திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் அரசு அனுமதி பெற்று மது பரிமாறலாம் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இது குறித்து தமிழ்நாடு அரசு முதலில் வெளியிட்டிருந்த அரசாணையில், ``திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள், மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மது பரிமாறலாம். ஒருநாள் நிகழ்ச்சியாக இருப்பினும் அனுமதி பெற்று மது பரிமாறலாம்'' எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்புக்கு மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், இது குறித்து விகடன் வலைதளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது பரிமாற அரசு அனுமதி…
* தவிர்க்க முடியாதது
* வரவேற்கத்தக்கது
* கண்டனத்திற்குரியது
* கருத்து இல்லை’
எனக் கேட்டிருந்தோம்.
கருத்துக் கணிப்பின் முடிவில், மொத்தம் 4598 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதில், தவிர்க்க முடியாதது என 12 சதவிகிதத்தினரும், வரவேற்கத்தக்கது என 7 சதவிகிதத்தினரும், இம்முடிவு கண்டனத்திற்குரியது என 78 சதவிகிதத்தினரும், கருத்து இல்லை என 10 சதவிகிதத்தினரும் பதிலளித்துள்ளனர். பெரும்பாலான மக்களின் குரல், கண்டனத்திற்குரியதாகவே இருந்தது.
இதனிடையே, திருமணக் கூடங்களை நீக்கி, வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட அறிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.