Published:Updated:

`நவம்பரில் சட்டமன்றத் தேர்தல்; காய் நகர்த்தும் அ.தி.மு.க!’- `அலர்ட்' செய்த துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

``நவம்பரிலேயே தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரலாம். அதற்கான திட்டத்துடன் அ.தி.மு.க காய் நகர்த்துகிறது’’ என்று துரைமுருகன் கூறியிருக்கிறார்.

வேலூர் மாவட்ட தி.மு.க சார்பில், பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க பொருளாளர் துரைமுருகன், ``தினமும் ஆயிரம் வேலைகள் இருக்கும்போது, மாவட்டச் செயற் கூட்டத்தில் துரைமுருகன் கலந்துகொள்கிறார் என்று தலைமைக் கழகத்திலிருப்பவர்கள் என்னைப் பார்த்து கேலி செய்கிறார்கள்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

அதற்கு, நீங்க பாட்டுக்கு ஓர் நாள் என்னை அம்போனு விட்டுட்டு போய்டுவீங்க... எனக்கு எங்க ஆளுங்க முக்கியம்’னு சொல்வேன். உட்கட்சித் தேர்தலில் குறைபாடு இருப்பது உண்மைதான். கல்யாண மண்டபத்தில் அமர்ந்துகொண்டு ஒன்றிய செயலாளரோ நகரச் செயலாளரோ கூட்டம் நடத்தினால் மறுநாள் முரசொலியில் கட்டம் கட்டிடுவேன். வரும் நவம்பர் மாதத்திலேயே சட்டமன்றத் தேர்தல் வரலாம். அதற்கான திட்டத்தை அ.தி.மு.க வகுத்துள்ளது.

கொஞ்சம்கூட சோம்பல் இல்லாமல் கட்சிப் பணியை செய்ய வேண்டும். கலைஞரைவிட ஸ்டாலினிடம் போராட்டக் குணத்தை அதிகமாகப் பார்க்கிறேன். எதற்கெடுத்தாலும் அறிக்கைவிட்டு விளாசுகிறார். தொண்டர்களிடமும் அதேபோன்ற போராட்ட குணம் இருக்க வேண்டும். மத்திய அரசின் நிதிக்குழு, மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குகிறது. நாம் இருவர் நமக்கு இருவர்... நாம் இருவர் நமக்கு ஒருவர்... நாமே இருவர் நமக்கு ஏன் ஒருவர்? என்று சொல்லிச் சொல்லி குடும்பக் கட்டுப்பாடு செய்து தமிழகத்தில் மக்கள் தொகையை ஒழித்துவிட்டார்கள்.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்

அதனால்தான் நிதியையும் குறைத்துவிட்டார்கள். வடநாட்டில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. செஞ்சுரி அடிப்பதைப்போல் குழந்தையைப் பெற்றுக்கொள்கிறார்கள். நிதி அமைச்சகத்தின் அநியாயம் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையை நாடே திரும்பிப் பார்த்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, ஸ்டாலின் தூங்கியிருந்தால் தி.மு.க இந்த அளவுக்கு வெற்றிபெற்றிருக்க முடியாது. பணம் மட்டுமே வெற்றிபெறும் என்றால் தி.மு.க செத்து அந்த இடத்தில் முள் முளைத்திருக்கும்.

போராட்டக் குணத்துடன் கட்சியைப் பற்றி தெரிந்துகொள்ள முரசொலியைப் படிக்க வேண்டும். `நான் சர்வாதிகாரியாக இருப்பேன்’ என்று பொதுக்குழுவில் கலைஞரே சொல்லியிருக்கிறார். கட்சி வேலை செய்யவில்லை என்றால் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இல்லையெனில் யாராக இருந்தாலும் ஒதுக்கப்படுவார்கள். ராத்திரியில் சாப்பிடும்போது பொண்டாட்டியைப் பார்த்து ஒருவன் கேட்பானாம். `மதியானம் என்ன குழம்பு வச்சனு...’ மதியம் வச்ச குழம்பையே மறந்திட்டான். அவள் சொல்லுவாளாம், `முருங்கைக்காய் சாம்பாரை முழங்கை வரை சாப்பிட்டய்யா... என்று.

துரைமுருகன்
துரைமுருகன்

அதைப்போலத்தான் மக்களும் மறந்துவிடுகிறார்கள். நம்ம ஊர்ல விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு சித்தப்பன் ராமன் என்பார்கள். அதனால்தான் ராமாயணத்தைத் திரும்பி திரும்பி எடுத்துச் சொல்கிறார்கள். அ.தி.மு.க ஆட்சியின் ஊழலை மக்களுக்கு அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்’’ என்று தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் பேச்சை முடித்துக்கொண்டார் துரைமுருகன்.

அடுத்த கட்டுரைக்கு