் சென்ற சத்திய நாராயணா, `குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது தவறு. மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அரசு நல்லதுதான் செய்கிறது. எனவே, அதற்கு எதிராகப் போராட வேண்டாம்’ என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து ம.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடம் பேசினோம். ``ரஜினியால் ஒருபோதும் திராவிட இயக்கத்துக்குச் சவாலாக இருக்க முடியாது. ஏற்கெனவே அரசியலுக்கு வந்திருக்கும் நடிகர்களுக்கும், மதவாத சக்திகளுக்கும் வேண்டுமானால், அவர் சவாலாக இருப்பார். ஏனென்றால், ரஜினியின் பயணம் என்பது வேறு, எங்கள் பயணம் என்பது வேறு.

ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலைக் கையிலெடுத்திருக்கும் காரணத்தால், பா.ஜ.க-வின் வாக்குகள்தான் சிதறும். எங்கள் வாக்குகள் சிதறாது. நாங்கள் சமூகநீதிக் களத்தில் இருக்கிறோம். ரஜினிகாந்த், மதச்சாயத்தைப் பூசிக்கொண்டு அரசியலுக்கு வருகிறார். ஆளும் கட்சிக்கும், எதிர்க் கட்சிக்கும் வாக்களிக்காமல் நடுநிலையுடன் வாக்களிக்கும் உதிரி வாக்காளர்கள் 5-10 சதவிகிதம் இருப்பார்கள். அந்த வாக்குகளைத்தான் ரஜினியால் பிரிக்க முடியுமே தவிர, எங்கள் வாக்குகளை அவரால் தொட முடியாது. ரஜினிகாந்த் ஏற்கெனவே அறிவித்தபடி, யாருடனும் கூட்டணி வைக்காமல் 234 தொகுதிகளிலும் போட்டியிடட்டும். பிறகு பார்க்கலாம்.

மல்லை சத்யா
மல்லை சத்யா

பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லையென்றால், நாம் கொஞ்சம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை அ.தி.மு.க தொண்டர்களுக்கு இருந்தது. அப்போது, எங்கள் வெற்றி என்பது கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தது. அமித் ஷா முன்னிலையில் `கூட்டணி தொடரும்’ என்று எடப்பாடியும் பன்னீர்செல்வமும் என்றைக்கு அறிவித்தார்களோ, அன்றைக்கே வெற்றி என்பது எங்களின் கைக்கெட்டிய தூரத்துக்கு வந்துவிட்டது.

இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றுசேர்ந்திருக்கிறோம். எங்கள் எதிரி யார் என்பதை உணர்ந்து, ஒருமுகமாக, உளப்பூர்வமாக ஒன்றிணைந்திருக்கிறோம். எங்கள் சக்தியைப் பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்துவோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் என்ன நடந்ததோ, அதுதான் இப்போது நடக்கும். எனவே, அதில் ஏதாவது மடைமாற்றம் செய்யலாமா, பலவீனப்படுத்தலாமா என்று எதிராளிகள் பார்க்கிறார்கள். ஒருபோதும் அது நடக்காது. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க தலைமையிலான எங்கள் கூட்டணி வெற்றிபெறும். ஸ்டாலின் முதல்வர் நாற்காலியில் அமருவார். அதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது” என்றார் மல்லை சத்யா.

பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது,``தமிழகத்தில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும்தான் பலம்வாய்ந்த கட்சிகள். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பா.ஜ.க உட்பட மற்ற எந்தக் கட்சிகளாலும் தமிழகத்தில் வளர முடியாததற்கு இந்த இரண்டு கட்சிகளின் ஆதிக்கம்தான் காரணம்.

ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு கொள்கையை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றுதான் அரசியலுக்கு வருவார்கள். அப்படித்தான் ரஜினியும் வந்திருக்கிறார். அவர், ஆன்மிக அரசியல்தான் தனது அரசியல் பாதை என்று கூறியிருக்கிறார். எனவேதான், திராவிடக் கட்சிகளுக்கு எதிராக அவர் இருப்பதாகச் சொல்கிறார்கள்” என்றார்.

நாராயணன்
நாராயணன்

ரஜினியைவைத்து சி.வி.சண்முகம் விமர்சித்துப் பேசியது குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் பேசியபோது,``ரஜினிக்கும் சமூகநீதிக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. எனவே, சி.வி.சண்முகம் அப்படிப் பேசியிருக்கிறார். ஆனாலும், தேர்தல் நேரத்தில் ரஜினியைப் பற்றி தேவையில்லாமல் பேச வேண்டாம் என்று அ.தி.மு.க தலைமை நினைக்கிறது. இனிமேல் அமைச்சர்கள் உட்பட அ.தி.மு.க-வினர் யாரும் ரஜினியைப் பற்றிப் பேச மாட்டார்கள்” என்றனர்.

ரஜினிக்குக் கூடவா பயப்படுகிறார்கள்?