Published:Updated:

உள்ளாட்சி உய்யலாலா!

உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி உய்யலாலா!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021

உள்ளாட்சி உய்யலாலா!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021

Published:Updated:
உள்ளாட்சி உய்யலாலா!
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சி உய்யலாலா!

நல்லா இருக்கே இந்த டீலிங்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. அங்கு நடைபெற்ற தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட எ.வ.வேலு, ‘‘நான்கு பேர் விருப்ப மனு கொடுத்தால், ஒருவருக்குத்தான் வாய்ப்பு வழங்க முடியும். அதற்காக மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம். அவர்கள் எந்தச் செலவும் செய்யாமல் கூட்டுறவுத்துறையில் பதவி, அறங்காவலர் என மற்ற துறைகளில் பதவிகள் கிடைக்கும்’’ என்று பேச... ‘‘அடடே, நல்லாருக்கே இந்த டீலிங்!’’ என்று உற்சாகமாகிவிட்டார்களாம் உடன்பிறப்புகள்.

உள்ளாட்சி உய்யலாலா!

களமிறங்கும் இளைஞர் படை!

நெல்லை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளையெல்லாம் அருகிலுள்ள ராமையன்பட்டி ஊராட்சிக்குச் சொந்தமான இடத்தில்தான் கொட்டுகிறார்கள். மலைபோலக் குவிந்திருக்கும் குப்பைகள் அடிக்கடி தீப்பற்றிக்கொள்வதால், உள்ளூர் மக்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. மாநகராட்சியின் கழிவுநீரும் அங்கு வந்து சேர்வதால் விவசாயத்துக்குப் பயன்பட்ட சத்திரம் புதுக்குளம் பாழாகிவிட்டது. அத்துடன், குடிநீர் பற்றாக்குறையும் தலைவிரித்தாடுகிறது. அதனால், இதுவரை அரசியல் கட்சியினரை நம்பியிருந்த இளைஞர்கள், இந்த முறை தாங்களே களமிறங்க முடிவு செய்திருக்கிறார்கள். பஞ்சாயத்துத் தலைவர், யூனியன் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு இளைஞர்கள் போட்டியிடவிருப்பதால், கலக்கத்தில் இருக்கிறார்கள் கரைவேட்டிகள்.

வீட்டுக்கு வீடு டிக் டிக் டிக்!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தலை மனதில்வைத்து உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள் சார்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் சுவர்க் கடிகாரம் வழங்கத் திட்டமிருந்தார்கள். அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட, அப்போதும் அசராமல் சுவர்க் கடிகாரம் வழங்கும் விழாவை நடத்தி முடித்துவிட்டார்கள். ‘‘தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ இதயவர்மன் உள்ளிட்ட தி.மு.க-வினர் சுவர்க் கடிகாரம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த விவகாரத்தைத் தேர்தல் அலுவலரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லவிருக்கிறோம்’’ என்று கொந்தளிக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

உள்ளாட்சி உய்யலாலா!

‘‘அந்த இரண்டு மாவட்டங்களும் வேண்டாம்!’’

`தனித்துப் போட்டி’ என்று பா.ம.க அறிவித்ததும், ‘‘வடக்கிலிருக்கும் ஏழு மாவட்டங்களில் மாம்பழத்தைப் பழுக்கவைத்துவிடலாம்... தெற்கில் இருக்கும் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் என்ன செய்வது?” என்று கட்சித் தலைமையிடம் கையைப் பிசைந்திருக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். அதற்குக் கட்சித் தலைமைத் தரப்பிலிருந்தோ, ‘‘இரண்டு மாவட்டங்களும் நமக்கு வேண்டாம். மற்ற ஏழு மாவட்டங்களில் மட்டும் தீவிர கவனம் செலுத்தினாலே வாக்குவங்கியைத் தக்கவைத்துக்கொள்ளலாம்’’ என்று பதில் வந்ததாம்!

யூ டர்ன் அடித்த அதிகாரிகள்!

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் சிறப்புநிலை பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயர்த்துவது தொடர்பாகக் கருத்துக்கேட்புக் கூட்டம் திருநின்றவூரிலுள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நடுக்குத்தகை, நெமிலிச்சேரி ஆகிய ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதால், அங்கும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்த விஷயம் தெரியாமல் கூட்டத்துக்கு ஊர் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் என்று 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்துவிட்டார்கள். தகவல் அறிந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கவே... அவசர அவசரமாகக் கூட்டத்தை ரத்துசெய்துவிட்டு அதிகாரிகள் பறந்தார்கள்.

இன்பச் சுற்றுலா வந்தார்களா முன்னாள் அமைச்சர்கள்?

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் ஒன்பது மாவட்டங்களிலும், 30 முன்னாள் அமைச்சர்களைத் தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களாக அறிவித்திருக்கிறது அ.தி.மு.க தலைமை. கே.பி.முனுசாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு வேலூர் மாவட்டமும், செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், கே.சி.கருப்பணன், கே.சி.வீரமணி ஆகியோருக்கு திருப்பத்தூர் மாவட்டமும், எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ராணிப்பேட்டை மாவட்டமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் தேதி அறிவித்து இரண்டு நாள்கள் ஆன பின்னரே இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சாவகாசமாக வந்து சேர்ந்தார்கள். களப்பணியிலும் தொய்வு காணப்படுவதால், “இவர்கள் என்ன இன்பச் சுற்றுலாவுக்கா வந்திருக்கிறார்கள்?” என்று அதிருப்தியில் இருக்கிறார்கள் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள்!

‘‘யாரை நம்பியும் நாம இல்லை!’’

ஆளும் தி.மு.க-வுக்கு எதிராக ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தைக் கையிலெடுத்து குரல் கொடுத்துவந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதை உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயுதமாகவே மாற்றிவிட்டார் என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். செல்லும் இடங்களிலெல்லாம் பல்கலைக்கழக விவகாரத்தைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை. விழுப்புரம் அ.தி.மு.க அலுவலகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்திலும், ‘‘இப்போது நடக்கும் ஆட்சியில் நியாய, தர்மத்தை எதிர்பார்க்க முடியாது. எந்தச் சட்டத்துக்கும் உட்பட்டு இந்த அரசு செயல்படாது’’ என்று பல்கலைக்கழக விவகாரத்தைவைத்து தி.மு.க-வை விமர்சித்தவர், ‘‘யாரை நம்பியும் அ.தி.மு.க இல்லை. நம்மை நம்பித்தான் நாம இருக்கோம்’’ என்று பா.ம.க தனித்துப் போட்டியிடுவதையும் இடித்துரைத்திருக்கிறார்.

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க சார்பிலோ தொகுதிக்கு இரண்டு பொறுப்பாளர்களை நியமித்து உள்ளாட்சித் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டார் பொன்முடி. கடந்த முறை வார்டு வரையறை செய்வதற்காக உள்ளாட்சித் தேர்தல் தடைப்பட்டபோது போட்டியிடவிருந்த வேட்பாளர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதால் தி.மு.க-வினர் குஷியில் இருக்கிறார்கள்.