Published:Updated:

Live: ``அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை!" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்
Live Update
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வம் Vs எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான செய்திகளின் தொகுப்பு...!

22 Jun 2022 8 PM

``அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை!" - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பளித்திருக்கிறார். ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, `அ.தி.மு.க பொதுக்குழு நடத்த தடையில்லை, திட்டமிட்டபடி நடத்தலாம்!'என உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

22 Jun 2022 7 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்
விகடன்

அ.தி.மு.க-வைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அந்தக் கட்சியின் பொதுக்குழுவை தடை செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரின் மனுவை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், பொதுக்குழுவுக்கு தடை கோரிய அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
22 Jun 2022 3 PM

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஒற்றைத் தலைமை தீர்மானம் இல்லை!' - ஓபிஎஸ் தரப்பு; `பொதுக்குழுவுக்கே அதிகாரம்!' - இபிஎஸ் தரப்பு | விசாரணை அப்டேட்ஸ்

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், 23 வரைவு தீர்மானங்களுக்கு ஓ.பி.எஸ் தரப்பு ஒப்புதல் அளித்திருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. மேலும், அ.தி.மு.க விதிகளுக்கு எதிராகச் செயல்பட மாட்டேன் என நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

எனினும் 23 வரைவு தீர்மானங்களைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் பொதுக்குழுவில் அனுமதிக்க முடியாது எனவும் வாதிடப்பட்டிருக்கிறது. இந்த 23 தீர்மானங்களைத் தவிர புதிதாக வேறு எந்த தீர்மானத்தையும் சேர்க்கக்கூடாது என்றும், ஓ.பி.எஸ் ஒப்புதல் அளித்துள்ள வரைவு தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் எதுவும் இல்லை எனவும் ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.

ஓபிஎஸ். - இபிஎஸ்
ஓபிஎஸ். - இபிஎஸ்

இந்த நிலையில், இ.பி.எஸ் தரப்பு, ``அ.தி.மு.க-வில் பொதுக்குழுவுக்கே முழு அதிகாரம். இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை விடவும் பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. இது நடக்கும், இது நடக்காது என்று உத்தரவாதமாக எதையும் சொல்ல முடியாது. பொதுக்குழு எந்த முடிவையும் எடுக்கலாம், எந்த விதியையும் சேர்க்கவோ நீக்கவோ முடியும். அதற்கு மட்டுமே அந்த அதிகாரம் இருக்கிறது. பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதுதான் ஜனநாயகம். அஜண்டா இல்லாமல்தான் ஏற்கெனவே பொது குழுக்கள் நடத்தப்பட்டுள்ளன" என வாதிடப்பட்டது.

22 Jun 2022 12 PM

``அதிமுக பொதுக்குழுவுக்கு செல்ல வேண்டாம்!" - பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம்

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ``அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் செல்ல வேண்டாம்!" எனக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பன்னீர்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

22 Jun 2022 11 AM
22 Jun 2022 11 AM

பன்னீர் ஆதரவாளர்கள் எடப்பாடிக்கு ஆதரவு..!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறவிருக்கும் நிலையில் அக்கட்சியில் ஒற்றை தலைமை சர்ச்சை மிகப்பெரிய அளவில் வெடித்திருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்களை தனது இல்லத்தில் சந்தித்து வருகிறார்.

எடப்பாடி, பன்னீர்
எடப்பாடி, பன்னீர்

இதில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்து வந்த பல நிர்வாகிகள் நேற்றும் இன்றும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வேளச்சேரி அசோக், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த நிலையில் இன்று இபிஎஸ்-ஐ சந்தித்து தனது ஆதரவை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சற்று முன்னர் ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் எடப்பாடி பழனிசாமி சந்தித்து அவருக்கு தனது ஆதரவை தெரிவித்து இருக்கிறார்.

22 Jun 2022 10 AM

ஓ.பி.எஸ் கோரிக்கை நிராகரிப்பு..!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடியால் அவமானப்பட்ட பன்னீர்!
எடப்பாடியால் அவமானப்பட்ட பன்னீர்!

``தனிநபரின் உள் அரங்கத்தில் கூட்டம் நடப்பதால் அதனை தடுத்து நிறுத்த முடியாது. மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்’’ என ஆவடி காவல்துறை தெரிவித்துள்ளது

22 Jun 2022 9 AM

``தர்மம் மறுபடியும் வெல்லும்" - ஓ.பி.எஸ்

அ.தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் நாளை(ஜூன் 23) நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த சில வாரங்களாகவே ஒற்றைத் தலைமை குறித்த விவகாரம் பரபரப்பாகவே உள்ளது. இதில், அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ``திட்டமிட்டப்படி அதிமுக பொதுக்குழு வரும் 23-ம் தேதி எழுச்சியோடு, மகிழ்ச்சியோடு நடைபெறும்” என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என ஆவடி காவல் ஆணையரிடம் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஒருவர் நேற்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து ஓ.பி.எஸ் தற்போது இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்' என ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ``மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்குச் சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனக் கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில், `தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்' என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்" என ஓ.பி.எஸ் ட்வீட் செய்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism