Published:Updated:

`பா.ஜ.க டெல்லி தலைமையின் செல்லப்பிள்ளை!’ - எப்படி தேர்வானார் எல்.முருகன்?

 எல்.முருகன்
எல்.முருகன்

தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத்தலைவராக இருந்தபோது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவரது அதிரடியான செயல்பாடுகளின் காரணமாக தற்போது தமிழக பா.ஜ.க தலைமை வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம். சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மனைவி மருத்துவராக உள்ளார். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து அந்தப்பதவி காலியாக இருந்தது. தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கான ரேஸில் கட்சியின் சீனியர்கள் இருந்து வந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் கட்சித் தலைமை எல்.முருகனை தலைவராக நியமித்துள்ளது. இவர் கடந்த 20 வருடங்களாக கட்சியில் உள்ளார்.

 எல்.முருகன்
எல்.முருகன்

இதுகுறித்து பா.ஜ.க மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இருந்த முருகன் மாணவர் அணியில் சிறப்பாக பணியாற்றினார். பின்னர் சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களமிறங்கி வெற்றி வாய்ப்பை இழந்தார். பா.ஜ.க-வின் எஸ்.சி பிரிவின் தேசிய பொதுச்செயலராக இருந்தார்.

கேரள மாநில பொறுப்பாளர். அம்பேத்கர் பவுண்டேசனின் உறுப்பினராகவும் இருந்தார். அதன்பிறகுதான் எஸ்.சி கமிஷனின் தேசிய துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார். அவருக்கு இன்னும் ஓராண்டு பதவிக்காலம் இருக்கிறது. அந்தப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு விரைவில் தமிழக பா.ஜ.க தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வார். டெல்லியில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலருடன் எல்.முருகன் நெருக்கமாக இருந்துவந்தார். அவர்களின் செல்லப்பிள்ளையாக இருந்த வழக்கறிஞர் எல்.முருகன் மீது நம்பிக்கை வைத்து தமிழக பா.ஜ.க தலைமை பதவி வழங்கப்பட்டுள்ளது" என்றனர்

 எல்.முருகன்
எல்.முருகன்

இதுகுறித்து எல்.முருகனிடம் பேசியபோது, ``என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பதவியை வழங்கியுள்ளனர். பா.ஜ.க தலைமையின் நம்பிக்கையை நிறைவேற்றுவேன்” என்றார். அருந்ததியினர் சமுதாயத்தைச் சேர்ந்த எல்.முருகனுக்கு பா.ஜ.க தலைமைப் பதவி கொடுத்துள்ளதால் அவர் சார்ந்துள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு