Published:Updated:

உங்கள் குடும்பச் சொத்தா திராவிடர் கழகம்?

சமூகநீதியில் முன்னோடி மாநிலமான தமிழகத்தில் இன்னும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வர முடியவில்லையே

பிரீமியம் ஸ்டோரி

வணக்கம் ஆசிரியரே,

`ஆசிரியர்’ என்றால் கற்றுத்தருகிறவர். யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்... கடந்த முப்பது ஆண்டுகளில் அப்படி நீங்கள் எதையும் கற்றுத்தந்ததாக நினைவிலேயே இல்லை. நாங்களாகப் பார்த்துக் கற்றுக்கொள்ளும்படி நீங்கள் ஏதேனும் செய்திருக்கிறீர்களா என்றால் சுத்தம்... ஒன்றுமே இல்லை. ஆனாலும், “மேடைகளில் என் பெயரைச் சொல்லக் கூடாது, ஆசிரியர் என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்று நீங்கள் இட்ட (அ)சமத்துவக் கட்டளையின்படி உங்களை `ஆசிரியர்’ என்றே அழைக்க வேண்டியதாக இருக்கிறது. போகட்டும்... பரவாயில்லை!

கடந்த 17-ம் தேதி, பெரியாரின் பிறந்தநாளன்று, பெரியார் வலைத் தொலைக்காட்சியில் உங்கள் பேச்சைக் கேட்டேன். அதே பழைய பல்லவியையே பாடிக்கொண்டிருந்தீர்கள். சலித்துப்போய்விட்டது... நீங்கள் திராவிடர் கழகத் தலைமையேற்ற பிறகு, இந்தச் சமூகத்துக்கு என்ன செய்தீர்கள்? இல்லை, இனிமேலாவது செய்ய என்ன திட்டமிருக்கிறது? அந்தப் பேச்சில் அப்படி ஒன்றுமே இல்லை. காரணம், உங்களுக்கு அப்படியோர் எண்ணம் எப்போதுமே இருந்ததில்லை.

யோசித்துப்பாருங்கள்... இன்றைக்குத் தமிழகத்தின் மிக மூத்த அரசியல்வாதி நீங்கள். ஆனால் அரசியல் களத்தில், கருத்து பரப்பலில் பலரும் முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்க... நீங்களோ பல மைல் தூரத்துக்குப் பின்னால் சில கறுப்புச் சட்டைத் தோழர்கள் வெண்சாமரம் வீச, ஜம்மென்று அமர்ந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு சுகவாசி நீங்கள்!

அவ்வப்போது சம்பிரதாயமாக சில அறிக்கைகள்... ஒப்புக்குச் சில கூட்டங்கள்... ‘திராவிடர் கழகம்’ எனும் இயக்கம் இன்று இருக்கிறதா என்று கேட்டுச் சிரிக்கிறார்கள்! தாய்க்கழத்தின் தலைமை என்றுதான் பெயர்... தி.மு.க-வுக்கும்

அ.தி.மு.க-வுக்கும் மாறி மாறி வால்பிடித்தது தவிர நீங்கள் சாதித்ததென்ன? எங்கே வீரியமான போராட்டங்களை நடத்தினால் வழக்கு வந்துவிடுமோ, பெரியார் அறக்கட்டளைச் சொத்துகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என அமைதி காக்கிறீர்கள்... அஞ்சி நடுங்குகிறீர்கள். பெரியாரின் கருத்துகளை மற்ற தோழர்கள் பரப்ப முற்பட்டாலும் வழக்குபோட்டுக் குடைச்சல் கொடுக்கிறீர்கள்! உங்களிடம் முடங்கிக்கிடந்த பெரியாரின் பேச்சுகள், எழுத்துகளை மீட்கவே மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியதாக இருந்ததே?

ஒப்புக்கு `ஆர்ப்பாட்டம்’ என்கிற பெயரில் ஐந்து நிமிடங்கள் கொடிபிடித்து, குரல் எழுப்புவது... அதிலும் உரக்க யாரேனும் முழக்கமிட்டால் “ரெய்டு வந்தால் யாருப்பா சமாளிக்கிறது?’’ என்கிறரீதியில் அவர்களின் வாயை மூடுவீர்கள். மீறியும் தொடர்ந்தால், இயக்கத்தைவிட்டு அனுப்பிவிடுவீர்கள். அடடா... இதுவல்லவோ திராவிடர் கழகம்!? `மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு’ என்கிற பெரியாரின் வாக்கியம் செவியில் அறைகிறது!

இயக்கத்துக்காகக் கடுமையாக உழைத்து, சொத்துகளை எழுதிவைத்து, உங்களுக்குக் காரோட்டி, உடன் நின்ற எத்தனையோ பேர் அரசாங்கத்தால் அடக்குமுறைக்கு ஆளானபோது, “அவர்களுக்கும் இந்த இயக்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை’’ என ‘விடுதலை’யில் கட்டம்கட்டி விலக்கிவைத்ததுதானே நீங்கள் செய்த உச்சபட்ச சரித்திர சாதனை... காரணம் கேட்டால், ‘இது வன்முறை இயக்கம் அல்ல, அறிவு இயக்கம்’ என்பீர்கள். அதைப் பரப்புவதையாவது ஒழுங்காகச் செய்தீர்களா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தலைமைச் செயலரைச் சந்தித்துவிட்டு வெளியே வந்த தயாநிதி மாறன், “நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?’’ என்று பத்திரிகையாளர்களிடம் கேட்டார். தமிழகமே கொந்தளித்தது. உங்களிடமிருந்தும் உடனடியாக ஓர் அறிக்கை வந்தது. தானும் தூங்கி, இயக்கத்தையும் தட்டித் தட்டித் தூங்கவைத்துக்கொண்டிருந்த ‘ஆசிரியர்’ விழித்துவிட்டாரா என ஆச்சர்யத்தோடு ஓடிப்போய் அறிக்கையை வாசித்தேன். அதில், தயாநிதி மாறனை மரியாதையாக நடத்தவில்லை என தலைமைச் செயலரைக் கண்டித்திருந்தீர்கள். தலையிலடித்துக்கொண்டு தண்ணீர் குடித்தேன். தயாநிதி மாறனின் வார்த்தைகள் குறித்து ஒப்புக்குக்கூட கண்டிப்பில்லை உங்களிடம். இதுதான் நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதன் லட்சணம்!

அதைவிடுங்கள்... ``சமூகநீதியில் முன்னோடி மாநிலமான தமிழகத்தில் இன்னும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வர முடியவில்லையே?’’ எனக் கேட்டால், உங்களுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. ``மக்களிடம் இன்னும் பக்குவம் வர வேண்டும். சாதி ஆதிக்க மனப்பான்மை மாற வேண்டும்’’ என்கிறீர்கள். சரி, மக்களுக்குத்தான் பக்குவம் வரவில்லை, நம் இயக்கங்களில்கூட, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் தலைவராக முடியவில்லையே ஏன்... இயக்கத்தில் யாருக்குப் பக்குவம் வர வேண்டும்?

பதவிகளை விடுங்கள், சாதிய ஆணவக்கொலைகளுக்கு எதிராக நீங்கள் முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டம் என ஒன்றைச் சொல்ல முடியுமா? இரண்டு திராவிடக் கட்சிகளும் சாதி பார்த்து பொறுப்பாளர்களையும் வேட்பாளர்களையும் களமிறக்குவது குறித்து என்றாவது நீங்கள் வாய் திறந்ததுண்டா? பெரியாருக்கே சாதிப் பட்டம் சூட்டிய உங்களிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? ‘பெரியார்’ திரைப்படத்தை ஆந்திராவில் ‘பெரியார் ராமசாமி நாயக்கர்’ என்று வெளியிட்ட உன்னத ‘சாதி ஒழிப்புப் போராளி’ அல்லவா நீங்கள்?

உங்கள் குடும்பச் சொத்தா திராவிடர் கழகம்?

உங்கள் பிறந்தநாளுக்கு எடைக்கு எடை தங்கம், வெள்ளி என இயக்கத் தோழர்கள் அள்ளி அள்ளிக் கொடுத்தது, நீங்கள் கேட்டதற்கெல்லாம் நிதி திரட்டிக் கொடுத்தது, நீங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கா? திராவிடர் கழகத்தை ‘திராவிடர் நிதிக் கழகமாக்கி, அதன் ‘சி.இ.ஓ’வாக அல்லவா கோலோச்சுகிறீர்கள்!

பெரியார் ஒரு நிகழ்வுக்கு வருகிறாரென்றால், அங்கே ஆயிரத்தில் கறுப்புச் சட்டைகளைக் காண முடியும். நீங்கள் தலைமையேற்ற புதிதில் அது ஐநூறானது. தற்போது, ஐம்பது பேரைப் பார்ப்பதற்கே நாக்குத் தள்ளுகிறது. தமிழகத்தின் ஒரு சில நகரங்களைத் தவிர, நம் அமைப்புக்கு மாவட்டத்துக்குப் பத்துப் பேர்கூட கிடையாது. உங்களைச் சுற்றி காலம்காலமாக நான்கு பணக்காரக் குடும்பங்கள்... உங்களுக்கு ஜால்ரா அடிக்க அவர்கள் போதும். அவர்களுக்குத்தான் பொறுப்புகள். புதிதாகச் சேர்பவர்களுக்கோ, அந்தக் குடும்பம் அல்லாத பிறருக்கோ இயக்கத்தில் எந்த உயர் பதவியும் கிடையாது. இப்போதோ உங்களுக்கடுத்து ‘திராவிடர் நிதிக் கழகத்தை’ ஆள, உங்கள் மகனாரும் பொதுச்செயலாளர் அவதாரமெடுத்து வந்துவிட்டார். உங்கள் வாழ்நாள் லட்சியம் இதோ நிறைவேறிவிட்டது!

மன்னராட்சியை ஒழித்து, மக்களாட்சி வந்தபிறகும்கூட, ஒருபக்கம் சமத்துவம் பேசிக்கொண்டு உங்கள் வாரிசுகளுக்கே பட்டம் சூட்டிக்கொள்வது எந்தக் கணக்கில் வரும் ஐயா?

பாவம் பெரியார்!

- ‘நிதி’ பற்றிக் கவலைப்படாத ‘சமூகநீதி’ களம் காணும் பெரியாரின் உண்மைத் தொண்டன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு