Published:Updated:

Live Updates : ``தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும்!" - பிரதமர் மோடி

பிரதமர் மோடி
Live Update
பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களைத் தொடங்கிவைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகிறார். அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!

26 May 2022 7 PM

``தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும்!" - பிரதமர் மோடி

மோடி
மோடி

பிரதமர் மோடி, ``தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு மண் என்பது சிறப்பு வாய்ந்தது. மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருவதென்பது சிறப்பான ஒன்று. தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்தவர்களாக விளங்குகிறார்கள். தமிழ் மொழி நிலையானது, நித்தியமானது. தமிழ் கலாசாரம் உலகளாவியது. தமிழ் மொழி பழைமையானது, சர்வதேச அளவில் புகழ்பெற்றது. சென்னை-கனடா, மதுரை-மலேசியா, நாமக்கல்-நியூயார்க், சேலம்-தென் ஆப்பிரிக்கா வரை தமிழ் கலாசாரம் இருக்கிறது. கான் திரைப்பட விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பர்ய உடையில் எல்.முருகன் சிவப்புக் கம்பளத்தில் நடந்தார்.

பெங்களூரு-சென்னை விரைவு சாலைத் திட்டம் இரு முக்கிய நகரங்களை இணைக்கிறது. மதுரை-தேனி அகல ரயில்பாதை திட்டம் விவசாயிகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும். எதிர்காலத் தேவையை நோக்கமாகக்கொண்டு நவீன திட்டங்கள் தீட்டப்படுகின்றன. உள்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. ஏழைகளின் நலனை உறுதிசெய்வதே நோக்கம். தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் என்னுடைய தொகுதியான வாரணாசியில் இருக்கிறது. அங்கு பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

26 May 2022 6 PM
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``கச்சத்தீவை மீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய நேரமிது!" - ஸ்டாலின்

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

முதல்வர் மு.க.ஸ்டாலின், ``வரியைச் சமமாக பகிர்ந்தளிப்பதே உண்மையான கூட்டாட்சி. ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களில் தமிழ்நாடு முதன்மை வகிக்கிறது. ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களின் நிதிச் சுமையைச் சமமாக ஏற்க வேண்டும். ஜி.எஸ்.டி இழப்பீடு காலத்தை குறைந்தது இரண்டு ஆண்டுக்காலம் நீட்டிக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு உரிமையை நிலைநாட்டவேண்டிய நேரமிது. தமிழை அலுவல் மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும். நீட் விலக்கு சட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றார்.

26 May 2022 6 PM

``திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசு விழா!" - ஸ்டாலின்

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

``திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் பங்கேற்கும் முதல் அரசு விழா இது. ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திராவிட மாடல் வளர்ச்சி. இது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி." - முதல்வர் ஸ்டாலின்.

26 May 2022 6 PM

புதிய கல்விக் கொள்கை வலிமையான இந்தியாவை உருவாக்கும்!

எல்.முருகன்
எல்.முருகன்

``ரூ.31,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி. இன்று தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கு முக்கியமான நாள். புதிய கல்விக் கொள்கை வலிமையான இந்தியாவை உருவாக்கும்!" - எல்.முருகன்.

26 May 2022 6 PM

விழா மேடை வந்தடைந்தார் பிரதமர் மோடி... தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது நிகழ்ச்சி!

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கம் வந்தடைந்தார். பிரதமர் விழா மேடைக்கு வந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

26 May 2022 5 PM

வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு... காரிலிருந்து இறங்கி, கையசைத்த மோடி!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு சாலை மார்க்கமாகச் சென்றுகொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க தொண்டர்களும், பொதுமக்களும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கலை நிகழ்ச்சிகளை காரில் இருந்தபடி ரசித்த பிரதமர், ஒருகட்டத்தில் கீழே இறங்கி அனைவரையும் பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Live Updates : ``தேசிய கல்விக் கொள்கை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உதவும்!" - பிரதமர் மோடி
26 May 2022 5 PM

ஐ.என்.எஸ் அடையாறில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின்!

மோடி
மோடி

ஐ.என்.எஸ் அடையாறு கடற்படைத் தளத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

26 May 2022 5 PM

சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை வரவேற்ற முக்கியத் தலைவர்கள்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி வரவேற்றனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன், மேயர் பிரியா ஆகியோர் வரவேற்றனர்.

26 May 2022 5 PM

Live Updates | சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

 பிரதமர் மோடி!
பிரதமர் மோடி!

பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர்.

26 May 2022 4 PM

பிரதமர் மோடி சென்னை விசிட்: வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்!

26 May 2022 1 PM

ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, ``மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மக்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு உதவிய அவரின் துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்து, மனதார வரவேற்கின்றனர்” என ட்வீட் செய்திருக்கிறார்.

26 May 2022 1 PM

தமிழக பாஜக நிர்வாகிகள் இன்று சென்னையில் மோடியின் வருகை குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

26 May 2022 1 PM

பிரதமர் மோடிக்கு வரவேற்பு..!

இன்று மாலை 5 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு சென்று, பிறகு சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்குக்குச் செல்கிறார்.

சென்னையில் தமிழ்நாடு பாஜக சார்பில் மோடியை வரவேற்று பல்வேறு இடங்கள் பதாகைகளும் கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளது.

26 May 2022 1 PM

பிரதமர் மோடியின் சென்னை விசிட்!

தமிழ்நாட்டில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை தொடங்கிவைக்கவும், அடிக்கல் நாட்டவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை சென்னை வருகிறார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடியும், ஸ்டாலினும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இது. ஸ்டாலின் முதல்வரான பிறகு மோடியுடன் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின்

மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி, கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அஸ்வினி வைஷ்ணவ், ஹர்தீப் சிங் பூரி, மத்திய இணையமைச்சர்கள் வி.கே.சிங், எல்.முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். சென்னையில் சுமார் 22,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னை போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன!