Published:Updated:

பீகார் தேர்தல்: தேஜஸ்விக்குத் துணை நின்ற தோழர்கள்…கம்யூனிஸ்ட் வெற்றி சாத்தியமானது எப்படி?

கம்யூனிஸ்ட் கொடி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ., சி.பி.ஐ (எம்), சி.பி.ஐ (எம்.எல்) ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் 29 இடங்களில் போட்டியிட்டு, 18 தொகுதியில் வெற்றிபெற்றிருக்கின்றன. இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது?

Published:Updated:

பீகார் தேர்தல்: தேஜஸ்விக்குத் துணை நின்ற தோழர்கள்…கம்யூனிஸ்ட் வெற்றி சாத்தியமானது எப்படி?

பீகார் சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ., சி.பி.ஐ (எம்), சி.பி.ஐ (எம்.எல்) ஆகிய மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் 29 இடங்களில் போட்டியிட்டு, 18 தொகுதியில் வெற்றிபெற்றிருக்கின்றன. இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது?

கம்யூனிஸ்ட் கொடி

பீகார் சட்டமன்றத் தேர்தலில் கடுமையான இழுபறிக்குப் பிறகு பா.ஜ.க – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. இந்தத் தேர்தலில் கவனிக்கத்தக்க, விவாதிக்கக்கூடிய விஷயங்கள் ஏராளம் உண்டு. அவற்றில், சி.பி.ஐ., சி.பி.ஐ (எம்), சி.பி.ஐ (எம்.எல் - லிபரேஷன்) ஆகிய கட்சிகள் பெற்றிருக்கும் வெற்றி கவனத்துக்குரியது. தேஜஸ்வி தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற இந்த மூன்று கட்சிகளுக்கு மொத்தம் 29 இடங்கள் ஒதுக்கப்பட்டன. சி.பி.ஐ (எம்.எல் – லிபரேஷன்) 19 இடங்களிலும், சி.பி.ஐ ஆறு இடங்களிலும், சி.பி.ஐ (எம்) நான்கு இடங்களிலும் போட்டியிட்டன. இவற்றில், சி.பி.ஐ (எம்.எல் - லிபரேஷன்) 12 இடங்களிலும், சி.பி.ஐ மற்றும் சி.பி.ஐ (எம்) தலா இரண்டு இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்தில், அதாவது காலை 11:30 மணி அளவில் மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளின் வெற்றி 13 தொகுதிகளில் உறுதிசெய்யப்பட்டுவிட்டன. இவை தவிர, மேலும் மூன்று தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர். தற்போது, மொத்தம் 16 பேர் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.

நிதிஷ் குமார் - தேஜஸ்வி
நிதிஷ் குமார் - தேஜஸ்வி

சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதன் பிறகும் பீகாரில் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு வலுவான அடித்தளம் உண்டு. தொழிற்சங்கம், ஆசிரியர் அமைப்பு, விவசாயிகள் சங்கம், கலை இலக்கிய அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தீவிரமான செயல்பாடுகள் மூலம் பீகாரில் இடதுசாரி இயக்கம் வளர்ச்சி பெற்றது. சுதந்திரத்துக்குப் பிறகு, பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தேர்வுபெற்றிருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில், இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியில் சற்றுத் தேக்கம் ஏற்பட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் (2015), சி.பி.ஐ (எம்.எல் - லிபரேஷன்) 98 இடங்களில் போட்டியிட்டு, மூன்று தொகுதிகளில் வெற்றிபெற்றது. சி.பி.ஐ 98 இடங்களிலும், சி.பி.ஐ (எம்) 43 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால், ஒரு தொகுதியில்கூட இரு கட்சிகளும் வெற்றிபெறவில்லை. இந்தத் தேர்தலில், மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கிடைத்திருக்கும் வெற்றி, இடதுசாரிகளுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.

கம்யூனிஸ்ட் வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள். இளைஞர்கள் மற்றும் மாணவர் தலைவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்வம்காட்டின. சி.பி.ஐ (எம்.எல் – லிபரேஷன்) வேட்பாளர்களில் ஆறு பேர் 35 வயதுக்கும் குறைவானர்கள், பத்துப் பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் பொதுச்செயலாளரான சந்தீப் சௌரவ், இந்தத் தேர்தலில் சி.பி.ஐ (எம்.எல்) வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.

அவர், ஐக்கிய ஜனதா தள வேட்பாளரை 30,915 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர், தேர்லில் போட்டியிடுவதற்காக, கல்லூரி உதவிப் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்தார். மனோஜ் மன்ஸில் என்ற 36 வயதான இளைஞர் சி.பி.ஐ (எம்.எல்) வேட்பாளராக அஜியோன் தொகுதியில் களமிறக்கப்பட்டு, 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவர், பீகாரில் வேலையில்லாத் திண்டாட்டத்துக்கு எதிராக நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்.

யெச்சூரி
யெச்சூரி

இந்த வெற்றி குறித்துப் பேசிய சி.பி.ஐ (எம்.எல் - லிபரேஷன்) கட்சியின் பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, ``மாணவர் தலைவர்கள், விவசாயிகளுக்கான போராட்டங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் ஆகியோரையே வேட்பாளர்களாக நிறுத்தினோம். அதுவே, எங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பீகார் அரசியல் களத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பங்கு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு உறுப்பினரான த.லெனினிடம் பேசினோம்.

``சுதந்திரப் போராட்டக் காலத்தில் மேற்குவங்கமும் பீகாரும் ஒன்றாக இருந்தன. அப்போது, கம்யூனிஸ்ட்களின் செல்வாக்குமிக்க பகுதியாக பீகார் இருந்தது. ஆரம்பத்தில் விவசாயிகளின் போராட்டம்தான் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. புகழ்பெற்ற எழுத்தாளர் ராகுல் ஜி எனப்படும் ராகுல சாங்கிருத்யாயன் ஆரம்பத்தில் சாமியாராக இருந்து, பௌத்த பிக்குவாக மாறி, பிறகு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவரைப்போலவே சாமியாராக இருந்த ஜகதானந்தா, பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

டி.ராஜா
டி.ராஜா

கிராமம்தோறும் விவசாய அமைப்புகள் வலுவாகக் கட்டமைக்கப்பட்டு, அதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியும் வளர்ச்சிபெற்றது. பிகுசாராய் உள்ளிட்ட தொழில் நகரங்களில் தொழிற்சங்கம் பெரிதாக வளர்ந்தது. `இப்தா’ எனப்படும் இந்திய முற்போக்கு நாடக இயக்கம், பீகார் மக்கள் மத்தியில் தீவிரமாக இயங்கியது. அதிலிருந்து ஏராளமான கவிஞர்களும் கலைஞர்களும் உருவானார்கள். அங்கு ஆசிரியர் அமைப்பு மிக வலுவானதாக இருந்தது. ஒருகாலத்தில், கம்யூனிஸ்ட் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏராளமான ஆசிரியர்கள் எம்.எல்.ஏ-க்களாக வெற்றிபெற்றனர்.

கூட்டணியில் இருந்தபோது எட்டு எம்.பி-க்கள், கூட்டணியில் இல்லாதபோது நான்கு எம்.பி-க்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். தலைநகர் பாட்னாவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. அதுபோல, மலைப்பகுதிகளில் பழங்குடி மக்கள் மத்தியிலும், தலித் மக்கள் மத்தியிலும் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெற்றது.

மண்டல்குழு பரிந்துரைக்குப் பிறகு ஒரு மாற்றம் ஏற்பட்டது. மண்டல்குழு பரிந்துரையை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டபோதிலும், ஜனதா தளம் உருவானபோது, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒரு பகுதியினர் ஜனதா தளத்துக்குப் போனார்கள். அது ஒரு பின்னடைவை கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்படுத்தியது. ஆனாலும்கூட, இன்றைக்கும் பீகார் முழுவதும் அனைத்துப் பகுதி மக்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்ற கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சிகள் விளங்குகின்றன. தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களின் பிரச்னைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவருகின்றன. இந்தநிலையில்தான், பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மகாகத்பந்தன் கூட்டணியில் மூன்று கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு, மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கின்றன” என்றார் லெனின்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரான கன்ஹையா குமார் பீகாரைச் சேர்ந்தவர். பீகார் அரசியலில் அவர் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக இருக்கும் அவர், 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றார். தற்போதைய சட்டமன்றத் தேர்தலிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். அவர் பங்கேற்ற பிரசாரக் கூட்டங்களில் ஏராளமான இளைஞர்கள் திரண்டனர். பீகாரில் சமூக வலைதளங்களிலும் இடதுசாரி இளைஞர்கள் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்ஹையா குமார்
கன்ஹையா குமார்

இந்தச் சட்டமன்றத் தேர்தலில் சி.பி.ஐ (எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ பொதுச்செயலாளர் (டி.ராஜா), சி.பி.ஐ (எம்.எல்) பொதுச்செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா ஆகியோர் மிகத் தீவிரமாக பங்காற்றியிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ``எங்களுக்கு அதிகமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தால், இன்னும் கூடுதலான தொகுதிகளில் வெற்றிபெற்றிருப்போம். மகாகந்த்பந்தன் கூட்டணிக்கு இன்னும் அதிகமான வெற்றியைத் தேடித் தந்திருப்போம். இடதுசாரிகளை யாரும் நிராகரிக்க முடியாது என்பதை பீகார் தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியைவிட கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக சதவிகிதத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. மகாகத்பந்தன் கூட்டணியில் தங்களுக்கு அதிகமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்பார்ப்பு. காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள், கம்யூனிஸ்ட்களுக்கு 50 இடங்கள் என்று ஒதுக்கப்பட்டிருந்தால், அது நியாயமானதாக இருந்திருக்கும் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிலர் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், தேஜஸ்விக்கு அது இன்னும் பலம் சேர்த்திருக்கும்.