Published:Updated:

கட்சி நடத்துறோமா... நாடக கம்பெனி நடத்துறோமா?

எல்.முருகன்
பிரீமியம் ஸ்டோரி
News
எல்.முருகன்

நமஸ்தே முருகன் ஜி... எப்படி இருக்கீங்க?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் நம்ம கட்சித் தொண்டர்களுக்கு என்ன ‘பேரு’ன்னு உங்களுக்கே நல்லாத் தெரியும். அதையெல்லாம் பொருட்படுத்தாமத்தான் உங்க தலைமையில நாங்க கட்சிப்பணி செஞ்சுக்கிட்டு வர்றோம். காரணம், தமிழ்நாட்டுல ‘தாமரை ராஜ்ஜியத்தை’ உருவாக்க ராஜமாதா... அதாவது நம்ம தமிழிசை அக்கா, பாகு‘பலி’யா உங்களைத்தானே ஜி விட்டுட்டுப் போயிருக்காங்க! அக்கா, கட்சித் தலைவரா இருந்து கவர்னர் ஆனாங்க. ஆனா, நீங்க... தெரு செவுத்து சண்டைக்கே கவர்னரைப் பார்த்து அதிர்ச்சி கொடுக்குறீங்க... என்னத்தச் சொல்றது!

‘முருகன்ஜி பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல..!’ இப்படியெல்லாம் சொல்லணும்னு எங்களுக்கும் ஆசையாத்தான் இருக்கு ஜி. ஆனா, முடியலையே... பின்ன என்ன ஜி? நம்ம பிரதமரோட பிறந்தநாளைக்கு, சென்னை மதுரவாயல் மேம்பாலத்துக்கிட்ட, 70 அடி உயரத்துல கொடிக்கம்பம் நட்டு, கல்வெட்டு பொறிச்சு ஒரு வரலாற்றுச் சம்பவத்தைச் செஞ்சீங்க. கர்வமா இருந்துச்சு! மறுநாள்... எப்பவும் தாமரையைக் கிண்டல் பண்ணிக்கிட்டே இருக்குற என் நண்பர்களை, விடிஞ்சும் விடியாத காலையிலேயே கூட்டிக்கிட்டு அங்கே வந்தேன். ‘பாருங்கடா... என் தாமரைக்கொடி எப்படிப் பறக்குது’னு நிமிர்ந்து பார்த்தா, கம்பத்தையும் காணோம்... கல்வெட்டையும் காணோம். அப்போ, அவனுக சிரிச்ச சிரிப்பு... இப்பவும் நெஞ்சுல ரணமா வலிக்குது ஜி.

ஒரு தேசியக் கட்சியோட மாநிலத் தலைவர் திறந்துவெச்ச கொடிக்கம்பம்கிற மட்டுமரியாதைகூட இல்லாம, ராத்திரியோட ராத்திரியா பொக்லைன்வெச்சு நிரவிட்டாங்களே ஜி... இந்த லட்சணத்துல நீங்க `செயின்ட் ஜார்ஜ் கோட்டையில காவிக்கொடி பறக்கும்’னு டயலாக் அடிச்சு, கூட்டணிக் கட்சிக்காரங்ககிட்டயே பல்ப் வாங்கிட்டு இருக்கீங்க. சட்டவிதிமுறை மீறல்னு இடிச்சதா சொல்றாங்க... இந்த நேரத்துல நீங்க சட்டம் படிச்சவருங்குற ஞாபகம் வேற வருது ஜி. அதோட சம்பவம் முடிஞ்சிருச்சுனு பார்த்தா, ‘144 தடை உத்தரவை மீறிட்டீங்க’ன்னு உங்க மேலயே கேஸைப் போட்டு, நம்ம கட்சிப் பெருமையில கல்லத் தூக்கிப் போட்டாங்க. கூட்டணியில இருக்கும்போதே இந்த நிலைமைன்னா.... குலை பதறுது ஜி!

ஒரு நாள்... ஊரே உட்கார்ந்து டி.வி பார்த்துக்கிட்டிருந்தோம். ஒரு விவாத நிகழ்ச்சி அது... `அ.தி.மு.க தொண்டர்கள் நினைச்சா நீங்கல்லாம் தெருவுல நடமாட முடியாது’னு ஒரு மிரட்டல்! யாரைப் பார்த்துனு கேட்கிறீங்களா... நம்ம கட்சிக்காரரைப் பார்த்துதான். நரம்பெல்லாம் புடைக்க... ‘விடியட்டும் நம்ம தலைவர் குடுக்குற பதிலடியில எடப்பாடியே சமாதானம் சொல்வார்’னு காத்திருந்தேன். உங்ககிட்ட இருந்து அறிக்கையையும் காணோம், ஆதங்கத்தையும் காணோம்... டெல்லிக்கு போன் போட்டு நட்டாஜி கிட்ட ‘எங்களைக் கிள்றாங்க சார்’னு சொன்னீங்களாம். எப்பிடி இருந்த நாம இப்பிடி ஆகிட்டோம்!

நீங்க வக்கீலுக்குப் படிச்சிருந்தாலும், ஹைகோர்ட்னா சட்டுனு நினைவுக்கு வர்றது ஹெச்.ராஜாதான். அப்பேர்பட்ட ஆசாமியைப் பக்கத்துலவெச்சுக்கிட்டு, முதல் பத்திரிகையாளர் சந்திப்புல `நான் நேர்மறையான அரசியலை முன்னெடுப்பேன்’னு பேட்டி கொடுத்தீங்க. ஹெச்.ராஜா, ராதாரவி, காயத்ரி ரகுராம், கல்யாணராமன்னு... தமிழ்நாட்டுல வெறுப்பரசியலோட ஒட்டுமொத்த குத்தகைக்காரர்களும் நம்ம கட்சியிலதானே ஜி இருக்காங்க. பிறகு எப்பிடி நேர்மறை அரசியல்? சரி, நம்புறீங்க... பண்ணுங்க... பார்ப்போம்!

ஆமா ஜி... எனக்கு ஒரு டவுட்டு... செப்டம்பர் 17-ம் தேதி, நம்ம தலைவர் மோடிஜிக்குத்தானே பிறந்தநாள்? `ஊர்ல கல்யாணம்... மார்ல சந்தனம்’கிற ரேஞ்சுக்கு நீங்க எதுக்கு ஜி சாரட் வண்டியில வலம் வந்தீங்க? செம காமெடி ஜி உங்களோட. மோடிஜி பிறந்தநாளுக்கு பலூன் விடறேன்னு பறக்கவிட்டு, அதுவொரு பக்கம் வெடிச்சு, ஆளாளுக்குத் தெறிச்சு ஓடிப்போய் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனாங்களே... ஏன் ஜி, கறுப்போ... காவியோ... நமக்கும் பலூனுக்கும்தான் எப்பவுமே ஆகாதே ஜி. எதுக்கு இந்த வீண் வேலை?!

முருகன்
முருகன்

`தமிழ்நாடு முழுவதும் அவரவர் வீடுகளில் வேல் பூஜை செய்து, கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்’னு அழைப்பு விடுத்தீங்க... நாங்களும் உங்க பேச்சைக் கேட்டு, எங்க வீட்டுல இருக்குற முருகனுக்கு பூஜை பண்ணினோம். ஆனா பாருங்க ஜி... நம்ம கட்சி முக்கிய நிர்வாகிகள் யார் வீட்டுலயும் முருகன் படமே இல்லைபோல... முருகன் காலண்டர், முருகன் டைரி, முருகன் ஸ்டிக்கர், முருகன் மஞ்சப்பைனு விதவிதமாவெச்சு வழிபட்டாங்க. வேல் கிடைக்கலைபோல... பி.வி.சி பைப், குழம்புக் கரண்டி உட்பட கொஞ்சம் நீளமான எல்லாப் பொருள்களையும் வேலாக்கி பூஜை செஞ்சாங்க. அதைப் பார்த்த நெட்டிசன்கள் நம்மளவெச்சு செஞ்சாங்க... கடைசியில ‘உங்களை’யே காட்சிப் பொருளா ஆக்கிட்டாங்களே ஜி!

நாம எப்பவுமே பெரியாரை, ஈ.வெ.ரா-னுதான் சொல்லுவோம். தெரியும்ல ஜி... பிறகு, திடீர்னு நீங்க ‘பெரியார்’னுதான் சொல்லணும்னு சொல்லி சொந்தக் கட்சிக்குள்ளயே ஊமக்குத்தா வாங்கிட்டு இருக்கீங்களே... ஏன் ஜி? கலங்காதீங்க... கண்ணைத் தொடச்சுக்குங்க!

அதையெல்லாம் விடுங்க ஜி... நாம கட்சி நடத்துறோமா இல்லை நாடகக் கம்பெனி நடத்துறோமா? சொல்லிட்டீங்கன்னா, நாங்களும் பவுடர் பூசிக்கிட்டுத் தயாராகிடுவோம் பாருங்க. பின்ன என்ன ஜி... மார்க்கெட் போன நடிகர், நடிகைகள், மியூசிக் டைரக்டரையெல்லாம் கட்சியில சேர்த்துக்கிட்டு இருக்கீங்க... நீங்க நடத்துற நட்சத்திர வேட்டையில குழம்பிப்போய்த்தான், ஐ.பி.எஸ் படிச்ச அண்ணாமலையே நம்ம கட்சிப் பெயரை ‘பாரதிராஜா கட்சி’னு சொன்னார். அப்போ நீங்களும் பக்கத்துல கொடிவீரன் மாதிரி... ஆனா, திருதிருனு முழிச்சிக்கிட்டு இருந்தீங்க ஜி. ஒரே வெட்கமா போச்சு ஜி!

வில்லன் நடிகர் ராதாரவி போதாது... ஒரிஜினல் வில்லனே வேணும்னு நெனைச்சீங்களோ என்னமோ... பான்பராக் ரவி, பட்டாசு பாலு, சனியன் சகடை ரேஞ்சுக்கு அடைமொழியோட கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்துனு பண்ணிக்கிட்டு இருந்தவங்களைக் கட்சியில சேர்த்துக்கிட்டு இருக்கீங்க. கேட்டா, `தேர்தல் நேரத்துல பூத்துல எதிர்க்கட்சிக்காரங்களைச் சமாளிக்க’னு சமாளிஃபிகேஷன் வேற சொல்றீங்க. ஆனா ஜி... அந்தக் கவலையெல்லாம் ஓட்டு வெச்சிருக்கிறவங்களுக்குத்தானே ஜி. `நோட்டா’ங்குற வார்த்தையைக் கேட்டாலே மண்டைக்குள்ள வேட்டா வெடிக்குது ஜி! வெறும், ரெண்டு சதவிகித வாக்குவங்கியை வெச்சுகிட்டு... உங்களுக்கு ரொம்பத்தான் தைரியம் ஜி.

கடைசியா உங்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன் ஜி. மனித உரிமைகள் பத்தித்தான் நீங்க பிஹெச்.டி முடிச்சிருக்கீங்கனு பேசிக்கிறாங்க... நம்ம கட்சிக்குள்ளயாவது... அதுவும் உங்க உரிமைகளையாவது காப்பாத்திக்கப் பாருங்க ஜி.

- உங்க தலைமையிலயாவது நோட்டாவுக்கு டாட்டா காட்டிவிட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் உண்மைத் தொண்டன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz