அரசியல்
Published:Updated:

இனி, தனியாக நமக்குக் கட்சி எதற்கு?

வைகோ
பிரீமியம் ஸ்டோரி
News
வைகோ

ஐந்து பெயர்களையும் நினைவூட்ட வேண்டியது ம.தி.மு.க-வின் தொண்டனாக என் கடமை.

மறுமலர்ச்சி காணாத அண்ணனுக்கு, வணக்கம்.

நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை காமராஜபுரம் பாலன், மேலப்பாளையம் ஜஹாங்கீர், உப்பிலியாபுரம் வீரப்பன் இந்தப் பெயர்களெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா அண்ணா... நிச்சயம் இருக்காது. ஏனென்றால், கலைஞரின் இரண்டாம் தலைமுறை வாரிசைப் பாராட்ட, கிரேக்க இலக்கியத்தில் வாக்கியங்களைத் தேடிக்கொண்டிருப்பீர்கள். அந்தோ... பரிதாபம்!

ஆனால், மேலேயிருக்கும் ஐந்து பெயர்களையும் நினைவூட்ட வேண்டியது ம.தி.மு.க-வின் தொண்டனாக என் கடமை. தி.மு.க-விலிருந்து உங்களைத் திட்டமிட்டு கருணாநிதி வெளியேற்ற நினைத்தபோது, உங்களுக்காகத் தீக்குளித்து உயிர்நீத்த ஐவரின் பெயர்கள்தாம் அவை. (நம் கட்சி இணையதளத்திலேயேகூட இன்னும் அப்படித்தான் இருக்கிறது). இன்று அவர்கள் நம்முடன் இல்லை. ஆனால் நீங்கள், யாருடைய அரசியல் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பீர்கள் என கருணாநிதி உங்களைக் கட்சியைவிட்டு வெளியேற்றினாரோ அவரை, மனக்கூச்சமே இன்றி ‘தளபதி... தளபதி...’ என அழைத்து ‘அவரை முதல்வராக்காமல் ஓய மாட்டேன்’ என முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எப்படித்தான் உங்களால் முடிகிறதோ?!

ஒரு மேடையில் ஸ்டாலின் வேட்டியில் டீ கொட்டிவிட, அவர்களின் கட்சி நிர்வாகிகளையும் முந்திக்கொண்டு வேக வேகமாகப் புயலெனப் பாய்ந்து அதைத் துடைத்தீர்கள். ‘புரட்சிப் புயல்’ என்ற உங்கள் பட்டத்துக்கு அநியாயம் செய்தீர்கள். அரசியல் வரலாற்றின் செங்குத்துப் படிகளில் நீங்கள் சறுக்கி சாய்ந்த காட்சி அது. ‘கருணாநிதி, தன் பட்டத்து இளவரசருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு நான் இடையூறாக இருப்பேன் என்பதற்காகக் கட்சியிலிருந்து வெளியேற்றினார்’ எனத் துண்டை முறுக்கியபடி அடிக்கடி குறிப்பிடுவீர்கள். ஆனால், அதே மகனுக்கு இன்று நீங்கள் ‘பணிவிடை’ செய்துகொண்டிருக்கிறீர்கள். என்னதான் ‘செய்தார்கள்’ உங்களுக்கு... ‘அந்த ரகசியம்’ சொல்லுங்கள் எங்களுக்கு!

`என்னையே சந்தேகப்படுகிறாயா?’ என்று நீங்கள் கர்ஜிக்கலாம். ‘ஆமாம்!’ என்று அழுத்திச் சொல்வேன். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, “விஜயகாந்த் உங்கள் கூட்டணிக்கு வருவாரா?” என்று கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “பழம் கனிந்துகொண்டிருக்கிறது. பாலில் விழும் என்று நினைக்கிறேன்” என்று அவர் சொல்ல, “பழம் நழுவிப் பாலில் விழலாம்... நஞ்சில் விழக் கூடாது” என்று கொக்கரித்தீர்கள். இன்று நீங்கள் எங்கே விழுந்துகிடக்கிறீர்கள்... விஜயகாந்த் விழுந்தால் நஞ்சு... நீங்கள் விழுந்தால் அமிர்தமா... அனர்த்தமாக இல்லையா? “ம.தி.மு.க என்றால் ‘மறுபடியும் தி.மு.க’ என கருணாநிதி சொன்னது உண்மைதான் என மெய்ப்பித்து நிற்கிறீர்களே அண்ணா?

