Published:Updated:

நம்ம கட்சிக்குத் தலைவரு யாருங்க?

கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

வணக்கம் தலைவரே...

நம்ம கட்சிக்குத் தலைவரு யாருங்க?

வணக்கம் தலைவரே...

Published:Updated:
கே.எஸ்.அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
கே.எஸ்.அழகிரி

கடிதத்தை ஆரம்பிக்கும்போதே அபசகுனமா ஆரம்பிக்க வேண்டியிருக்கு... உண்மையிலேயே நீங்கதான் தலைவரா? பேப்பர்லயும் டி.வி-லயும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியோட தலைவர் கே.எஸ்.அழகிரினுதான் சொல்றாங்க. கேட்கும்போது நல்லாத்தான் இருக்கு. ஆனா, எனக்குப் பெருத்த சந்தேகமே அதுலதாங்க. சரி, அந்தப் பஞ்சாயத்துக்குப் பின்னால வர்றேன்.

நம்ம கட்சியில கோஷ்டி அரசியல் சர்வசாதாரணம்தான். சண்டையில கிழியாத சட்டைகூட இருக்கு. ஆனா, சத்தியமூர்த்தி பவன்ல கிழியாத சட்டை இல்லைங்கிறது ஊருக்கே தெரியும். தங்கபாலு, ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்னு ஒவ்வொருத்தரும் தலைவரானபோது, அவங்க கோஷ்டியாவது கட்சிக்காகக் கொஞ்சூண்டு வேலை பார்ப்பாங்க. ஆனா, உங்க விஷயத்துல மட்டும்தான் உங்களைத் தலைவரா கொண்டுவந்த கோஷ்டியே, உங்களுக்கெதிரா தீவிரமா வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. என்ன கொடுமை தலைவரே... இப்ப மத்த கோஷ்டிகளெல்லாம் ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. நீங்களும் எவ்வளவு நாள்தான் இப்படி வலிக்காத மாதிரியே நடிக்கப்போறீங்க...

பின்ன... நீங்க ஒருபக்கம் கட்சிக் கட்டமைப்பை ‘வலுப்படுத்த’ ஈரோடு, தூத்துக்குடினு சுற்றுப்பயணம் போனீங்கன்னா, அப்பிடியே ஆப்போசிட்ல சிவகங்கை சின்ன ஜமீன் கார்த்தி சிதம்பரம் மதுரை, திருநெல்வேலினு சுற்றுப்பயணம் போக ஆரம்பிச்சிடுறாரு. அவரு அங்கே போய் கூட்டமெல்லாம் நடத்தி முடிச்ச பின்னாடிதான் உங்களுக்கே விஷயம் வந்துசேருது. அந்த அளவுக்குக் கட்சியைக் கட்டுக்குள்ளவெச்சிருக்கீங்க நீங்க!

இதுவொரு பக்கம்னா, தமிழ்நாடு முழுக்க இருக்கிற மாவட்டத் தலைவர்கள்ல பெரும்பாலான பேரு திருநாவுக்கரசர் ஆளுங்களா இருக்காங்க. அவங்க திருநாவுக்கரசர் படத்தைப் பெருசா போட்டு, உங்க படத்தை ஏதோ கடமைக்கு இருபது பைசா சைஸ்ல போட்டுத்தானே போஸ்டரே அடிக்குறாங்க... இவ்வளவு ஏன்... கட்சி நிகழ்ச்சி சார்ந்து மாவட்டத் தலைவர்கள்கிட்ட பேசினாக்கூட, ‘இருங்க... தலைவர்கிட்ட பேசிட்டுச் சொல்றேன்’னு திருநாவுக்கரசருக்குத்தானே போன் போடுறாங்க. அவருகிட்ட பேசிட்டுத்தானே தலைவரே உங்ககிட்டயே வர்றாங்க? இப்ப எனக்கு டவுட் வருமா வராதா? டெல்லியில தலைவர் இல்லை, இங்க தலைவர் இருந்தும் இல்லை. ஒண்ணு புரியுது... இது நல்லால்ல!

சரி, களத்துலதான் உங்களுக்குத் தொல்லை குடுக்குறாங்கன்னு பார்த்தா, சோஷியல் மீடியாவுலயும் வந்து அலம்பலக் குடுக்குறாங்களே தலைவரே... சரி, அவங்கதான் உங்க கிட்னி எடுக்கக் கூப்பிடுறாங்கன்னு தெரியுதுல்ல... அப்புறமும் ஏன் வான்ட்டடா வண்டியில ஏறி வாங்கிக் கட்டிக்கிறீங்க... நமக்கு நடக்குறதெல்லாம் போதாதா?

`புதிய கல்விக் கொள்கைத் திட்டம் வரவேற்கப்பட வேண்டிய நகர்வு’னு குஷ்பு கருத்து சொன்னாங்க. எங்களுக்கும்தான் கோவம் வந்துச்சு. ஆனா, நாங்க எப்படிக் கண்டும் காணாம இருந்தோம்! ஆனா நீங்க... கடமை சுந்தரமா மாறி கருத்து சொன்னீங்க... குஷ்புவுக்கு எதிரா அப்படி என்ன சொன்னீங்க..? ‘கட்சிக்கு வெளியில பேசுறது முதிர்ச்சியின்மை’னு சொன்னீங்க. சொன்ன மாதிரியே நின்னீங்களா..? பத்திரிகையாளர்கள் அதுபத்தி கேட்டப்ப, ‘நான் குஷ்பு பெயரைக் குறிப்பிடவே இல்லை’னு அந்தர் பல்டி அடிச்சீங்க. ‘அது எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்’னு சிரிப்பா சிரிச்சீங்க. அப்ப டீ ஆக்டிவேட் பண்ணினதுதான், இன்னும் திறக்கலை ட்விட்டர! ஆனா, நீங்க ஏதும் அந்த விஷயத்துல வருத்தப்பட்ட மாதிரி தெரியலை. ஜாலியாத்தான் இருக்கீங்க!

தி.மு.க - அ.தி.மு.க., தி.மு.க - பா.ஜ.க-னு சமூக வலைதளங்கள்ல மற்ற கட்சிகளுக்கு நடுவுல தீவிர சண்டை நடந்துக்கிட்டு இருக்கு. பார்க்கவே பயங்கரமா இருக்கு! ஆனா, நம்ம கட்சியில மட்டும்தான் தலைவரே கே.எஸ்.அழகிரி - கார்த்திக் சிதம்பரம், கே.எஸ்.அழகிரி - குஷ்புனு சொந்தக் கட்சிக்குள்ளயே பஞ்சாயத்து நடந்துக்கிட்டிருக்கு... பார்க்கப் பாவமா இருக்கு!

மத்தவங்களால உங்களுக்குப் பிரச்னையே இல்லை தலைவரே... சொந்தக் காசுல நீங்களேதான் உங்களுக்கு சூனியம் வெச்சுக்குறீங்க. பின்ன என்ன... சாத்தான்குளம் சம்பவத்துல இறந்துபோன ரெண்டு பேரோட பெயருக்குப் பின்னாடி சாதிப் பெயர் சேர்த்து அறிக்கைவிட்டு அசிங்கப்பட்டீங்களே... அதைக்கூடப் பொறுத்துக்கலாம், அதுக்கு உங்க ஆளு கோபண்ணாவை விட்டு ஒரு விபரீத விளக்கம் கொடுத்தீங்க பாருங்க... காங்கிரஸ் வளந்துரும்னு கனவுலகூட அதுக்குப் பிறகு நான் கண்டதில்லை.

நம்ம கட்சிக்குத் தலைவரு யாருங்க?

அது மட்டுமா தலைவரே... பொது இடத்துல ஒரு மாணவர் அணி நிர்வாகியைப் போட்டு, ரெஸ்ட்லிங் ராக் மாதிரி வெளு வெளுனு வெளுத்தீங்க. விஷயம் பெருசானதும், அவர் வீட்டுக்குப் போய் சாந்தரூபியா சமாதானம் பேசினீங்க. மிக்ஸர்லாம் சாப்பிட்டீங்க, அகிம்சையில் அதுவொரு அல்டிமேட் சீன் தலைவரே. நம்ம கட்சிக்கு ஆட்கள் வர்றதே பெரிய விஷயமா இருக்குற நேரத்துல இதெல்லாம் நமக்குத் தேவையா... டெல்லி மேல கோபம், சிவகங்கை ஜமீன்கள் மேல உள்ள கோபம், இப்பிடி எல்லாக் கோபத்தையும் அப்பாவியா மிச்சமிருக்கிற ஒண்ணு, ரெண்டு தொண்டருங்க மேலயும் காமிச்சா... நாளைப் பின்ன சத்தியமூர்த்தி பவன்ல சட்டை கிழியும்போது சத்தம் போட யார் இருப்பா?

வட்டத் தலைவர் பதவிக்குக்கூட டெல்லி தலைமையைக் கேக்காம எதுவும் செய்ய முடியாத ஒரு தலைவர் பதவியைவெச்சுக்கிட்டு என்ன செய்யப்போறீங்க? கண்ணு கலங்குது தலைவரே...

உள்ளாட்சித் தேர்தல் சமயத்துல ‘கூட்டணி தர்மத்தை மீறி நடந்துகொண்டது தி.மு.க’னு பேசின மாதிரி, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி அவசரப்பட்டு பேசிடாதீங்க தலைவரே... அவங்க கொடுக்கணும்னு வெச்சிருக்குற சீட்டும் பறிபோயிடும். கூடுதலா ஒரு விஷயம் என்னன்னா, நம்ம கட்சியில சிதம்பரம் அணி, இளங்கோவன் அணி, தங்கபாலு அணி மட்டும் இல்லை... ‘பத்து சீட்டு போதும்!’னு சொல்ற அளவுக்கு தி.மு.க-வுக்காகவும் ஒரு அணி இருக்கு தலைவரே... பார்த்து சூதானமா நடந்துக்குங்க. அப்புறம்... `சூர்யாவுக்கு துணை நிப்போம்’னு சொல்லியிருக்கீங்க. நல்ல விஷயம்தான். ஆனா, உங்களுக்கு துணையா நிக்கவே ஆளில்லையே தலைவரே! ஆனா, ஒரு விஷயத்துல உங்களைப் பாராட்டுவேன் தலைவரே... தி.மு.க துரைமுருகன் சொன்ன மாதிரி ‘வாக்காளரே இல்லாத நம்ம கட்சிக்கு’ காங்கேயத்துல வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் போட்டீங்க பாருங்க. ரொம்பப் பெருமையா இருக்கு தலைவரே!

சரி முடிச்சுக்குவோம். சின்ன ஜமீனோட சித்து விளையாட்டுகளுக்கு முடிவுகட்டாதவரை கஷ்டம்தான் தலைவரே!

- தலைவர் யாருன்னே தெரியாமல் விழிபிதுங்கித் திரியும் அப்பாவி காங்கிரஸ் தொண்டன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism