Published:Updated:

உள்ளாட்சி ரேஸ்: உட்கட்சி உள்குத்துகளைத் தாண்டி தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர் யார்?-கள நிலவரம்

தாம்பரம் மாநகராட்சி

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. முக்கிய மாநகராட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என தி.மு.க - அ.தி.மு.க மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. தாம்பரத்தின் நிலை என்ன?

உள்ளாட்சி ரேஸ்: உட்கட்சி உள்குத்துகளைத் தாண்டி தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயர் யார்?-கள நிலவரம்

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் அனல் பறந்துகொண்டிருக்கிறது. முக்கிய மாநகராட்சியைக் கைப்பற்றியே ஆக வேண்டும் என தி.மு.க - அ.தி.மு.க மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. தாம்பரத்தின் நிலை என்ன?

Published:Updated:
தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சி

தாம்பரம் மாநகராட்சியாக மாற்றப்பட்டு, முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கிறது. மாநகராட்சியாக அறிவிக்கப்படுவதற்கு முன் தாம்பரம் - 39, பம்மல் - 21, அனகாபுத்தூர் - 18, பல்லாவரம் - 42, திருநீர்மலை - 18, மாடம்பாக்கம் - 15, பெருங்களத்தூர் -15, சிட்லபாக்கம் - 13, பீர்க்கன்காரணை - 15 என மொத்தம் 213 வார்டுகள் இருந்தன. தற்போது உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சி வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டு ஐந்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 70 வார்டுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தாம்பரம் மாநகராட்சியில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் 12 வார்டுகள் காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 58 இடங்களில் தி.மு.க. நேரடியாகப் போட்டியிடுகிறது.

அ.தி.மு.க சார்பில் 70 வார்டுகளில் 67 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று இடங்கள் கூட்டணிக் கட்சியான புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவைபோக பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., அ.ம.மு.க., ம.நீ.ம., சுயேச்சைகள் எனப் பல்வேறு தரப்பும் போட்டியில் இருக்கின்றன.

தாம்பரம் மாநகராட்சி வரைபடம்
தாம்பரம் மாநகராட்சி வரைபடம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாம்பரம் மாநகராட்சிக்கான தேர்தல் தலைவர்கள் பிரசாரத்துடன் அனல் பறந்துகொண்டிருக்கிறது. முதல் முறையாக மேயர் தேர்தலை எதிர்கொள்ளும் மாநகராட்சி எதிர்கொள்ளும் சிக்கல், வேட்பாளர் தேர்வில் நடந்த குழப்பங்கள், உட்கட்சி உள்குத்துகள், மேயர், துணை மேயர் ரேஸில் இருக்கும் வேட்பாளர்கள் உள்ளிட்டவை குறித்து ஓர் அலசல்…

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாரிசுகள் மற்றும் சொந்தங்கள்:

தாம்பரம் மாநகராட்சியில் எம்.எல்.ஏ-க்கள், வட்டச் செயலாளர்களின் உறவினர்கள் என மிகப்பெரிய பட்டாளமே களத்தில் இறங்கியிருக்கின்றனர். தி.மு.க சார்பில் தாம்பரம் 49-வது வார்டில் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் டி.காமராஜ் போட்டியிடுகிறார். 52-வது வார்டில் அவரின் சித்தப்பா பையன் டி.ஆர்.கோபி போட்டியிடுகிறார். இவர் ஆறாவது முறையாக இதே வார்டில் போட்டியிடுகிறார். 56-வது வார்டுக்கு பெருங்களத்தூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் சேகர் போட்டியிடுகிறார். அதேபோல் 57-வது வார்டில் அவருடைய மனைவி கமலா சேகர் போட்டியிடுகிறார். கமலா ஏற்கெனவே கவுன்சிலராக இருந்தவர். 56-வது வார்டில் போட்டியிடும் சேகரும் 1996 முதல் 2016-ம் ஆண்டு வரை பெருங்களத்தூர் பேரூராட்சித் தலைவராக இருந்திருக்கிறார். பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதியின் சகோதரர் ஜோசப் அண்ணாதுரை 17-வது வார்டில் போட்டியிடுகிறார். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனின் மைத்துனர் ஜி.காமராஜ் 30-வது வார்டில் போட்டியிடுகிறார். 60-வது வார்டில் வட்டச் செயலாளர் ரத்னகுமாரின் மனைவி சௌமியா ரத்னகுமாரும், 51-வது வார்டில் மற்றொரு வட்டச் செயலாளர் ஸ்ரீதர் குமாரின் மனைவி லிங்கேஸ்வரியும் வேட்பாளர்களாக் களமிறங்கியிருக்கிறார்கள்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எஸ்.ஆர்.ராஜா
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எஸ்.ஆர்.ராஜா

அ.தி.மு.க பட்டியலில், பல்லாவரம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தன்சிங்கின் மனைவி தனம் தன்சிங் 13-வது வார்டில் போட்டியிடுகிறார். அதேபோல் இவரின் மகன் ஜெயபிரகாஷ் 22-வது வார்டில் போட்டியிடுகிறார். இவர் ஏற்கெனவே பல்லாவரம் நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர். இவர்கள் போக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா மற்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மொத்தம் 20 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்களாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவிர்க்கப்பட்ட மூத்த உறுப்பினர்கள்; உட்கட்சி உள்குத்துகள்:

தாம்பரம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு உள்குத்து வேலைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். தாம்பரத்தின் 50-வது வார்டு தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான மமக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கே தி.மு.க-வின் மாவட்டப் பிரதிநிதி செல்வக்குமார் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இவரின் வேட்புமனுவில் வேட்பாளர் கையொப்பமே இல்லாமல் இருந்த நிலையிலும் அது ஏற்கப்பட்டுள்ளதாம். வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 52-வது வார்டில் தி.மு.க-வின் வட்டச் செயலாளர் பெரியநாகம் என்பவர் தேர்தலில் போட்டியிடுகிறார். பெரியநாயகம் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தைப் பயன்படுத்தித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதுதான் கூடுதல் ஹை-லைட்.

அதேபோல 54-வது வார்டில் தி.மு.க வேட்பாளரை எதிர்த்து மற்றொரு தி.மு.க பிரதிநிதி வெங்கடேசன் என்பவர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இப்படிக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து மட்டுமல்ல, தங்கள் வேட்பாளர்களை எதிர்த்தும் தி.மு.க-வினர் பல இடங்களில் போட்டியிடுவதால் தி.மு.க பிரதிநிதிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

அமைச்சர்  தா.மோ.அன்பரசன்
அமைச்சர் தா.மோ.அன்பரசன்

தி.மு.க-வினர் சுயேச்சையாக நின்றாலும், கூட்டணிக் கட்சியினருக்குத்தான் வாக்கு சேகரிக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ அன்பரசன் எச்சரிக்கும் அளவுக்கு இங்கே தி.மு.க-வினர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள். மேலும் 44-வது வார்டில் போட்டியிடும் இரா.ராஜா, ``பத்திரப் பதிவு முறைகேட்டில் குண்டர் சட்டத்தில் சிறைக்குச் சென்றவர்” என்கிறார்கள் அப்பகுதியினர்.

அ.தி.மு.க-வில் ஒரு படி மேலே சென்று, பல இடங்களில் எதிர்க்கட்சிகளோடு கூட்டணி அமைத்துக்கொண்டு அங்கே பலம் குறைந்த வேட்பாளர்களை நிறுத்தியிருப்பதும், அதற்கு பிரதிபலனாகத் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக பலம் குறைந்தவர்களை எதிராகப் பெற்றிருக்கிறார்களாம்.

எதிர்க்கட்சிகளோடு கூட்டு வைத்துக்கொண்டு அப்பகுதி எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பதும் அரங்கேறிவருகிறது. சில இடங்களில் அ.தி.மு.க-வினர், தி.மு.க-வினரோடு பேச்சுவார்த்தை நடத்தி வேட்புமனுக்களைத் திரும்பப்பெற்றதும் நிகழ்ந்திருக்கிறதாம்.

ஸ்டாலின் புகைப்படத்துடன் சுயேச்சை பிரசாரம்
ஸ்டாலின் புகைப்படத்துடன் சுயேச்சை பிரசாரம்

தாம்பரத்தில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்களைப் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என தி.மு.க – அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சியின் தலைமைக்கும் புகார்கள் பறந்திருக்கின்றன.

தாம்பரத்தில் உள்ள சிக்கல்கள், சவால்கள்

பல்லாவரம் குப்பை மாற்று நிலையத்தில், மலைபோல் குப்பை தேங்கி, சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக நிலவும் இந்தப் பிரச்னை, மாநகராட்சி முதல் மேயருக்கு, பெரும் சவாலாக இருக்கும். மாநகராட்சியாக மாறியதால், பல்லாவரம், சிட்லபாக்கம் பகுதிகளிலிருந்து சேகரமாகும் குப்பையை, மாற்று நிலையத்தில் தொடர்ந்து கொட்டிவருகின்றனர். தற்போது, அங்கு டன் கணக்கில் குப்பை தேங்கி, பார்ப்பதற்கு மலைபோல் உள்ளது. மற்றொருபுறம் துர்நாற்றம், கொசுத் தொல்லை அதிகரித்து, அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பையிலுள்ள பிளாஸ்டிக் கவர்களை, பறவைகள் துாக்கிவந்து சாலையில் போடுவதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துவருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், பெருங்குடி குப்பை மண்டலம் போன்று, பல்லாவரம் குப்பை மாற்று நிலையமும் மாறிவிடும் என்று இப்பகுதியினர் அஞ்சுகின்றனர். தாம்பரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயருக்கு, இந்தப் பிரச்னை பெரும் சவாலாக இருக்கும்.

தாம்பரம் குப்பை மேடு
தாம்பரம் குப்பை மேடு

மழைநீர் தேங்குவது, மழைநீர் வடிகால் அமைப்புகள் இல்லாதது, மார்கெட் பகுதியில் இருக்கும் இட நெருக்கடி, சாலைகளில் தேங்கும் குப்பை எனப் பல்வேறு பிரச்னைகளையும் சிக்கல்களையும் இங்கு பொறுப்பேற்கும் முதல் மேயர் சந்திக்க நேரிடும்.

தாம்பரம் மாநகராட்சி - மேயர் ரேஸில் இருப்பவர்கள் யார்?

கூட்டணி பலம், பிரசார வியூகம், ஆளுங்கட்சி என்ற ப்ளஸ் ஆகியவை காரணமாக தாம்பரம் மாநகராட்சியை திமுக-வே கைப்பற்றும் வாய்ப்புகள் அதிகம். திமுக-வில் மேயர் ரேஸில் யார் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்..

தாம்பரம் மாநகராட்சி மேயர் ரேஸில் சித்ரா தமிழ்க்குமரன், மகேஸ்வரி கார்த்திக், கல்யாணி டில்லி, வசந்த குமாரி கமலக்கண்ணன், லிங்கேஸ்வரி ஸ்ரீதர் குமார் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில் வசந்தகுமார் கமலக்கண்ணனுக்கு எஸ்.ஆர்.ராஜாவின் ஆதரவு இருப்பதால் இவருக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். துணை மேயர் போட்டியில் எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனன் டி.காமராஜ், ஜகத்ரட்சகன் மைத்துனன் ஜி.காமராஜ், பல்லாவரம் எம்.எல்.ஏ இ.கருணாநிதி சகோதரர் ஜோசப் அண்ணாதுரை, பெருங்களத்தூர் சேகர் ஆகியோர் இருக்கின்றனர்.

தாம்பரம் பகுதியில் இருப்பவருக்கு மேயர் பதவி கொடுத்தால் பல்லாவரம் பகுதியில் இருப்பவர்களுக்கு துணை மேயர் கொடுக்கப்படலாம். அப்படிப் பார்த்தால் ஜகத்ரட்சகன் மைத்துனன் ஜி.காமராஜ், இ.கருணாநிதி சகோதரர் ஜோசப் அண்ணாதுரை ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறுகிறார்கள். பல்லாவரம் பகுதியில் இருப்பவருக்கு மேயர் பதவி கொடுத்தால் தாம்பரம் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான் துணை மேயர் கொடுக்கக்கூடும். இந்த வகையில் எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் டி.காமராஜுக்கு வாய்ப்பு இருக்கலாம் என்கிறார்கள். அதே நேரம் பெருங்களத்தூர் சேகர் என்பவர் அமைச்சர் தா.மோ.அன்பரசனின் ஆதரவாளர் என்பதால் அவரும் துணை மேயர் ரேஸில் இருக்கிறார் என்கிறார்கள்.

தாம்பரம் மாநகராட்சி
தாம்பரம் மாநகராட்சி

தாம்பரத்தைப் பொறுத்தவரை மேயரைவிட, துணை மேயர் பதவிக்குத்தான் அதிக போட்டி இருக்கும் என்கிறார்கள். அதோடு மண்டல சேர்மன் ரேஸிலும் இதில் இடம்பெற்றவர்களே இருக்கிறார்கள் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!

தாம்பரம் மாநகராட்சியில் செய்யப்பட்டுள்ள தேர்தல் பணிகள் குறித்து ஆணையர் இளங்கோவனிடம் பேசினோம். “தேர்தலுக்காக ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தியுள்ளோம். 102 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கெல்லாம் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அனைத்து வாக்குச்சாவடிகளையும் வீடியோ ரெக்கார்டு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்களிக்க வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவிருக்கிறோம். பணப் பட்டுவாடா செய்வதாக இதுவரை எந்தப் புகாரும் இல்லை. இனி அப்படியான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தனிப்படையினர் தயாராக இருக்கிறார்கள்.

இளங்கோவன் தாம்பரம் ஆணையர்
இளங்கோவன் தாம்பரம் ஆணையர்

முதன்முறை தேர்தலை எதிர்கொள்வதால் ஒவ்வொரு விஷயத்தையும் கவனத்துடனேயே செய்துவருகிறோம். கட்சியினருடன் ஆலோசனை செய்தும் சிலவற்றை முன்னெடுத்துவருகிறோம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism