Published:Updated:

திருவாரூர்: பராமரிப்பின்றி கிடக்கும் ஸ்டாலின் திறந்துவைத்த நூலகம்! - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்?

நூலகம்
News
நூலகம்

தற்போதைய முதல்வர், மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது திறந்துவைத்ததுதான், இந்தத் திருவாரூர் மாவட்ட மைய நூலகம்.

மகாத்மா காந்தியிடம், `உங்களிடம் ஒரு பெருந்தொகையைக் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டதற்கு. `நான் ஒரு நூலகத்தைக் கட்டுவேன்’ என்று சொன்னார். காரணம், அரிய பொக்கிஷங்களான புத்தகங்களைப் பாதுகாக்கும் இடங்களாக நூலகங்கள்தான் இருக்கின்றன. மேலும், ஒரு மனிதன் வாழ்வதற்கும் வளர்வதற்கும் தேவையான கருத்துகளையும் தரவுகளையும் தரக்கூடிய இடமாக நூலகங்கள் திகழ்ந்துவருகின்றன. ஆனால், தமிழகம் முழுவதும் முறையான பராமரிப்பின்றி வீணாகிக்கிடக்கின்றன பல நூலகங்கள். 'என்னைச் சந்திக்க வருபவர்கள் பூங்கொத்துகளைத் தவிர்த்துவிட்டு புத்தகங்களைக் கொண்டுவாருங்கள்' என்றும், தான் சந்திக்கும் தலைவர்களுக்கெல்லாம் புத்தகங்களைப் பரிசளித்தும் வருபவருமான தமிழக முதல்வர் ஸ்டாலினின் சொந்த மாவட்டத்திலேயே இப்படியொரு நிலை என்பதுதான் வேதனையிலும் வேதனை என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

நூலகம்
நூலகம்

கடந்த 2006-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சட்டமன்றத் தொகுதியான திருவாரூரில், அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த, தற்போதைய முதல்வர், மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டதுதான், திருவாரூர் மாவட்ட மைய நூலகம்.’ 16,030 உறுப்பினர்களுடன் இந்த நூலகம் செயல்பட்டுவருகிறது. சுமார் 1,19,357 புத்தகங்கள் இந்த நூலகத்தில் இருக்கின்றன. பல்வேறு அரசு ஊழியர்களையும், எழுத்தாளர்களையும், பன்முகத் திறமையாளர்களையும் உருவாக்கிய பெருமை இந்த நூலகத்தைச் சாரும். ஆனால், தற்போது இந்த நூலகத்தின் நிலைமை படுமோசமாக உள்ளது. 10 ஆண்டுகளாக இந்த நூலகத்தில், எந்த ஓர் அடிப்படை வசதியும் செய்யப்படாமல் இருக்கிறது. குறிப்பாக கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு போன்ற வசதிகள் செய்யப்படமால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது'' என்கிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``2006-ல கட்டப்பட்ட நூலகக் கட்டடம் எங்க பார்த்தாலும் விரிசலா, தரையெல்லாம் பெயர்ந்துபோய் இருக்கு. நூலகத்தைச் சுற்றியும் கருவேல மரங்கள் அடர்ந்து, காடுபோல் காட்சியளிக்குது. இதைப் பார்த்தாங்கன்னா, இங்க வரணும்னு நினைக்கிறவங்களுக்குக்கூட பயம் வந்துடும். நாகை பைபாஸ் சாலையிலிருந்து நூலகத்துக்கு வரும் ரோடு, வாகனங்களே செல்ல முடியாத அளவுக்குக் குண்டும் குழியுமா இருக்கு. நூலகத்தில் உள்ள புத்தகங்கள் சரியாக அடுக்கப்படாமலும், வந்து படிக்கக்கூடிய வாசகர்களுக்கு போதுமான நாற்காலிகளும் இல்லை. இது குறித்து ஊழியர்கள்கிட்ட பலமுறை புகார் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. கொஞ்சம் அழுத்திக் கேட்டா, நிதியில்லை, அதனாலதான் பண்ண முடியலைன்னு சொல்றாங்க'' என்கிறார் நூலகத்தில் உறுப்பினராக உள்ள வானதீபன்.

நூலகம்
நூலகம்

இது குறித்து, திருவாரூர் மாவட்ட நூலக அலுவலர், ஆண்டாளிடம் நேரில் சென்று கேட்டபோது,

``ஒரே கட்டடத்தில், நூலகத்தின் அலுவலகமும், அரசுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வகுப்புகளும் நடப்பதால் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. மேலும், நூலகத்தில் போதுமான அளவு நிதி இல்லாத காரணத்தால், சாலை வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் இருக்கின்றன. இது குறித்து நூலக இயக்குநர் அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்தப் பிரச்னைகள் சரிசெய்யப்படும்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நூலகம் தொடர்பாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணனைச் சந்தித்துக் கேட்டபோது, ''உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரிகளைக்கொண்டு திருவாரூர் மாவட்ட மைய நூலகம் சரிசெய்யப்படும்'' என்றார்.

பெயர்ந்த தரை
பெயர்ந்த தரை

மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட, திருவாரூர் மாவட்ட மைய நூலகம் மீண்டும் பழைய பொலிவு பெற வேண்டும் என்பதே, திருவாரூர் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மக்களின் பல ஆண்டுக்கால எதிர்பார்ப்பு நிறைவேறுமா?