உங்களின் ஈகோவால், முன் கோபத்தால், வெற்று வீராப்புப் பேச்சுகளால் நம் கட்சித் தொண்டர்களின் உழைப்பை எப்படியெல்லாம் விழலுக்கு இறைத்த நீர்போல வீணாக்கினீர்கள். தி.மு.க-வுடன் சேர்ந்தால் ‘அண்ணன் கலைஞர்’ என உருகி, ஜெயலலிதாவை வசைபாடுவது, ஜெயலலிதாவுடன் சேர்ந்தால் ‘அருமைச் சகோதரி’ என உருகி, கருணாநிதியை வசைபாடுவது, ‘மோடியால்தான் எல்லாம் முடியும்’ என்று காங்கிரஸை விமர்சிப்பது, ‘மோடியின் பாசிச ஆட்சியை விரட்ட காங்கிரஸுடன் கைகோக்க வேண்டும்’... எனக் கதறுவது என்று, உங்கள் நாக்கு ஆடிய நர்த்தனம் இருக்கிறதே... இலக்கியத்திலும் சொல்லாத இழுக்கு அது. ஒரு சீட்டு, இரண்டு சீட்டுக்காகத் தேர்தல் காலங்களில் நீங்கள் அடித்த பல்டிகளால், நம் கட்சி பட்ட அவமானம் இருக்கிறதே... சொல்லி மாளாது. தோளில் கிடந்த துண்டுகளால் முகம் மறைத்துத் திரிந்திருக்கிறோம் பலமுறை. நீங்கள் சர்வசாதாரணமாக அடிக்கடி நிறம் மாறிவிடுவீர்கள். பாவப்பட்ட தொண்டர்கள் எங்களைப் பற்றி ஒரு நிமிடமாவது சிந்தித்ததுண்டா அண்ணா?

முன்பின் முரணான உங்கள் செயல்பாடுகளால், நம் கட்சியைவிட்டு முன்னணித் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் வெளியேறியபோது, ‘ம.தி.மு.க தொண்டர்களால் உருவான கட்சி, பதவி கிடைக்காதவர்கள் வெளியேறுகிறார்கள்’ என அவர்கள்மீது சேற்றை வாரி இறைத்தீர்கள். ஆனால், நீங்கள் இன்று என்ன நோக்கத்துக்காக தி.மு.க-வுடன் இணைந்திருக்கிறீர்கள்? கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, ராஜ்ய சபா இடத்துக்கு உங்களின் மாற்று வேட்பாளராக தி.மு.க-வில் ஒருவரை முன்மொழிந்தது குறித்துக் கட்சிக்குள் கேள்வி எழுந்தது. ‘எனக்குத்தான் சீட்டு, கட்சிக்கு அல்ல’ என ‘அருமையான’ விளக்கம் கொடுத்தீர்கள். சரி, நீங்கள் எந்தக் கட்சியில்தான் இருக்கிறீர்கள்?

2016 சட்டமன்றத் தேர்தலில், கட்சி நிர்வாகிகள் தி.மு.க-வுடன் கூட்டணிவைக்கவே நினைத்தார்கள். ஆனால், நீங்கள் மட்டும் மனதுக்குள் ஏதோவொரு ரகசியத் திட்டத்தோடு, `மக்கள் நலக் கூட்டணிதான்’ என்று முடிவாய் நெருக்கடி தந்தீர்கள். தேர்தலில் போட்டியிடுவதாகச் சொல்லிவிட்டு, கடைசி நேரத்தில் விலகிக்கொண்டு ‘வெண்ணெய் திரண்டுவரும் நேரத்தில் சட்டியைப் போட்டு உடைத்தீர்கள். உங்களால் தெருவுக்கு வந்தது நம் கட்சி மட்டுமா அண்ணா? அந்தத் தேர்தலில், ஈழப் பிரச்னைகள் பற்றிப் பேசக் கூடாது என்ற உடன்படிக்கையின்படி தற்காலிக ஈழ மௌனியான நீங்கள், பிறகு ஈழம் குறித்து மொத்தமாக மறந்தேபோனீர்கள்!

`1,500 கோடி ரூபாயை நீங்கள் அ.தி.மு.க-வில் வாங்கிக்கொண்டுதான் இப்படியெல்லாம் செய்கிறீர்கள்’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது; நாங்கள் கொதித்துப்போனோம். ஆனால், நீங்களோ அசாத்திய அமைதி காத்தீர்கள்; அதிர்ச்சியானோம். தேர்தல் முடிந்தது, உடனே திருவாய் மலர்ந்தீர்கள்... என்னவென்று? “தி.மு.க-தான் பெருமளவு பணத்தைக் கொட்டி, என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியது.’’ ஒருவேளை உண்மையாக இருக்குமோவென நாங்களும் ஒப்புக்கொண்டோம். ஆனால், உங்கள் நாணயத்தின்மீது கல்லெறிந்தவர்களையே இன்று கட்டித் தழுவிக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் ‘நாணயம்’ பற்றி ஒருவாறு ‘புரிந்துகொள்ள’ முடிகிறது.

வைகோ
வைகோ

தமிழகத்தில் மதுவிலக்குப் போராட்டங்கள் தீவிரமாக இருந்த காலகட்டம் அது. உங்கள் மகன் துரை.வையாபுரி சிகரெட் டிஸ்ட்ரிபியூட்டராக இருப்பதாக இணையதளங்களில் செய்தி வெளியாகி சர்ச்சையானது. அது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்க, “புகைபிடிச்சவன் பலாத்காரம் செய்வதில்லை. புகைபிடிப்பதால் ஒருவன் பெண்கள் கையைப் பிடித்து இழுப்பதில்லை. புகைபிடிப்பதால் யாரையும் கொலை செய்வதில்லை’’ என நீங்கள் ஒரு விளக்கம் கொடுத்தீர்கள். தமிழ்ச் சமூகத்தில் உங்கள்மீது இருந்த மிச்ச சொச்ச மரியாதையும் காற்றில் கருகிப்போனது, சிகரெட்போலவே!

`வாரிசு அரசியலை எதிர்த்து உருவான கட்சி ம.தி.மு.க’ என நாளெல்லாம் முழங்கிவிட்டு, உங்கள் வீட்டுப் பட்டத்து இளவரசர் துரை.வையாபுரிக்கு (தற்போது துரை.வைகோ) பட்டம் சூட்டப் பார்க்கிறீர்கள். கண்ணாடி பார்க்கும்போது உங்களுக்கு எதுவுமே தோன்றுவதில்லையா... மற்றவர்களை நோக்கி வீசிய கற்கள் திரும்பி வருவதைப் பார்க்கவில்லையா? ‘தி.மு.க சின்னமும் கொடியும் கருணாநிதிக்குச் சொந்தமில்லை; அறிவாலயத்தைக் கைப்பற்றுவேன்’ என வீர முழக்கமிட்ட நீங்கள், இன்று அதே சின்னத்தில் நம் கட்சிக்காரர்களை வேட்பாளராகக் களமிறக்கும் நிலைக்கு வந்துவிட்டீர்கள். ம.தி.மு.க தொண்டர்களாகிய நாங்கள், இப்போது நம் கட்சியில் உறுப்பினராக நீடிப்பதற்கும், தி.மு.க-வில் சேர்வதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கிறது எனச் சொல்ல முடியுமா அண்ணா? என் மனதை உறுத்தும் கேள்வி ஒன்றுதான், இனி, தனியாக நமக்கென்று ஒரு கட்சி எதற்கு அண்ணா?

‘சுகருக்காகத்தான் நீங்கள் நடைப்பயணம் செல்கிறீர்கள்’ என்ற விமர்சனத்தையும் நம்பாமல், உங்களோடு நடந்து நடந்து...

- நம் கட்சியைப்போலவே தேய்மானம் கண்ட எலும்புகளோடு உங்கள் அன்புத் தொண்டன்.