Published:Updated:

ஸ்டாலின்: `புத்தகப்பையில் ஜெ., இ.பி.எஸ் படங்களே இருக்கட்டும்!' - காரணம் பெருந்தன்மையா, நிதிநிலையா?

புத்தகப்பை
புத்தகப்பை ( புதிய தலைமுறை )

``முன்னாள் முதல்வர்களின் படங்கள் அப்படியே இருக்கட்டும் என முதல்வர் கூறியதற்கு நிதிதான் காரணம். இதில் பெருந்தன்மை ஒன்றும் இல்லை'' என்கிற கருத்துகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா புத்தகப் பையில் இடம்பெற்றுள்ள முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் புகைப்படங்களை மாற்ற வேண்டாம்' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டமன்றத்தில் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, 'முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறார்' எனப் பலதரப்பிலிருந்தும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அளித்த பதிலுரையில், ''கடந்த 10 ஆண்டுகளில் இந்தத் துறைக்கு ஒன்பது அமைச்சர்கள் மாற்றப்பட்டு, மியூசிக்கல் சேர்போல விளையாடியிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட 65 லட்சம் விலையில்லா புத்தகப்பைகளில் முன்னாள் அதிமுக முதலமைச்சர்களின் (எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா) புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அது குறித்து, முதலமைச்சரிடம் ஆலோசனை மேற்கொண்டபோது, 13 கோடி ரூபாய் செலவில் அதை மாற்றலாம் என்று கூறினோம். ஆனால், முதல்வரோ, 'இது மக்களின் வரிப்பணம், 13 கோடி ரூபாய் இருந்தால் அதைப் பள்ளி மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் வேறு திட்டத்தைச் செயல்படுத்துவேன். அந்தப் புத்தகப்பைகளில் அவர்களின் படமே இருந்துவிட்டுப் போகட்டும்' எனப் பெருந்தன்மையுடன் பேசி அதை விட்டுக்கொடுத்தார்'' என்றார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

ஆட்சி மாறினால் முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்குவது, அவர்களின் அடையாளங்களை மாற்றுவது என்றிருந்த தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர் ஸ்டாலினின் இந்தப் புதிய அணுகுமுறை அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக அம்மா உணவகம் தொடங்கி தலைமைச் செயலகம் வரை இதே பாணியைத்தான் கடைப்பிடித்துவருகிறார் ஸ்டாலின். ஆனால், ''முன்னாள் முதல்வர்களின் படங்கள் அப்படியே இருக்கட்டும் என முதல்வர் கூறியதற்கு நிதிதான் காரணம். இதில் பெருந்தன்மை ஒன்றும் இல்லை'' என்கிற கருத்துகள் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன.

இது குறித்து, பல்விக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசும்போது,

``ஏற்கெனவே தயாரான பைகளை மாணவர்களுக்குக் கொடுத்துவிடலாம். படங்களுக்காகப் புதிதாக வாங்கினால் செலவு அதிகமாகிவிடும் என்கிற நிதி அடிப்படையிலான கண்ணோட்டத்தில்தான் முதல்வர் அப்படிச் சொல்லியிருக்கிறார். அதுவும் இந்த ஆண்டுக்கு மட்டும்தான். உண்மையான பெருந்தன்மை என்பது, யாருடைய ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதோ அவர்கள் பெயரிலேயே திட்டத்தை செயல்படுத்துவதுதான். அதன்படி, புரட்சித்தலைவி அம்மாவால் கொண்டுவரபட்ட 14 அம்சத் திட்டங்களில் ஒன்றுதான் இந்தப் பை வழங்குதலும். அதனால் அம்மாவின் பெயரிலும், அவருடைய புகைப்படைத்தோடும் இந்தத் திட்டத்தைத் தொடர்ந்தால் அதுதான் உண்மையான பெருந்தன்மையாகக் கருதப்படும்'' என்கிறார் அவர்.

வைகைச்செல்வன்
வைகைச்செல்வன்

இந்தநிலையில், ''ஊழல் குற்றவாளி எனச் சொல்லி சட்டமன்றத்துக்குள் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அவரின் படம் புத்தகப்பையில் இருக்கட்டும் எனச் சொல்வது இதன்மூலம் கிடைக்கும் விளம்பரத்துக்காக மட்டும்தான்'' என்கிற கருத்துகளையும் சிலர் முன்வைக்கின்றனர்.

இது குறித்து, சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன் பேசும்போது,

''நாங்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்தோம் என்பது உண்மைதான். ஆனால், ஜெயலலிதா அம்மையாரின் படத்தைப் பயன்படுத்தக் கூடாது எனச் சட்டப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. அதனால் இதில் ஒன்றும் தவறில்லை. நிதிக்காக மட்டுமே முதல்வர் இப்படிச் சொல்லியிருக்கிறார் என்பது சரியல்ல. நிதி ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் முதல்வரிடமிருந்து வெளிப்படுவது அவரின் பெருந்தன்மைதான். இந்த விஷயத்தில் மட்டுமல்ல, எங்களுக்குச் சட்டமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள டேப், எங்கள் இருக்கையில் இருக்கும் மானிட்டர், கொரோனா காலத்தில் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட 14 மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட எதிலும் தமிழக அரசின் இலச்சினைதான் இருக்கிறதே தவிர முதல்வரின் படம் இல்லை.

ஸ்ட்ராங் ஸ்டாலின்.. பதறும் எடப்பாடி & கோ! - கொடநாடு கொலை வழக்கும் சில சம்பவங்களும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விஷயத்தில் எங்கள் தலைவர் ஸ்டாலின், அவரின் தந்தையும் எங்கள் தலைவருமான கலைஞரைப் பின்பற்றுகிறார். சத்துணவுத் திட்டத்துக்கு. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என்கிற பெயரே தொடருட்டும் என பெருந்தன்மையோடு நடந்துகொண்டதைப் போலத்தான் எங்கள் தலைவர் ஸ்டாலினும் நடந்துகொள்கிறார். இந்தப் பெருந்தன்மையை நாம் ஜெயலலிதாவிடம் பார்க்க முடியாது; எடப்பாடி பழனிசாமியிடமும் பார்க்கமுடியாது'' என்றார்.

பரந்தாமன்
பரந்தாமன்

முதல்வரின் இந்த அணுகுமுறை குறித்து எழுத்தாளரும், அரசுப் பள்ளித் தலைமையாசிரியருமான பரமேஸ்வரி பேசும்போது,

``உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம் இது. முதல்வர் ஸ்டாலின் மாறுபட்ட பார்வையோடும், பெருந்தன்மையோடும் இந்த விஷயத்தில் செயல்பட்டிருக்கிறார். இனிவரும் காலங்களிலும் இந்த அரசு புத்தகப்பை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது, அதில் அரசின் இலச்சினை மட்டுமே இருந்தால், எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் கொடுப்பதற்கு வசதியாக இருக்கும். தனிப்பட்ட நபர்களின் படங்களைப் போடும்போதுதான் தேவையில்லாத சிக்கல்கள் எழும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசு இயந்திரத்துக்குள், அரசின் நலத்திட்டங்களுக்குள் அரசியலைக் கொண்டு வராமல் இருப்பதே நல்லது. அதற்கான விதையை முதல்வர் ஸ்டாலின் தூவியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கல்வித்துறையிலும் சுகாதாரத்துறையிலும்தான் அதிகமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதனால் இது மற்ற துறைகளுக்கும் முன்னுதாரணமாக அமையும். இனி ஆட்சிக்கு வருகிறவர்களுகும் அரசுப் பணத்தை வீணடிக்காமல் இருப்பதற்கு இது வழிகாட்டும்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு