அரசியல்
Published:Updated:

எப்போது முடியும் அழகிரியின் அரசியல் குவாரன்டைன்?!

அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
News
அழகிரி

இப்போதும் மிக பத்திரமாக வீட்டுக்குள்தான் இருக்கிறீர்கள். என்னெவொன்று... சுற்றிலும் அடியாள் கூட்டம் இல்லை.

‘அஞ்சா நெஞ்சர்’ என்று முன்னொரு காலத்தில் அழைக்கப்பட்ட தி.மு.க முன்னாள் தென்மண்டலப் பொறுப்பாளர் மு.க.அழகிரிக்கு சாமானியத் தொண்டனின் வணக்கம்.

எப்படி இருக்கிறீர்கள்? செய்தித்தாள்கள், தொலைக்காட்சிச் செய்திகளை யெல்லாம் பார்ப்பதுண்டா? ஊர் உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியுமா? சரி, அதைவிடுங்கள்... எலெக்‌ஷன் வரப்போகிறது என்று கேள்விப்பட்டீர்களா? நீங்கள் பயந்து பதுங்கியிருப்பது கொரோனாவுக்கா, அரசியலுக்கா? உங்களை நம்பி வந்து காலத்தைத் தொலைத்த தொண்டர்களில் நானும் ஒருவன்.

தி.மு.க-விலிருந்து நீங்கள் நீக்கப்பட்டு ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் ஆக்கபூர்வமாக நீங்கள் செய்த காரியம் என்று ஒன்றைச் சொல்ல முடியுமா? `கட்சியைத் திட்டிக்கொண்டிப்பது’ என்கிற நோகாமல் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை மட்டும் விடாமல் செய்து கொண்டிருக்கிறீர்கள். ‘என்னதான் பிரச்னை’ என்று அறிந்துகொள்ள நேரில் சந்திக்க முயன்றால், எப்போதும் ‘அண்ணன் ஓய்விலிருக்கிறார்’ என்கிறார்கள்.

ஓய்வெடுக்கும் பொழுதுகளில், திராவிட இயக்கத்தின் வேர்களான பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள் ‘ஓய்வெடுப்பது’ குறித்து எழுதியிருப்பதை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும். ஒரு ‘லெட்டர் பேடு’ கட்சித் தலைவரிடம்கூட பேப்பரிலாவது ஒரு கட்சி இருக்கும்; பேச்சிலாவது ஒரு கொள்கை இருக்கும். உங்களிடம் என்ன இருக்கிறது?

கேட்டால், `கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை’ என்கிறீர்கள். சரி, பொறுப்பில் இருந்தபோது மட்டும் என்ன செய்தீர்கள்? ‘ரசாயனம் மற்றும் உரத்துறை’ அமைச்சராகப் பதவி வகித்தீர்களே... ஞாபகமிருக்கிறதா? ‘நாடாளுமன்ற வளாகத்தின் பக்கமே பார்க்க முடியாத இப்படி ஓர் அமைச்சர் தேவையா?’ என்று டெல்லி நாக்குகள் கேலி பேசும்படி செய்தீர்கள். ‘ஆஹா... என்னே ஒரு சாதனை’! ஒட்டுமொத்தமாக உங்கள் சாதனையாக ஒன்றே ஒன்றை நீங்கள் சொல்லிக்கொள்ளலாம். அது ‘திருமங்கலம்’ ஃபார்முலா. அது சாதனை அல்ல... ஜனநாயகத்துக்கு நீங்கள் இழைத்த அவமானம்!

உங்களைச் சுற்றி அடியாள் கூட்டம் ஒன்று இருந்தது. அவர்கள் நீங்கள் சொன்னதையும் செய்தார்கள், சொல்லாததையும் செய்தார்கள்.

தா.கி கொலையின்போதும், ‘தினகரன்’ பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டு மூன்று ஊழியர்கள் கொல்லப்பட்ட போதும் ஒட்டுமொத்த பழியும் தி.மு.க மீது விழுந்தது. சம்பவங்களையும் சரி, பழியையும் சரி நீங்கள் வசதியாக மறந்துவிட்டீர்கள். நாங்கள் மறக்கவில்லை!

கடைசியாக, கலைஞர் மறைவின்போதாவது ‘கட்சியில் சுமுகமாக இணைவீர்கள்... உங்களை நம்பிய எங்களைக் கரையேற்றுவீர்கள்’ என்று கொஞ்சம் நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால், ‘கட்சியையே கைப்பற்றப்போகிறேன்’ என்று வெற்றுக் கலகம் செய்தீர்கள். ‘லட்சம் பேரை திரட்டுவேன்’ என்று தந்தையின்... நம் தலைவரின் அஞ்சலிக் கூட்டத்திலும் அரசியல் செய்தீர்கள். முடிந்ததா? ஐந்தாயிரம் பேரைக்கூட உங்களால் அழைத்துவர முடியவில்லை. நூறுநாள் வேலைத் திட்டத்தில் ‘ஓய்வெடுத்து’ வந்தவர்களையெல்லாம் வேனிலும் பஸ்ஸிலும் ஏற்றிவந்து வாலாஜா சாலை வெயிலில் காயவைத்த காட்சியை நாடே பார்த்தது. அவ்வளவுதான்... மீண்டும் வீட்டுக்குள் முடங்கிவிட்டீர்கள்!

அழகிரி
அழகிரி

விஷயத்துக்கு நேரடியாகவே வருகிறேன்... உங்களுக்கு, உங்கள் தம்பி ஸ்டாலின் ஆகவில்லை. அவ்வளவுதானே? அதற்குக் கட்சி என்ன செய்தது? 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 நாடாளுமன்றத் தேர்தல்... அதைத் தொடர்ந்து வந்த உள்ளாட்சித் தேர்தல் என ஒவ்வொரு தேர்தலின்போதும், ‘தி.மு.க தோற்றுவிடும், தோற்றுவிடும்’ என்றே சாபம் விட்டீர்கள். ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியை அனுபவிக்காத தி.மு.க-வின் தொண்டன் இதை எப்படி ரசிப்பான்?

இப்போதும் மிக பத்திரமாக வீட்டுக்குள்தான் இருக்கிறீர்கள். என்னெவொன்று... சுற்றிலும் அடியாள் கூட்டம் இல்லை. அந்தக் காக்கைகள், அதிகாரம் நோக்கிப் பறந்துபோய்விட்டன. பிழைக்கத் தெரிந்தவை! உங்களின் தீவிர ஆதரவாளர்களான மூர்த்தி, தளபதி, தமிழரசி, எஸ்ஸார் கோபி, ஜெயராம், மிசா பாண்டியன் எனப் பலரும் ‘டேக் டைவர்ஷன்’ எடுத்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. மன்னன், கவுஸ்பாட்சா, இசக்கிமுத்து, உதயகுமார், முபாரக் மந்திரி,

எம்.எல்.ராஜ், கோபிநாதன் உள்ளிட்ட சிலர் மட்டுமே உங்கள் பெயரை இன்னும் உச்சரிக்கிறார்கள், அதுவும் சன்னமாக. அவர்களையும் முன்பு போலப் பார்க்க முடியவில்லை. அண்ணன் எவ்வழியோ அவர்களும் அவ்வழியே போய்விட்டார்கள் போல. போகட்டும்!

‘அவர் மெளனம் கலைத்தால் தி.மு.க-வில் பிரளயம் வெடிக்கும்’ என்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அமைச்சர் செல்லூர் ராஜூவும் சில காலத்துக்கு முன்னர் உங்களைப் ‘புகழ்ந்து’ பேசினார். பா.ஜ.க-வின் ஹெச்.ராஜாவும் நீங்கள் பேசியதை மேற்கோள்காட்டித்தான் பேசுகிறார். ரஜினியையும் உங்களையும் வைத்து ‘உங்கள்’ கழகத்தைக் கபளீகரம் செய்யத் துடிக்கின்றன வடக்கிலிருந்து வரும் சக்திகள். நீங்களோ, ஆகாத அட்டைக்கத்திக்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கிறீர்கள்!

எப்போது விழித்துக்கொள்வீர்கள்; எப்போது வீட்டைவிட்டு வெளியில் வருவீர்கள்? ‘உடன்பிறப்பு’தான் உங்கள் பிரச்னை! அதற்கு உடன்பிறப்புகளை பலியாக்கலாமா? சொல்லுங்கள்... எப்போது முடியும், உங்கள் அரசியல் குவாரன்டைன்?!

இப்படிக்கு,

சாமானியத் தொண்டன்