Published:Updated:

``முரசொலி அலுவலகம் மட்டுமல்ல; எல்.ஐ.சி பில்டிங்கூட பஞ்சமி நிலம்தான்.. நிரூபிக்கவா?”-'தடா' பெரியசாமி

முரசொலி அலுவலகம்
முரசொலி அலுவலகம் ( Vikatan )

`முரசொலி இடம் வழிவழியாகத் தனியாருக்குச் சொந்தமான நிலம் என்றால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?’

வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், வெளியான 'அசுரன்' திரைப்படம் தமிழக அரசியல் களத்தில் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படம் வெளியாகி பல நாள்கள் ஆனாலும் கூட, அதில் பேசப்பட்ட பஞ்சமி நிலம் குறித்த விவாதங்கள் நீண்டு கொண்டே இருக்கின்றன. பல அரசியல் கட்சிகள், பிரபலங்கள் திரைப்படத்தைப் பாராட்டி பேசினாலும், ஸ்டாலின் அசுரன் திரைப்படம் பார்த்துவிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கருத்துகள்தான் மிகப்பெரிய அரசியல் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.

‘‘இது படம் அல்ல, பாடம்’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ஸ்டாலின். மேலும், ‘பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதியச் சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள்” என்று பதிவிட்டிருந்தார். அதோடு, அசுரன் படத்தின் கதாநாயகன் தனுஷையும் தொடர்புகொண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Stalin tweet
Stalin tweet

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் இந்தக் கருத்துக்கு, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ''அசுரன் கற்றுத்தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!” என்று பதிவிட்டார்.

அதற்குப் பிறகுதான் விவாதம் சூடுபிடித்தது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது.

நிலம் அபகரிப்பு தி.மு.க-வினருக்கு முழுநேரத் தொழில்தானே? அநாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அ.தி.மு.க ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் தி.மு.க ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்துகொண்ட நியாயவான்கள்தானே தி.மு.க தலைமை!
மருத்துவர் ராமதாஸ்

‘மருத்துவர் ராமதாஸ், தற்போது முரசொலி இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார். அது பஞ்சமி நிலமே அல்ல; வழிவழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை. அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால், நான் அரசியலைவிட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும் அவர் மகனும் அரசியலைவிட்டு விலகத் தயாரா?' என்று மருத்துவர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு சவால் விடுத்தார் ஸ்டாலின்.

Ramadoss tweet
Ramadoss tweet

தொடர்ந்த மருத்துவர் ராமதாஸ், '' 1985-ம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஸ்டாலின் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குக் காட்ட வேண்டிய ஆதாரம், நிலப்பதிவு ஆவணமும் மூல ஆவணங்களும்தான். மேலும், முரசொலி இடம் வழிவழியாகத் தனியாருக்குச் சொந்தமான நிலம் என்றால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?'' என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார்! மருத்துவர் ஐயா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்! நான் தயாராக இருக்கிறேன்!
மு.க.ஸ்டாலின்

இந்தநிலையில், பஞ்சமி நிலம் மீட்பு இயக்கங்களில் ஒன்றான மண்ணுரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனரும், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினருமான `தடா' பெரியசாமி, தன் முகநூல் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருக்கிறார்.

`தடா' பெரியசாமி
`தடா' பெரியசாமி

அதில், ''ஸ்டாலின் காட்டும் பட்டா 1985-க்கானது. 1923 நிரந்தர கணக்குப் பதிவேடு (Permanent Register), RSR (Re-settlement Paisal Register), SLR (Settlement Land Register) மற்றும் 1935-ன் Gazette Copy ஆகியவற்றில் மேற்படி சர்வே எண் பற்றி தெரிந்துகொண்டு ஸ்டாலின் அவர்கள் பேச வேண்டும். முதலில் ஒரு தலித்துக்கு சொந்தமாக இருந்து, பிறகு இரண்டு தலித் அல்லாதவர்களுக்கு கை மாற்றப்பட்டு, நான்காவதாகத்தான் அஞ்சுகம் பதிப்பகத்துக்கு வாங்கியுள்ளனர். 1985-ம் ஆண்டு ஆவணத்தின் மூலத்தை காண்பிப்பேன் என்பது வாய்சவடாலே! Dr .ராமதாஸ், ஸ்டாலின் ஆகியவர்களுக்கிடையான பிரச்னையின் வழியாக தலித் மக்களின் பஞ்சமி நில மீட்புக்கு #தீர்வு_கிடைக்கட்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

Thada periyasamy
Thada periyasamy

அவரின் இந்தக் கருத்து மருத்துவர் ராமதாஸின் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

'உண்மையில் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம்தானா?' தடா பெரியசாமியிடம் பேசினோம்,

''நிச்சயமாக அந்த இடம் பஞ்சமி நிலம்தான். 1990-களில் பஞ்சமி நிலப் போராட்டக் குழுவின் சார்பாக, நான், கருப்பன் ஐ.ஏ.எஸ், பிருந்தாவன் மோசஸ் ஆகியோர் இணைந்து திரட்டிய தகவலில் முரசொலி அலுவலகம், எல்.ஐ.சி அலுவலகம் ஆகியவை பஞ்சமி நிலத்தில் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்தோம். அப்போதே, அது குறித்த செய்திகளையும் வெளியிட்டோம். அப்போது, பஞ்சமி நிலம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் எங்களால் பெரிதாக எந்த முன்னெடுப்பையும் செய்ய முடியவில்லை.

நிலமற்ற பட்டியல் இன ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காக, 1892-ம் ஆண்டில் இந்திய பிரிட்டிஷ் அரசால் ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள்தான் பஞ்சமி நிலங்கள்.

ஸ்டாலின் தற்போது காட்டுவது, இப்போது இருக்கக்கூடிய பத்திரம்தான். மூலப் பத்திரம் இல்லை. முதலில் அந்த நிலம் ஆதி திராவிடர் கையில்தான் இருந்தது. பின்னர் தலித் அல்லாத இருவரின் கைகளுக்குச் சென்று, அவர்களின் மூலமாகக் கடைசியாக அஞ்சுகம் பதிப்பகத்துக்குச் சென்றுள்ளது. முரசொலி அலுவலகத்தின் சர்வே எண்ணைப் போட்டு கெஜட்டில் தேடினால் தெரிந்துவிடும். தி.மு.க நேரடியாக வாங்கியது என்று சொல்லவில்லை. ஆனால், நிலத்தின் மூலம் பற்றித் தெரியாமல் 'நான் பொது வாழ்க்கையைவிட்டு விலகத் தயார்' என ஸ்டாலின் சவால் விடுவது, ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல. அவர் அவசரப்படக் கூடாது.

Patta
Patta
``பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகம், அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அண்ணா அறிவாலயம் ஆகியவை குறித்து கருணாநிதி வாய் திறக்காமல் மெளனமாக இருப்பது ஏன் என்பதை அவர் விளக்கவேண்டும்!"
திருமாவளவன் - (26.07.2006)

நான் பலரிடம் இது குறித்து விவாதித்துவிட்டேன். நிச்சயமாக அது பஞ்சமி நிலம்தான். நாங்கள் ஏற்கெனவே திரட்டி வைத்திருந்த ஆதாரங்கள் தற்போது இல்லை. புதிதாக நில ஆணையரிடம் தகவல்களைப் பெற முயன்று வருகிறோம். ஸ்டாலின் விரும்பினால் அவரிடம் ஆதாரத்தைக் காண்பிக்கத் தயார். முரசொலி அலுவலக நிலம் எங்கள் நோக்கமல்ல; அதை ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும்.

அரசு உடனடியாகப் பஞ்சமி நிலம் குறித்து விசாரிக்க, ஒரு கமிஷனை ஏற்படுத்த வேண்டும். கெஜட்டை மையப்படுத்தி மொத்தமாகப் பட்டியலின மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்'' என வெடிக்கிறார் தடா பெரியசாமி.

`திருவண்ணாமலை மாவட்டத்தில் 22,398 ஏக்கர்; வட ஆற்காடு மாவட்டத்தில் 21,316 ஏக்கர், சேலம் மாவட்டத்தில் 13,601 ஏக்கர், விழுப்புரம் மாவட்டத்தில் 11,102 ஏக்கர், தர்மபுரி மாவட்டத்தில் 9,004 ஏக்கர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 950 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,892 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன’ - பஞ்சமி நிலப் பாதுகாப்பு இயக்கம்

தடா பெரியசாமியின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து, தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

''யார் என்ன சொன்னாலும், தலைவர் ஏற்கெனவே சொன்ன கருத்துதான் இறுதியான கருத்து. முரசொலி அலுவலகம் நிச்சயமாக பஞ்சமி நிலத்தில் இல்லை. அதனால்தான் தலைவரின் சவாலை மருத்துவர் ராமதாஸ் ஏற்கவில்லை. தற்போது அவருக்குப் பதிலாக, ஜி.கே.மணி பேசிக்கொண்டிருக்கிறார்.

Stalin
Stalin

மருத்துவர் ராமதாஸ் பின்வாங்கியதில் இருந்தே அவரின் கருத்தில் உண்மை இல்லை என நிரூபணமாகிறது. தடா பெரியசாமி என்றில்லை, யார் சொன்னாலும் தலைவர் ஸ்டாலின் சொன்ன கருத்தே இறுதியானது. அதுதான் உண்மையும்கூட'' என்கிறார் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.

அசுரனில் சொல்லப்படும் பஞ்சமி நிலம்!- ஸ்டாலினின் ட்வீட்டும் ராமதாஸின் கேள்வியும்
அடுத்த கட்டுரைக்கு