Published:Updated:

அறிவாலயம் எங்களை மதிக்கவே இல்லை! - கைவிட்ட ஸ்டாலின்... கதறும் காங்கிரஸ்...

ஸ்டாலின் - அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - அழகிரி

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021

அறிவாலயம் எங்களை மதிக்கவே இல்லை! - கைவிட்ட ஸ்டாலின்... கதறும் காங்கிரஸ்...

ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2021

Published:Updated:
ஸ்டாலின் - அழகிரி
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின் - அழகிரி

உள்ளாட்சித் தேர்தலுக்கான சீட் பங்கீடு மல்லுக்கட்டுகள் தொடங்கிவிட்டன. ஒருபுறம் உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றப் படியேறியிருக்கிறது அ.தி.மு.க. மற்றொருபுறம், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் தங்களுக்குச் சாதகமாக சீட் பங்கீடு கேட்கும் நிலையில் சற்றும் இறங்கிவராமல் பிடிவாதம் பிடிக்கிறது தி.மு.க. என்ன நடக்கிறது அரசியல் களத்தில்?

நடைபெறவிருக்கும் ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க கூட்டணியில் 20 சதவிகித இடங்களை எதிர்பார்க்கிறது காங்கிரஸ் கட்சி. இந்தநிலையில்தான், “அறிவாலயம் எங்களை மதிக்கவே இல்லை” என்ற புலம்பலுடன் நம்மிடம் கொட்டித் தீர்த்தார்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர்... ‘‘உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சிக்கென தனிப்பட்ட வாக்குவங்கி இருக்கிறது. திருநெல்வேலி, தென்காசி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ இருக்கிறார். கட்சிக்கென செல்வாக்கு இருப்பதால், மறைமுகத் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில், இரண்டு பதவிகளை எதிர்பார்க்கிறோம். அதேபோல, மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர் பொறுப்புகளிலும் 20 சதவிகித இடங்களை காங்கிரஸுக்கு அளிக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. ஆனால், அறிவாலயம் எங்களை மதிக்கவே இல்லை. தேர்தலைச் சந்திக்கும் 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் ஓர் இடம் ஒதுக்குவதற்குக்கூட முரண்டுபிடிக்கிறார்கள்.

சீட் பங்கீடு தொடர்பாக தி.மு.க தலைவர்களிடம் பேசினால், மாவட்டச் செயலாளர்களிடம் பேசும்படி சொல்லிவிட்டார்கள். பேச்சுவார்த்தைக்குச் சென்றால், தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் அவமானப்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்கள் உள்ளன. இவற்றில் இரண்டு கவுன்சிலர் இடங்களை மட்டும்தான் கேட்டோம். அதற்கு தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர்கள், ‘ஒரு கவுன்சிலர் இடம்கூட தர முடியாது. விழுப்புரத்தில் பொன்முடியிடம் கேட்கவேண்டியதுதானே, அவர் ஏதும் சீட் தந்தாரா?’ என்று நக்கலடிக்கிறார்கள். இதேநிலைதான், ஒன்பது மாவட்டங்களிலும் நிலவுகிறது.

அறிவாலயம் எங்களை மதிக்கவே இல்லை! - கைவிட்ட ஸ்டாலின்... கதறும் காங்கிரஸ்...

இந்த விவகாரம் விஸ்வரூபமடைந்ததால் கட்சிப் பெயர், சின்னம் இல்லாமல் தேர்தலைச் சந்திக்கும் 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்கள், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்குச் சுயேச்சையாக களமிறங்கச் சொல்லிவிட்டார் கே.எஸ்.அழகிரி. ‘சொந்த பலம் இருக்குற நம்ம கட்சிக்காரங்க ஜெயிச்சு வாங்க. யாரை நம்பியும் நாம இருக்க வேண்டாம்’ என்று காங்கிரஸ் மாவட்ட கமிட்டி தலைவர்களுக்கு அவர் ஆஃப் தி ரிக்கார்டாக அறிவுறுத்தியிருக்கிறார். அதேபோல, 28 மாவட்டங்களில் காலியாக இருக்கும் 106 கிராம ஊராட்சித் தலைவர், 630 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் எங்கள் கட்சியினர் நேரடியாகக் களமிறங்கப் போகிறார்கள். இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றால்தான், கிராமப்புறங்களில் கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும். ஆனால், அதற்கு கூட்டணிக் கட்சியான தி.மு.க-வே தடையாக இருக்கிறது. அதையும் மீறி நாங்கள் செல்வாக்கை நிரூபிப்போம்’’ என்று குமுறினார்கள்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இதே பிரச்னைதான் நிலவுகிறது என்கிறார்கள் சிறுத்தைகள் வட்டாரத்தில். உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் ஏழு வட மாவட்டங்களில் பட்டியல் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் தங்களுக்கு சீட் ஒதுக்கும்படி கேட்கிறது வி.சி.க. ஆனால், அதற்கும்கூட தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மறுப்பதால், வி.சி.க-வினர் சீற்றமடைந்திருக்கிறார்கள். இதனால், காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதுபோலவே கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு நேரடியாக கட்சியினரைக் களமிறக்க ஆலோசித்துவருகிறதாம் வி.சி.க தலைமை. அதேவேளையில், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க ஆகியவை சீட் பங்கீடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தையே தொடங்கவில்லை.

அறிவாலயம் எங்களை மதிக்கவே இல்லை! - கைவிட்ட ஸ்டாலின்... கதறும் காங்கிரஸ்...

பிரதிநிதித்துவம் கேட்கும் கூட்டணிக் கட்சியினரை தி.மு.க சமாதானப்படுத்தி அரவணைக்குமா... அல்லது கழற்றிவிடுமா என்பது அடுத்தடுத்த நாள்களில் தெரிந்துவிடும்!

“கொடுப்பதைக் கொடுங்கள்!”

அ.தி.மு.க கூட்டணியில் ஏற்கெனவே பா.ம.க தனித்துப் போட்டியிடும் நிலையில், மற்ற தோழமைக் கட்சிகளுடன் இட ஒதுக்கீடு தொடர்பாக பிரச்னை ஏதுமில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் ஆகியோர், ‘‘எங்களுக்கு இந்த ஒன்பது ஊரக உள்ளாட்சித் தேர்தல் பெரிய விஷயமல்ல. அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் எத்தனை இடங்களை ஒதுக்க விரும்புகிறார்களோ, அதை ஒதுக்கட்டும். நகராட்சி, மாநகராட்சி தேர்தலில்தான் உரிய பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்கிறோம்’’என்று சொல்லிவிட்டார்களாம்.