Published:Updated:

`ஊரடங்கை உடனடியாகத் திரும்பப் பெறும் முடிவு இல்லை?’ - அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ( ANI )

பல்வேறு மாநில முதல்வர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதா மருத்துவர்களுடன் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணொலிக்காட்சி மூலம் உரையாடினார். அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு பெற்றார். இதையடுத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். எங்களுடன் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நாடாளுமன்றத்தில் 5 எம்.பி-க்களுக்கு மேல் உள்ள கட்சியினருடன் ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபடுவார் எனப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதற்கிடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, தி.மு.க தலைவர் ஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாகப் பேசியிருந்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

`உணவுக்கே எண்ணெய் இல்லாதவன் எங்கே விளக்கேற்றுவது?’-பிரதமருக்கு கமல் கடிதம்

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக்காட்சி மூலம் அனைத்துக்கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், சிவ சேனாவைச் சேர்ந்த சஞ்சய் ராவத், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், தேசிய காங்கிரஸ் தலைவர் சரத்பவார். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

பிரதமர் மோடி ஆலோசனை
பிரதமர் மோடி ஆலோசனை

இந்தியாவில் தற்போது 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஏப்ரல் 14-ம் தேதிக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா, தளர்த்தப்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பிரதமரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாட்டில் ஊரடங்கை உடனடியாகத் திரும்பப்பெறும் முடிவு இப்போது இல்லை எனப் பிரதமர் மோடி கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் கொரோனாவுக்கு முன்பிருந்த வாழ்க்கையைப் போன்று கொரோனாவுக்குப் பின்பான வாழ்க்கை இருக்காது எனப் பிரதமர் கூறியதாகத் தெரிகிறது.

பல்வேறு மாநில முதல்வர்களும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 11-ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இரண்டாவது முறையாகக் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இதன் பின்னரே ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுமா, நீட்டிக்கப்படுமா என்ற முடிவை மத்திய அரசு எடுக்கும் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு