பிரீமியம் ஸ்டோரி

ஓட்டாக மாறுமா புலிவேட்டை?

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் 4-வது வார்டுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 9-ம் தேதி நடக்கிறது. கால்நடைகளையும் மனிதர்களையும் தாக்கிக் கொன்ற டி-23 என்ற ஆண் புலியின் பதற்றம் தொற்றியிருக்கும் மசினகுடி பகுதி, இந்த வார்டுக்குள்தான் வருகிறது. ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்கக் கோரி வனத்துறைக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை மக்கள் நடத்திவந்த நிலையில், உள்ளூரில் இருந்துகொண்டே போராட்டக் களத்துக்கு எட்டிப்பார்க்காத வனத்துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன், இறுதியில் ஒரே ஒரு நாள் மட்டும் சம்பிரதாயத்துக்கு எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றார். இந்த விவகாரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட கூடலூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஜெயசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள், ‘‘வனத்துறை அமைச்சரே மக்கள் பிரச்னையில ஆர்வம் காட்டலை. அவங்க கட்சி வேட்பாளரு மட்டும் எப்படி இருப்பாரு? எங்க கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப் போட்டா ஊருக்குள்ள புலி வராமப் பார்த்துக்குவோம்’’ என்று பிரசாரம் செய்தார்கள்.

உள்ளாட்சி உய்யலாலா!

‘‘வேட்பாளரைக் கண்டா வரச் சொல்லுங்க!’’

நெல்லை மாவட்டம், ராதாபுரம் யூனியனில் 17-வது வார்டுக்கான தேர்தலில் போட்டியிடுகிறார், தி.மு.க ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷின் மனைவி சௌமியா. மாவட்டப் பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் ஜெகதீஷ், தன் மனைவியை யூனியன் சேர்மனாக்கும் ஆசையில் தேர்தல் களத்தில் இறக்கியிருக்கிறார். ஆனால், சௌமியாவுக்கும் அரசியலுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது என்பதால், அவரைப் பிரசாரத்துக்குக்கூட அழைத்துச் செல்லாமல், மனைவிக்கும் சேர்த்து அவரே பிரசாரம் செய்கிறார். பிட் நோட்டீஸில்கூட சௌமியாவின் படம் அச்சிடாமல் பிரசாரம் நடப்பதால் கடுப்பான உள்ளூர் இளைஞர்கள் சிலர், ‘‘எங்க வேட்பாளரைக் கண்டா வரச் சொல்லுங்க...’’ என்று சமூக வலைதளங்களில் கலாய்த்துவருகிறார்கள்.

‘‘இன்ப அதிர்ச்சி காத்திருக்கு!’’

உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டாலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 75 வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கிறார்கள். இதையறிந்த விஜய் தரப்பு, ‘‘வெற்றியோ தோல்வியோ... களத்துல இறங்குறதுதான் முக்கியம். தேர்தல்ல ஜெயிக்குறவங்களை நேர்ல அழைச்சு, எதிர்பார்க்காத பரிசு தருவேன். அதுக்காக ஒருவேளை தேர்தலில் தோக்குறவங்க கவலைப்பட வேண்டாம். அவங்களுக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கு’’ என்றதாம். இதையடுத்து, வழக்கத்தைவிட உற்சாகமாக வேலைபார்க்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்!

உள்ளாட்சி உய்யலாலா!

‘‘என் வாக்கைப் போட்டே ஆகணும்!’’

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சிங்காடிவாக்கம் கிராம ஊராட்சியைச் சேர்ந்த 30 வயதான பார்வதி, அக்டோபர் 6-ம் தேதியன்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கச் சென்றிருக்கிறார். அவரின் வாக்கு ஏற்கெனவே போடப்பட்டிருப்பதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்க... அதிர்ச்சியடைந்த பார்வதி, அங்கிருந்த அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து, 49-பி படிவத்தை இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கி, தனது வாக்கை சேலஞ்ச் ஓட்டாகப் பதிவுசெய்தார். நடிகர் விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் வரும் காட்சிகளைப்போல போராட்டத்துக்குப் பின்னர் பார்வதி வாக்களித்தது, அந்தப் பகுதி மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு