Published:Updated:

‘‘எங்கள் உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!’’

ராமதாஸ் - அன்புமணி
பிரீமியம் ஸ்டோரி
ராமதாஸ் - அன்புமணி

எங்கள் பிழைப்புதான் தெருவில் கிடக்கிறது. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.தோள்பட்டையில் அக்னிக்கலச டாட்டூ, வாய்நிறைய சிரிப்புடன் உங்களின் புகைப்படம் ஒன்றைச் சமீபத்தில் கண்டேன் சின்னய்யா

‘‘எங்கள் உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!’’

எங்கள் பிழைப்புதான் தெருவில் கிடக்கிறது. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.தோள்பட்டையில் அக்னிக்கலச டாட்டூ, வாய்நிறைய சிரிப்புடன் உங்களின் புகைப்படம் ஒன்றைச் சமீபத்தில் கண்டேன் சின்னய்யா

Published:Updated:
ராமதாஸ் - அன்புமணி
பிரீமியம் ஸ்டோரி
ராமதாஸ் - அன்புமணி

தன்னலமற்ற (?) ஐயாக்களுக்கு...

நலமா?

உங்களுக்கென்ன நலமாகத்தான் இருப்பீர்கள்!

எங்கள் பிழைப்புதான் தெருவில் கிடக்கிறது. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.தோள்பட்டையில் அக்னிக்கலச டாட்டூ, வாய்நிறைய சிரிப்புடன் உங்களின் புகைப்படம் ஒன்றைச் சமீபத்தில் கண்டேன் சின்னய்யா... முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நானும் இப்படித்தான் வீராவேசமாக ‘பச்சை’ குத்திக்கொண்டு

இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் குதித்தேன். நம் கட்சிக்காகவும் பெரியய்யாவுக்காகவும் வழக்குகள் பல வாங்கி, இன்று அன்றாடப் பிழைப்புக்கே அல்லாடுகிறேன். ஆனால், நீங்களும் உங்கள் குடும்பமும் மட்டும் தேர்தலுக்குத் தேர்தல் தோற்றாலும் ஜெயித்தாலும் கோடீஸ்வரர்களாகச் செழிக்கிறீர்களே... அந்த செப்படி வித்தை எப்படி சின்னய்யா?

ஐயா... பெரியய்யா... கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, நம் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. அதில் நானும் கலந்துகொண்டேன். ‘இவ்வளவு ஆண்டுகளாகியும் நம் கட்சி ஆட்சியைப் பிடிக்காமல் போக, ராமதாஸே... நீதான் காரணம்’ என ஆரம்ப உரையில் அசத்தலாக உங்களை நீங்களே குறிப்பிட்டுப் பேசினீர்கள். ‘அடடா... நம் பெரியய்யா தன் தவறை உணர்ந்துவிட்டார்; ஐயோ தெய்வமே... என் தலைவர் திருந்திவிட்டார்’ எனப் புளகாங்கிதமடைந்தேன். ஆனால், சில நிமிடங்களிலேயே ‘நம் கட்சியின் வெற்றியைப் பறிக்க சண்டாளர்கள், சதிகாரர்கள், சகுனிகள் கிளம்பியிருக்கிறார்கள்’ எனப் பழைய பல்லவி பாடி, பற்றியெரிந்த அக்னிச் சட்டியை அணைத்துவிட்டீர்கள். அதிர்ந்துபோனோம் ஐயா. போதும் ஐயா... போதும்! மற்றவர்களைக் குறைசொல்லி, சாதியைச் சொல்லி எங்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, நீங்கள் பிழைத்ததும்... நாங்கள் இழந்ததும் போதும். இனியாவது நிறுத்திக்கொள்ளுங்கள்!

நினைவிருக்கிறதா ஐயா... வன்னியர் சங்கத்தை அரசியல் இயக்கமாக நீங்கள் மாற்றியபோது, சில கொள்கைகளைப் பட்டியலிட்டு, ‘இவற்றை மீறினால் நடுரோட்டில் நிற்கவைத்து சவுக்கால் அடியுங்கள்’ என்று உங்கள் தாய்மீது சத்தியம் செய்தீர்கள். பின்னாளில் நீங்களே அதை மீறியபோது, உங்களைத் தவிர ஒவ்வொரு பாட்டாளித் தொண்டனும் நடுத்தெருவில் சவுக்கடி வாங்கினான். அவமானத்தால் கூனிக்குறுகிப்போனோம். நீங்களோ முழு ‘அரசியல்வாதி’ ஆகியிருந்தீர்கள். நான் அப்போதாவது திருந்தியிருக்க வேண்டும். விதி யாரை விட்டது?!

ஐயா, நம் கட்சியின் வீழ்ச்சிக்கு வெளியே இருக்கும் யாரும் காரணம் இல்லை. உங்கள் தைலாபுரம் தோட்டத்தில் வேண்டுமானால் தேடிப்பாருங்கள். காரணம் நிச்சயம் கிடைக்கக்கூடும். ‘திராவிடக் கட்சிகளுக்கு மாற்று’ என்று கட்சியை ஆரம்பித்து, சொல்லொன்றும் செயலொன்றுமாக அவர்களுடனேயே கூட்டணி வைத்தீர்கள். உங்கள் மகன் மத்திய அமைச்சரானதும், அதிகார மயக்கத்தில், பதவிக் கிறக்கத்தில் அரசியல் பாதையில் தடம்புரண்டீர்கள். மாறி... மாறி... மாறி... நீங்கள் கூட்டணி மாறியதில் எங்கள் பாதங்கள் புண்ணாகிப்போயின.

‘‘எங்கள் உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை நிறுத்துங்கள்!’’

திராவிடக் கட்சிகளுடன் பிணக்கேற்பட்டதும், ஆளுங்கட்சியின் ஊழல்களைப் பட்டியலிட்டு, ‘கார் உள்ளளவும், கடல் நீர் உள்ளளவும், பார் உள்ளளவும், பைந்தமிழ் உள்ளளவும் - தி.மு.க, அ.தி.மு.க - திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை’ என்று நீங்கள் பேசிய வசனத்தால் தலைநிமிர்ந்து திரிந்தேன். உங்களின் வீராவேசப் பேச்சுகளை நம்பி, நாவறண்டு திராவிடக் கட்சிகளுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தேன். நீங்களோ 80 வகை அறுசுவை உணவுகளுடனும் அவர்களை வரவேற்று, உங்கள் பண்ணை வீட்டில் விருந்தளித்தீர்கள். போதும் போதுமென உங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக்கொண்டீர்கள்.

தற்போது வன்னியர்களுக்கான 20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டுக்காகக் குரல் கொடுக்கும் நீங்கள், மத்திய அமைச்சரவைகளில் இருந்தபோது வாய்மூடிக் கிடந்தீர்களே... ஏன்? அதை விடுங்கள், வன்னியர் கல்வி அறக்கட்டளை உருவாக்க முன்னின்றீர்கள். ‘உலகெங்கும் வாழும் வன்னியர்களுக்கான கல்விக்கோயிலாக அது இருக்கும், ஒரு ரூபாய்கூட கொடுக்்காமல் வன்னியக் குழந்தைகள் அங்கே படிக்கலாம் என்று வாய்கிழிய அளந்துவிட்டீர்கள். அப்படி, ஒரு ரூபாய்கூட செலுத்தாமல் படித்த ஒரு வன்னிய மாணவரைக் காட்ட முடியுமா ஐயா? கட்சிக்காக உழைத்த, வழக்கு வாங்கிய கட்சி நிர்வாகிகளின் பிள்ளைகளுக்கு ஆயிரம், ஐநூறு ரூபாய் கட்டணக் குறைப்பாவது அங்கு உண்டா? கேட்டால், `கட்சி வேறு; கல்லூரி வேறு’ என்கிறீர்கள். ஆஹா, அற்புதமான விளக்கம் ஐயா!

மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், இட ஒதுக்கீட்டுக்காக உயிர்நீத்த 21 தியாகிகளின் குடும்பங்கள் இப்போது எப்படி இருக்கின்றன... உங்களின் குடும்பம் எப்படி இருக்கிறது? நீங்கள் பெற்றுக்கொடுத்த இட ஒதுக்கீட்டுக்கு நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். ஆனால், இன்று நீங்கள் அனுபவிக்கும் சுகபோகங்களுக்குக் காரணமான தியாகிகளுக்கு உண்மையாக இருக்கிறீர்களா? `பாட்டாளிகளுக்கான கட்சி’ என்றீர்கள், ஆனால் நீங்கள் பண்ணையார்கள்போலத்தானே நடந்துகொள்கிறீர்கள்... உங்கள் குடும்ப வாரிசுகளுக்கு அடிமை வேலை பார்க்க, இன்னும் எத்தனை இளைஞர்கள் வாழ்வை இழக்க வேண்டும் ஐயா?

வன்னியர்களின் கோவணத்தை உருவியவர் என ஒரு தலைவரை நீங்கள் அடிக்கடிச் சொல்வீர்கள்... அவராவது பரவாயில்லை, கோவணத்தைத்தான் உருவினார்... ஆனால், நீங்கள்?

இதையெல்லாம் தட்டிக்கேட்ட எத்தனை எத்தனை தலைவர்களை, கட்சியைவிட்டு விரட்டீனீர்கள்... உங்கள் மகனுக்குப் போட்டியாக வந்துவிடுவார்கள் என எத்தனை எத்தனை தளபதிகளைக் கட்டம்கட்டி அனுப்பினீர்கள்... தானாக வெளியில் சென்றவர்களுக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுத்தீர்கள்?

போதும் ஐயா... போதும். இனியேனும் எங்கள் உணர்வுகளைத் தூண்டுவதை நிறுத்துங்கள். அரசிடம் இட ஒதுக்கீடு கேட்டுப் போராடும் நீங்கள், நம் கல்லூரிகளிலாவது வன்னிய இளைஞர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்க வழிசெய்யுங்கள்... இதுவரை நீங்கள் செய்த துரோகங்களுக்குக் குறைந்தபட்சப் பரிகாரமாக அது இருக்கட்டும்.

இப்படிக்கு,

உங்களுக்காக ‘மரம் வெட்டி’ என்ற அவப்பெயரைத் தாங்கி நிற்கும் பாட்டாளி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism