Published:Updated:

`ஊரக, நகர்ப்புறப் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?’ - உள்ளாட்சிக் குழப்பம்; தேர்தல் ஆணையம் விளக்கம்

நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் முழுமையாக ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்படுமா அல்லது ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பதவிக்காலத்துடன் சேர்க்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழகத்தில், பெரிய மாவட்டங்களாக இருந்த வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய நான்கு மாவட்டங்களும் பிரிக்கப்பட்டு ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி என ஐந்து புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மறுசீரமைப்பு காரணமாக, இந்த ஒன்பது மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற 27 மாவட்டங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2019 டிசம்பர் மாதம் நடத்தப்பட்டன. அப்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து, விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் விரைவில் நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் குறித்து அரசியல் கட்சியினர் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. ஊரகமும் நகர்ப்புறமும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்டவைதான். கடந்த ஆட்சிக்காலங்களில், இரண்டையும் உள்ளடக்கியே உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இந்த முறை ஊரகம், நகர்ப்புறம் எனப் பிரிக்கப்பட்டதுடன், 27 மாவட்டங்களுக்கும், ஒன்பது மாவட்டங்களுக்கும் தனித்தனியாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

வாக்கு (கோப்புப் படம்)
வாக்கு (கோப்புப் படம்)

இவை இரண்டுக்குமான கால இடைவெளியே 21 மாதங்கள் ஆகும். அப்படியிருக்க, நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கான பதவிக்காலம் முழுமையாக ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்படுமா அல்லது ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட ஊரகப் பதவிக்காலத்துடன் சேர்க்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன. மாநில தேர்தல் ஆணையத்தின் பொதுத் தகவல் அலுவலரும், தலைமை நிர்வாக அலுவலருமான மைதிலி, அதற்கான பதில்களைக் கொடுத்திருக்கிறார்.

கேள்வி: 2019-ல், 27 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?

பதில்: பதவியேற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள்.

கேள்வி: 2021-ல், ஒன்பது மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?

பதில்: பதவியேற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள்.

கேள்வி: 27 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன், அடுத்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படுமா அல்லது 27 மாவட்டங்களுக்கு மட்டும் நடத்தப்படுமா?

பதில்: 27 மாவட்டங்களில் மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.

கேள்வி: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்ட பின்பு இந்தப் பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகள் முழுமையாக நீட்டிக்கப்படுமா?

பதில்: பதவியேற்ற நாளிலிருந்து ஐந்து வருடங்கள் முழுமையாக நீட்டிக்கப்படும். ஊரக உள்ளாட்சிப் பதவிக் காலங்களுடன் நகர்ப்புற உள்ளாட்சிப் பதவிக் காலம் சேர்க்கப்படாது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு