Published:Updated:

`குரலை உயர்த்திப் பேசுவதால் எந்தப் பயனுமில்லை!- அயோத்தி வழக்கு இறுதி விசாரணையில் தலைமை நீதிபதி

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றுடன் நிறைவடையவுள்ளதால், உச்சநீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்றது.

அயோத்தி
அயோத்தி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பகுதியை இந்து, இஸ்லாமியர் எனப் பல்வேறு அமைப்புகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இதுதொடர்பான வழக்கு பல வருடங்களாக உச்சநீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த விவகாரத்தில் அயோத்தி நிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அலகாபாத் நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. பின்னர், அயோத்தி வழக்கு, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள்தோறும் விசாரணை நடைபெற்று வருகிறது. வாரத்துக்கு ஐந்து நாள்கள் என இதுவரை 39 நாள்கள் விசாரணை நடைபெற்றுள்ளது.

40-வது மற்றும் இறுதி நாளான இன்று கூடிய அமர்வில் முதலில் பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், `இந்த வழக்கு விசாரணை இன்று மாலை ஐந்து மணியுடன் நிறைவடைகிறது. இதில் நாங்கள் போதுமான அளவு விசாரணை நடத்திவிட்டோம். இறுதி நாளாக இன்று தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க அனைவருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது’ எனக் கூறினார்.

ராஜீவ் தாவன்
ராஜீவ் தாவன்

பின்னர், அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் வாதங்களைத் தொடங்கினர். அயோத்தி வழக்கு விசாரணை தொடங்கியது முதல் உச்சநீதிமன்றத்தில் காரசாரமான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று இறுதி விவாதம் என்பதால் முன் எப்போதும் இல்லாத அளவு கோபங்களும், விவாதங்களும் மிகவும் அதிகமாகவே இருந்தன.

இந்து அமைப்பினர் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிஷோர் குணால் எழுதிய `அயோத்தியா மீள்பார்வை’ என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளை மேற்கோள் காட்டி பேசிக்கொண்டிருந்தார். முன்னதாக அயோத்தியிலிருந்த ராமர் கோயில் வரைபடங்களையும் அந்தப் புத்தகத்தையும் நீதிபதிகளின் முன்பும் எதிர் தரப்பினரிடமும் சமர்ப்பித்தார்.

` பட்டாசு வெடிக்கக் கூடாது; ட்ரோன் பறக்கக் கூடாது!' -உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி

விகாஸ் சிங்கின் வாதங்களை முற்றிலும் மறுத்த இஸ்லாமிய அமைப்புகள் தரப்பு மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தாவன், `இந்த நீதிமன்றம் ஏதோ ஒரு புத்தகத்தை சாட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இறுதி நாள் விசாரணையில் புத்தகத்தை ஆதாரமாகக் கொடுத்தால் நீதிபதிகள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வோம்?’ எனக் கூறி விகாஸ் அளித்த அயோத்தி புத்தகத்தின் பக்கங்களையும் வரைபடங்களையும் சரமாரியாகக் கிழித்தெறிந்தார்.

ரஞ்சன் கோகாய்
ரஞ்சன் கோகாய்

ராஜீவ் தவானின் செயலால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், `மிக முக்கியமான வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்கள் இப்படி நடந்துகொள்வது முறையல்ல. இதேநிலை தொடர்ந்தால் விசாரணையைத் தொடராமல் நாங்கள் எழுந்து சென்றுவிடுவோம். நீங்கள் கொடுக்கும் எழுத்துபூர்வமான சாட்சியங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதை விடுத்து நீதிமன்றத்தில் குரலை உயர்த்திப் பேசுவதால் எந்தப் பயனும் இல்லை’ எனத் தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

` பட்டாசு வெடிக்கக் கூடாது; ட்ரோன் பறக்கக் கூடாது!' -உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி

இதைத் தொடர்ந்து மற்ற வழக்கறிஞர்கள் நீதிபதிகளைச் சமாதானப்படுத்தினர். பின்னர் வழக்கம் போல் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சமரச குழுவும் தங்கள் வாதங்களை முன்வைத்தது.

அயோத்தி வழக்கு
அயோத்தி வழக்கு

நாட்டின் மிக முக்கிய வழக்காகக் கருதப்படும் அயோத்தி வழக்கின் இறுதி விசாரணையின்போது வழக்கறிஞர்களுக்குள் நடந்த இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவைடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17-ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். அதற்குள் அயோத்தி விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.