Published:Updated:

`இரண்டே பெண்கள்தான் இருக்கிறார்கள்’ ; தேர்தலைப் புறக்கணிக்கும் அம்முண்டி ஊராட்சி! - என்ன நடக்கிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்
வீடுகளில் கறுப்புக்கொடி கட்டிய மக்கள்

``இந்த ஊராட்சியில் மொத்தம் 2,045 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவற்றில், பட்டியல் சமூக வாக்குகள் மூன்றுதான் இருக்கின்றன. அதிலும் இரண்டு பெண்கள், ஓர் ஆண் மட்டுமே உள்ளனர். மூன்று பேரையும் தவிர்த்துவிட்டால் மீதமுள்ள 2,042 வாக்குகள் பொதுப்பிரிவினருடையவை.”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் மாவட்டம், காட்பாடி ஒன்றியத்திலிருக்கும் அம்முண்டி ஊராட்சித் தலைவர் பதவி, பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து ஊர்கூடி தேர்தலைப் புறக்கணிக்க தீர்மானம் போட்டுள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்த அம்முண்டி மக்கள், வீடுகள்தோறும் கறுப்புக்கொடி கட்டியதுடன், சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர். வேட்புமனுத் தாக்கல் தேதியும் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ஒருவர்கூட போட்டியிட மனுத்தாக்கல் செய்யாதது, கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம் செய்த மக்கள்
போராட்டம் செய்த மக்கள்

அம்முண்டி கிராமத்துக்குச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினோம். ``இந்த ஊராட்சியில் மொத்தம் 2,045 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவற்றில், பட்டியல் சமூக வாக்குகள் மூன்றுதான் இருக்கின்றன. அவர்களும் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்களிலும் இரண்டு பெண்கள், ஒரு ஆண் மட்டுமே உள்ளனர். மூன்று பேரையும் தவிர்த்துவிட்டால் மீதமுள்ள 2,042 வாக்குகள் பொதுப்பிரிவினருடையவை. இந்த ஊராட்சி தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே பொதுப்பிரிவினருக்குத்தான் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுவருகிறது.

பெண்களில் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஏற்றுக்கொண்டிருப்போம். ஆனால் இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே இருக்கிற பட்டியல் சமூகத்தினருக்கு ஊராட்சித் தலைவர் பதவியை ஒதுக்கியிருப்பதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இங்கு எப்போதுமே தி.மு.க-வுக்கு வாக்குகள் விழுவதில்லை. சட்டமன்றத் தேர்தலில்கூட இங்கிருந்து குறைந்த வாக்குகளே பதிவாகியிருந்தன. இந்தக் காழ்ப்புணர்ச்சியால்தான் பழிவாங்கப்படுகிறோம்.

துரைமுருகன்
துரைமுருகன்

பொதுப்பிரிவினருக்கு மாற்றக் கோரி மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்து முறையிட்டோம். எங்கள் பகுதியிலுள்ள தி.மு.க-வினரும் துரைமுருகனிடம் முறையிட்டனர். யாருமே கண்டுகொள்ளாததால், தொடர்ந்து போராட்டம் நடத்தினோம். அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். இந்தநிலையில், நேற்றுடன் வேட்புமனுத் தாக்கலும் முடிவடைந்துவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவரை எங்கள் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ஒருவர்கூட வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. ‘யாரும் மனுத்தாக்கல் செய்யக் கூடாது’ என்று ஊர்க்கட்டுப்பாடு போட்டிருக்கிறோம். இங்கு வசிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேரும்கூட வாக்களிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டனர். ஊர்க் கட்டுப்பாட்டை மீறி யாரும் நடந்துகொள்ளவும் கூடாது. ஊராட்சித் தலைவர் பதவிக்கு மட்டுமல்ல... ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவித் தேர்தல்களையும் புறக்கணித்திருக்கிறோம். எங்கள் ஊராட்சியிலிருந்து யாருமே ஓட்டுப்போட மாட்டோம்’’ என்றனர்.

பா.ம.க வழக்கறிஞர் பாலு
பா.ம.க வழக்கறிஞர் பாலு

அம்முண்டி ஊராட்சி மக்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது.

வழக்கை முன்னெடுத்து நடத்தும் பா.ம.க வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். ``ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறோம். அம்முண்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்வதற்கே பட்டியல் சமூகத்தில் பெண்கள் இல்லை. அந்தச் சமூகப் பெண்கள் இரண்டு பேர் மட்டுமே வசிக்கிறார்கள். அவர்களும் போட்டியிடத் தயாராக இல்லை. அவர்கள் வெற்றிபெற்றாலும் பட்டியல் சமூக மக்களுக்கு சேவை செய்ய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆனால், பட்டியல் சமூக மக்களே வசிக்காத ஊராட்சியில் அவர்களால் எப்படி சர்வீஸ் செய்ய முடியும்? வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோதும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறோம். தேர்தல் அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில், இன்று முடிவு தெரிந்துவிடும். இந்தப் பிரச்னைக்கு தொகுதி எம்.எல்.ஏ-வான துரைமுருகன்தான் காரணம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு